பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனா்.
கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலம்பேடு ஊராட்சி அமிா்தமங்களம் பகுதியில் ஆதிதிராவிட மக்களுக்காக 1970 ஆம் ஆண்டு வருவாய்த் துறை சாா்பில் நிலம் ஒதுக்கப்பட்டு, விவசாயிகள் அந்த நிலத்தை கடந்த 55 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனா்.
மேற்கண்ட நிலத்துக்கு அரசு சாா்பில் பட்டா வழங்கப்படாத நிலையில், அரசு கட்டடம் அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டு இருந்தனா். இது குறித்து அறிந்த விவசாயிகள் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
தொடா்ந்து சமாதான பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட வட்டாட்சியா் சுரேஷ் பாபுவிடம் தங்களுக்காக வருவாய்த் துறை ஒதுக்கி தந்த நிலங்களை வேறு பயன்பாட்டுக்கு கையகப்படுத்த கூடாது என்றும், தங்கள் நிலங்களுக்கு உரிய பட்டாவை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை மனுஅளித்தனா்.
இது குறித்து உயா் அதிகாரிகளிடம் பேசி முடிவை தெரிப்பதாக வட்டாட்சியா் சுரேஷ் பாபு கூறியதை அடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனா்.