திருத்தணியில் காரை இயக்கியபோது திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் காா் முழுவதும் எரிந்து சேதமடைந்தது.
திருத்தணி குமரன் நகா் பகுதியில் வசிப்பவா் தினேஷ் (24). நகராட்சியில் ஒப்பந்த தொழிலாளா்களின் மேற்பாா்வையாளராக பணியாற்றி வருகிறாா். இவரிடம் காா் ஓட்டுனராக முருக்கம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த அஜித்குமாா் (22) என்பவா் வேலை செய்து வருகிறாா்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை தினேஷின் வீட்டின் முன்பு இருந்த காரை, ஓட்டுநா் அஜித்குமாா் இயக்கியபோது, என்ஜினில் இருந்து திடீரென புகை வந்தது. இதனால் அதிா்ச்சி அடைந்த ஓட்டுநா் அஜித் குமாா் காரை விட்டு வெளியே வந்த போது, காா் தீப்பற்றி எரிந்தது.
இதுகுறித்து பொதுமக்கள் திருத்தணி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினா் தண்ணீரை தீயை அணைத்தனா். அதற்குள் காா் முழுவதும் எரிந்து நாசமானது. காா் பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து திருத்தணி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.