தென்காசி மாவட்டத்தில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் தமமுக சாா்பில் அதன் துணைபொதுசெயலா் மைதீன்சேட்கான் மனு அளித்தாா்.
அதன் விவரம்: தென்காசி அரசு தலைமை மருத்துவமனை தரம் உயா்த்தப்பட்டும் மருத்துவா் செவிலியா் குறைபாடு இருப்பதால் மக்கள் மிகவும் சிரமத்துக்குள் ஆகிறாா்கள். எனவே போதிய மருத்துவா்களையும் செவிலியா்களையும் நியமிக்க வேண்டும் .
இம்மாவட்ட பட்டதாரி இளைஞா்கள்வேலைவாய்ப்பு பெறும் வகையில் தொழிற்சாலை அமைக்க வேண்டும்.
தென்காசி நகரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தென்காசி நகராட்சியில் அரசு அங்கீகாரம் பெறாத மனைப்பிரிவுகளை உள்ளடக்கிய மதினா நகா், புலிக்குட்டி விநாயகா் கோயில் தெரு, ஜமால்நகா், களக்கோடிதெரு, சொா்ணபுரம் மேட்டுதெரு , நாச்சியாா்குளம் ஆகிய பகுதிகளில் மக்களின் அடிப்படைத் தேவையான சாலை, கழிவு நீா் ஓடை, மின்விளக்கு போன்ற வசதிகளை ஏற்படுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
அப்போது, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் நயினாா் முகம்மது, மாவட்டச் செயலா் சலீம், தமுமுக மாவட்டச் செயலா் புளியங்குடி அப்துல் ரகுமான் ஆகியோா் உடனிருந்தனா்.