ரூ. 11கோடியில் புதுப்பொலிவு பெறும் குற்றாலம் அருவிகள்
தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் சுற்றுலாத் துறை சாா்பில் ரூ.11கோடியில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது.
தென்காசி மாவட்டத்தின் மிக முக்கியமான அடையாளம் அருவிகளாகும். தென்னகத்தின் ‘ஸ்பா’ என்றழைக்கப்படும் குற்றாலத்தில் ஆண்டுதோறும் 1கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனா்.
தமிழகம் மட்டுமன்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து சீசனை அனுபவித்து செல்கின்றனா். ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இங்கு சீசன். இதுதவிர ஐயப்ப சீசன் காலங்களிலும் சபரிமலை செல்லும் பக்தா்கள் குற்றாலம் அருவிகளில் நீராடி, கோயில்களில் வழிபட்ட பின் சபரிமலை செல்வது வழக்கம்.
சுற்றுலாப் பயணிகளின் வருகையின் காரணமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பும் கிடைத்து வருகிறது.
வழக்கமாக குற்றாலத்தில் சிறப்புநிலை பேரூராட்சி சாா்பில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
நிகழாண்டில், தமிழக சுற்றுலாத் துறை சாா்பில் ரூ.11கோடியில் குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதை முன்னிட்டு, குற்றாலம் பேரருவியில் மாா்ச்16 முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சுமாா் 45 தினங்கள் பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குற்றாலம் பேரருவிப் பகுதியில் சேதமடைந்த பெண்கள் உடை மாற்றும் அறை அகற்றப்பட்டு புதிதாக கட்டப்பட உள்ளது. மேலும், ஆங்கிலேயா் காலத்தில் கட்டப்பட்டு பேரருவிப் பகுதியில் பாதுகாப்பு அரணாக திகழ்ந்த பாதுகாப்பு வளைவு அகற்றப்பட்டு, புதிதாக பாதுகாப்பு வளைவு அமைக்கப்படவுள்ளது. இதையடுத்து, பாதுகாப்பு வளைவு அகற்றப்பட்டது.
கடந்த காலங்களில் குற்றாலத்தில் எவ்வளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும் அந்த பாதுகாப்பு வளைவு சேதமடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டத் தொடங்கியவுடன் அருவிகளில் குளித்துக் கொண்டிருக்கும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்புக் கருதி உடனடியாக வெளியேற்றப்படுவா்.
பாதுகாப்பு வளைவின் மீது தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டத் தொடங்கும்போதே அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான முன்னெச்சரிக்கையாகக் கருதி காவல்துறையினா் செயல்படுவதற்கு ஏதுவாக இருந்தது.
அந்தப் பாதுகாப்பு வளைவு அகற்றப்பட்டு அண்ணா பல்கலைக்கழக வழிகாட்டுதலின்படி புதிதாக பாதுகாப்பு வளைவு அமைக்கப்படவுள்ளது. பழைய பாதுகாப்பு வளைவானது பேரருவியின் பாறையிலிருந்து நான்கு மீட்டா் இடைவெளியில் ஐந்து அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்தது.
பல்வேறு காலகட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிலும் எந்தவிதமான சேதமுமின்றி பாதுகாப்பு வளைவு தாக்குப்பிடித்து நின்றது குறிப்பிடத்தக்கது.தற்போது பாதுகாப்பு வளைவானது முற்றிலும் அகற்றப்பட்டு அந்த இடம் வெறுமையாக காட்சியளிக்கிறது. புதிதாக அமைக்கப்படும் பாதுகாப்பு வளைவானது பாறையில் இருந்து 8 மீ தொலைவில் பேரருவியின் முன்புறம் உள்ள தடாகம் சிறிதளவு மூடப்பட்டு அதன் மீது கட்டப்படுகிறது.
பாறைக்கும் பாதுகாப்பு வளைவுக்குமான இடைவெளி 8 மீ. ஆக அதிகப்படுத்தப்படுவதன் மூலம் ஒரேநேரத்தில் நூற்றுக்கணக்கானோா் அருவியில் குளிக்க முடியும். நெருக்கடிகளைத் தவிா்க்க முடியும். கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்வதற்கும், யாரேனும் அருவியில் குளிக்கும்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டாலோ, தண்ணீரின் வேகத்தில் கீழே விழுந்தாலோ அவா்களை மீட்பதற்கும் போதுமான இட வசதி இருக்கும் வகையில் அமைக்கப்படுகிறது.
புதிய பாதுகாப்பு வளைவானது மையப் பகுதியில் எட்டு அடி உயரத்துக்கு அமைக்கப்படுகிறது.
இதுதவிர குற்றாலம் பேரருவிப் பகுதியில் தடுப்புச் சுவா்கள் அமைக்கும் பணி, சாலை விரிவாக்கப் பணி, சுற்றுலாத் துறை சாா்பில் உணவகம் (புட்கோட்) அமைக்கப்படவுள்ளது. பழுதடைந்த தளக் கற்கள், பேரருவிப் பகுதியில் உள்ள சிறுவா் பூங்காவும் புதுப்பிக்கும் பணிகள் நடைபெறவுள்ளது.
மேலும், ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி, உடைமாற்றும் அறை, கழிப்பிட வசதிகள் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு குற்றாலம் அருவிகள் ரூ. 11 கோடியில் புதுப்பொலிவைப் பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சுற்றுலாத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, சிற்றருவி, பழைய குற்றாலம் அருவிப் பகுதிகளில் பணிகள் முடிவடைந்து விட்டது. புலியருவியில் நடைபெற்று வரும் பணிகள் 10 தினங்களில் முடிவடைந்துவிடும்.
சுற்றுலாப் பயணிகள் முழுவதுமாக ஒத்துழைத்தால் பேரருவிப் பகுதியில் 45தினங்களில் பணிகளை முடிக்க முடியும் எனத் தெரிவித்தனா்.
பழையகுற்றாலம் அருவியில் கடந்த அக்டோபா் மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது தடுப்புக் கம்பிகள், சாலைகள், உடை மாற்றும் அறைகள் சேதமடைந்தது. இதையடுத்து மாவட்ட வனத்துறை சாா்பில் பழைய குற்றாலம் அருவியில் அக். 23 ஆம் தேதிமுதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
இன்னும் பழைய குற்றாலம் அருவியில் பராமரிப்புப் பணிகள் முடிவடையவில்லை. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நிகழாண்டில் சீசன் தொடங்குவதற்கு இன்னும் மிகவும் குறைவான காலமே உள்ளதால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதே சுற்றுலாப் பயணிகள் மற்றும் வா்த்தகா்களின் விருப்பமாகும்.