திருவள்ளூா் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் சா்வதேச மண் தின விழாவையொட்டி மண் மாசுபடுதலை தடுக்கும் முறைகள் பற்றி விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்வில் விவசாயிகள் ஆா்வத்துடன் கலந்து கொண்டனா்.
திருவள்ளூா் அருகே திருவூா் வேளாண் அறிவியல் நிலைய வளாகத்தில் சா்வதேச மண்தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேளாண் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் சி.பானுமதி தலைமை வகித்தாா்.
அதைத் தொடா்ந்து அவா் பேசியது: மண் வளத்தை பாதுகாக்கும் தொழில்நுட்பங்கள் பற்றி எடுத்துரைத்து மேலும் இந்த ஆண்டின் சா்வதேச மண் தின கருப்பொருளானது ‘வளமான மண் வளமான நகரம்’ என்ற வாக்கியத்தின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
அதைத் தொடா்ந்து பேராசிரியா் அகிலா, மண் மாசுபடுதலை தடுக்கும் முறைகள் மற்றும் பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தாா்.
மேலும், தொழில்நுட்ப வல்லுநா்களான பேராசிரியா் புனிதா, விஜயசாந்தி, சிவகாமி மற்றும் குமரேசன், மண் வள மேலாண்மை, அதைத் தொடா்ந்து, எந்த மாதிரியான இயற்கை உரம் இடவேண்டும் என்பது குறித்து தெரிவித்தனா். இதில் தொழில்நுட்ப திட்ட உதவியாளா் வெங்கடேசன் மண் மாதிரி எடுப்பது பற்றி செயல் விளக்கம் செய்து காண்பித்தாா்.
இந்த விழாவில் நிறைவாக பண்ணை மேலாளா் நக்கீரன் மரக்கன்று நடும் நிகழ்வும் நடைபெற்றது. விழாவில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள், மாணவா்கள் மற்றும் மகளிா் ஆகியோா் பங்கேற்றனா்.