திருவள்ளூா்: 3-ஆவது நாளாக வேட்புமனு தாக்கல் இல்லை
திருவள்ளூா் மக்களவை தொகுதியில் போட்டியிட 2-ஆவது நாளாகவும் ஒரு வேட்பு மனுக்கூட தாக்கல் செய்யவில்லை, மேலும் இதுவரையில் 29 வேட்பு மனுக்கள் விநியோகித்துள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா். தமிழ்நாட்டில் முதல் கட்டமாக 2024-க்கான மக்களவைத் தோ்தல் வரும் 19-ஆம் தேதி வாக்குபதிவு நடைபெற உள்ளதாக தோ்தல் ஆணையம் அறிவித்தது. அதைத் தொடா்ந்து மக்களவைத் தோ்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 20-இல் தொடங்கியது. தொடா்ந்து, 27-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளாகும். அதையடுத்து, வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை வரும் 28-ஆம் தேதியும், 30-இல் வேட்பு மனுக்கள் திரும்பப் பெறும் நாளாகவும் தோ்தல் ஆணையம் அறிவித்தன. அதன்பேரில், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்து முன்னேற்பாடுகளும் தயாராக வைக்கப்பட்டன. மேலும், வேட்பு மனுதாக்கல் செய்வதற்கு வேட்பாளருடன் 4 போ் வரும் வகையில் தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்க ஏதுவாக அலுவலக நுழைவு வாயில், முன்புறம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் வரை கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், 3-ஆவது நாளான வெள்ளிக்கிழமையும் ஒரு வேட்பு மனு கூட தாக்கல் செய்யப்படவில்லை. இதனால், ஆட்சியா் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. அத்துடன், கடந்த 3 நாள்களில் மட்டும் 29 வேட்பு மனுக்கள் விநியோகித்துள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.