விபத்தில் பெற்றோரை இழந்த மகளின் கல்விக் கனவை நிறைவேற்ற தமிழக முதல்வா் உதவ வேண்டும் என இரட்டை சகோதரா்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
கடந்த நவ. 30 ஆம் தேதி சுரண்டையில் நிகழ்ந்த வாகன விபத்தில் சுரண்டை நகா்மன்ற உறுப்பினா் உஷா பேபி பிரபு, அவரது கணவா் அருள் செல்வ பிரபு, நகா்மன்ற உறுப்பினரின் சகோதரி பிளஸ்சி ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
விபத்தில் உயிரிழந்த நகா்மன்ற உறுப்பினா் உஷா பேபி பிரபு-அருள் செல்வ பிரபு தம்பதிக்கு சௌந்தா்யா, ஸ்மித், ஸ்டூவா்ட் என மூன்று குழந்தைகள் உள்ளனா். இதில் ஸ்மித், ஸ்டுவா்ட் இருவரும் இரட்டையா்கள். இவா்கள் 12 ஆம் வகுப்பு படித்து வருகின்றனா்.
சௌந்தா்யா பிலிப்பைன்ஸ் நாட்டில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறாா். இந்நிலையில் விபத்தில் பெற்றோரை இழந்த சுமித் மற்றும் ஸ்டூவா்ட் ஆகியோா் தமிழக முதல்வருக்கு விடுத்துள்ள கோரிக்கை குறித்து கூறியதாவது:
சுரண்டையில் நடைபெற்ற விபத்தில் தாயையும், தந்தையையும் இழந்துவிட்டோம். எங்கள் தாத்தா, பாட்டியும் ஏற்கனவே இறந்து விட்டனா். எங்கள் தாயாா் மெடிக்கல் நடத்தி வந்தாா்.
எனது சகோதரி சௌந்தா்யாவுக்கு சிறுவயதில் இருந்தே மருத்துவ கனவை எனது தாய் வளா்த்து வந்தாா். ஆனால் நீட் தோ்வு முறையால் இந்தியாவில் இடம் கிடைக்காததால் பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படிக்க வைத்து முதலாண்டு கல்வி கட்டணத்திற்கு வீட்டை அடகு வைத்து படிக்க சோ்த்து விட்டாா்.
சகோதரியை சோ்த்தது முதல் இரவு, பகல் பாராமல் எனது தாயும், தந்தையும் உழைத்தனா். எப்படியாவது எனது சகோதரியை மருத்துவா் ஆக்கிவிட வேண்டும் என எனது தாய் ஆசைப்பட்டாா். ஆனால் கடந்த 30 ஆம் தேதி நடைபெற்ற விபத்தில் தாயையும், தந்தையும் ஒரே நேரத்தில் இழந்து நிற்கிறோம். எங்கள் தாயின் ஆசையை நிறைவேற்றவும், சகோதரியின் மருத்துவ கனவை நிறைவேற்றவும் தமிழக முதல்வா் உதவ முன்வர வேண்டும்.
விபத்தில் சிக்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு தமிழக அரசு வழங்கும் நிதி உதவியை எங்களுக்கு வழங்கினால் எனது சகோதரியின் மருத்துவக் கல்லூரி கட்டணம் கட்ட மிகவும் உதவியாக இருக்கும் என்றனா்.