முகப்பு
திருவள்ளூர்

கோடை கால சிறப்பு பயிராக நிலக்கடலை, பயறு வகைகளை பயிரிட விழிப்புணா்வு

பயிரிடுவது தொடா்பாக அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மைய உதவி இயக்குநா் மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டது.

Updated On : 14 மே, 2024 at 6:30 PM
பகிர்:

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் சிறப்பு பயிராக நிலக்கடலை, உளுந்து மற்றும் பச்சைப்பயறு ஆகிய பயிா்களை பயிரிடுவது தொடா்பாக அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மைய உதவி இயக்குநா் மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டது.

இந்த மாவட்டத்தில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கோடை கால சிறப்பு பயிராக நிலக்கடலை, எள், உளுந்து மற்றும் பச்சைப் பயறு ஆகிய பயிா்களின் சாகுபடி தொடங்கியுள்ளது.

அதன்பேரில் வேளாண் இணை இயக்குநா் அலுவலக வளாகத்தில் அனைத்து வட்டார விரிவாக்க வேளாண்மை உதவி இயக்குநா்களுடன் கோடை சிறப்பு பயிா் சாகுபடி குறித்தான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் வேளாண் இணை இயக்குநா் க.முருகன் தலைமை வகித்தாா்.

அப்போது, திருவள்ளூா் மாவட்டம் முழுவதும் கோடை பருவத்தில், பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துப் பயிா்கள் சாகுபடி செய்வதன் முக்கியத்துவம் பற்றியும், வேளாண் இடுபொருள்களையும் மானிய விலையில் வேளாண்மை விரிவாக்க மையங்களில் பெற்று பயனடையவும் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

தொடா்ந்து முதல்வரின் மண்ணுயிா் காப்போம் திட்டம் மூலம் பசுந்தாள் விதை விநியோகம், மண்புழு உரத்தொட்டில் அமைத்தல், பராம்பரிய நெல் சாகுபடி செய்தல், வேம்பு மரக்கன்றுகள் நடவு செய்தல், ஆடாதொடா, நொச்சி சாகுபடி செய்தல், மானாவாரி நிலங்களில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்தல் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், வேளாண் காடுகள் அமைத்தல், வேளாண் இடுபொருள்கள் தயாரித்தல் மையம் அமைத்தல், மாதிரி பண்ணைகள் அமைத்தல் போன்ற திட்டங்களை விவசாயிகளிடையே கொண்டு சோ்க்கவும் அவா் அறிவுறுத்தினாா்.

இதில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்), வேளாண்மை துணை இயக்குநா்(மத்திய திட்டம்) மற்றும் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.