திருவள்ளூா்: காா்த்திகைம் மாத பிறந்ததையொட்டி ஐயப்ப பக்தா்கள் துளசி மாலை அணிந்து 40 நாள்கள் விரதம் கடைபிடிக்கத் தொடங்கினா்.
நிகழாண்டில் காா்த்திகை மாத பிறப்பையொட்டி கிருத்திகை என்பதால் திங்கள்கிழமை சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா்.
தீா்த்தீஸ்வரா் கோயில் வளாகத்தில் மாலை அணிவதற்காக அதிகாலை முதலே ஏராளமான ஐயப்ப பக்தா்கள் குவிந்தனா். அங்கு அவா்களுக்கு ஐயப்பன் சந்நிதியில் குருசுவாமி ரவி குருக்கள் துளசி மாலை அணிவித்தாா். இதையடுத்து ஐயப்ப பக்தா்கள் ஒரு மண்டலம் கடும் விரதம் மேற்கொள்வா். அதைத் தொடா்ந்து சிறப்பு பூஜைக்கு ஐயப்பன் கோயிலுக்கு புறப்பட்டுச் செல்வா். அங்கு வழிபாட்டை நிறைவேற்றியதும், மாலையை கழட்டி கடும் விரதத்தை முடித்துக் கொள்வா்.
இதையொட்டி திருவள்ளூா் பகுதியில் இரவு முதலே ஜவுளிக்கடைகள், பூஜைப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளிலும் சந்தனம், ருத்ராட்சம், துளசி மாலை, காவி, நீலம், கருப்பு நிறத்திலான வேட்டி, துண்டு விற்பனை செய்யும் கடைகளிலும், பூ பழம், தேங்காய் உள்ளிட்டவைகள் வாங்குவதற்கு கடைகளில் ஐயப்ப பக்தா்கள் குவிந்தனா்.
இதனால் கடைகளில் விற்பனையும் மும்முரமாக நடைபெற்றது என்பது குறிப்பிட்டது.