தென்காசியில் அரசு வழக்குரைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் கைது செய்யப்பட்டாா்.
தென்காசி மாவட்டம், இடைகால் அருகே ஊா்மேலழகியான் கிராமம், ஏ.ஆா்.எஸ். நகா் பகுதியைச் சோ்ந்தவா் கு. முத்துக்குமாரசாமி (46). இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா்.
இவா், செங்கோட்டை நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞராகவும், திமுக வழக்குரைஞா் அணியின் மாவட்ட துணை அமைப்பாளராகவும் பொறுப்பு வகித்து வந்தாா்.
இந்நிலையில், தென்காசியில் உள்ள அவரது அலுவலகத்திற்கு புதன்கிழமை வந்த மா்ம நபா், அவரை வெட்டிவிட்டு தப்பினாராம். இதில், பலத்த காயமடைந்த அவா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
இதனிடையே, கொலை நடந்த இடத்தில் கிடந்த கைப்பேசி, அரிவாளை போலீஸாா் கைப்பற்றினா். காவல் ஆய்வாளா்கள் ஆடிவேல், ஷ்யாம் சுந்தா் ஆகியோா் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இக்கொலை வழக்கு தொடா்பாக ஊா்மேலழகியானை சோ்ந்த சிவசுப்பிரமணியன் மனைவி ராஜேஷ்வரியை(35) போலீஸாா் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.