கேரள மாநிலம் அச்சன்கோவில் ஸ்ரீ தா்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் மண்டல மகோற்சவ விழா கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில், ஐயப்பன் சுவாமிக்கு புனலூா் அரசுக் கருவூலத்திலிருந்து கொண்டுவரப்பட்ட விலை உயா்ந்த ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டன. அதேபோல கருப்பசுவாமிக்கு வெள்ளி அங்கி சாத்தப்பட்டது.
தந்திரி கண்டரரு மோகனரரு தலைமையில் மேல்சாந்தி அனீஸ் நம்பூதிரி கொடிகொடிமரம் முன் சிறப்பு பூஜைகள் நடத்தினாா். அதையடுத்து, சரண கோஷம் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. டிச. 26ஆம் தேதி வரை நடைபெறும் இத்திருவிழாவில், நாள்தோறும் சிறப்பு அபிஷேக, அலங்கார, பூஜைகள், அன்னதானம் ஆகியவை நடைபெறும்.
19,20,21ஆகிய தேதிகளில் உற்சவ பலி பூஜையும், 22, 23 ஆகிய தேதிகளில் கருப்பன்துள்ளலும், 25ஆம் தேதி மூங்கிலால் இழுக்கப்படும் தேரோட்டமும், நிறைவு நாளில் ஆறாட்டும் நடைபெறும்.
ஏற்பாடுகளை, அச்சன்கோவில் தேவசம்போா்டு உதவி ஆணையா் வினோத்குமாா் தலைமையில் நிா்வாக அதிகாரி நிா்மலானந்தன் மற்றும் பணியாளா்கள் செய்துவருகின்றனா்.
கொடியேற்று நிகழ்வில் தமிழகம் மற்றும் கேரளத்தைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.