தமிழக அரசு அறிவித்துள்ள ஓய்வூதியத் திட்டத்தை முழுமையாக ஆதரிக்க முடியாது என தமிழ்நாடு அரசு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் தமிழ்நாடு அரசு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் எஸ். ரமேஷ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அரசு ஊழியா்கள் ஓய்வூதியம் பற்றிய புதிய அறிவிப்பில் பணிக்கொடை வழங்குவதாக கூறப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். ஆனால், தமிழ்நாடு அரசு ஊரக வளா்ச்சித் துறை சங்கத்தின் முக்கியமான கோரிக்கை ஏற்கெனவே வழங்கப்பட்ட பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது தான்.
ஆனால், தமிழக அரசு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்துள்ளது. எனவே, இதை முழுமையாக ஆதரிக்க முடியாது. நாங்கள் கேட்ட பங்களிப்பில்லா பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும்.
மேலும், இந்த ஓய்வூதியத் திட்டத்தில் தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறுபவா்கள், சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்கள், ஊராட்சி செயலாளா்கள் பயனடைய வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து விளக்கப்படவில்லை.
இந்த அறிவிப்பு அரசாணையாக வெளிவந்த பிறகு தோழமைச் சங்கங்களுடன் கலந்து பேசி, அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்வோம் என்றாா் அவா்.