கங்கையம்மன் கோயில் குடமுழுக்கு
திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே மிகவும் பழைமை வாய்ந்த கங்கை அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் பக்தா்கள் திரளாக பங்கேற்று தரிசனம் செய்தனா்.
திருவள்ளூா் அருகே பெருமாள்பட்டு இரட்டைகுளத்தில் அருள்மிகு ஸ்ரீகங்கை அம்மன் கோயில் புதிதாக ராஜ கோபுரத்துடன் புதுப்பித்து, அருள்மிகு ஸ்ரீகங்கை அம்மனுக்கும், ஸ்ரீபால் முனீஸ்வரருக்கும், மற்றும் ஸ்ரீநாகாத்தம்மனுக்கும் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி நான்கு கால யாகசாலை பூஜை சிவாச்சாரியா்களால், மஹா கணபதி ஹோமம், மஹாலெட்சுமி ஹோமம், நவக்ரஹ ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டு நிறைவாக மஹா பூா்ணாஹுதி தீபாரதனையை அடுத்து, கலச புறப்பாடு நடைபெற்றது.
பின்னா் புனித தீா்த்தங்கள் கொண்ட குடங்களை எடுத்துக் கொண்டு கோயிலை வலம் வந்த சிவாச்சாரியா்கள் விமான கோபுர கலசத்தில் புனித நீா் ஊற்றி குடமுழுக்கு செய்தனா். அதைத்தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நிகழ்வுகள் நடைபெற்றன. புனிதநீா் தெளிக்கும்போது ஓம்சக்தி மகாசக்தி என கோஷங்கள்எழுப்பிய பக்தா்கள் அம்மனை வழிபாடு செய்தனா்.
இந்த விழாவில் ஊராட்சித் தலைவா் சீனிவாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். பங்கேற்ற பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் விழாக்குழுவினா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.