முகப்பு
வணிகம்

கர்நாடகத்தில் ரூ. 2,500 கோடியில் சிமென்ட் தொழிற்சாலை

கரூர், பிப்.19: கர்நாடக மாநிலத்தில் ரூ.2,500 கோடியில் புதிய சிமென்ட் ஆலையை நிறுவ செட்டிநாடு சிமென்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. 2015-ம் ஆண்டுக்குள் ராஜஸ்தான், இமாசலப் பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டி

Updated On : 22 ஜூலை, 2025 at 10:07 AM
பகிர்:

கரூர், பிப்.19: கர்நாடக மாநிலத்தில் ரூ.2,500 கோடியில் புதிய சிமென்ட் ஆலையை நிறுவ செட்டிநாடு சிமென்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

2015-ம் ஆண்டுக்குள் ராஜஸ்தான், இமாசலப் பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்த இந்நிறுவனம்  திட்டமிட்டுள்ளது.

கரூர் மாவட்டம் புலியூர், திண்டுக்கல் மாவட்டம் கரிகாலி மற்றும் அரியலூரில் உள்ள செட்டிநாடு சிமென்ட் தொழிற்சாலைகளை செய்தியாளர்கள் பார்வையிட்டபோது அந் நிறுவனத்தின் தலைவர் சி.சுதாகர் மற்றும் வர்த்தக மேம்பாட்டுப் பிரிவு தலைவர் எம்.சி.கினி ஆகியோர் கூறியது:

கர்நாடக மாநிலம் குல்பர்காவில் உள்ள கல்லூரில் நிறுவப்படும் ஆலை மார்ச் 2012-ல் உற்பத்தியைத் தொடங்கும். 2014-ல் இதன் உற்பத்தி 25 லட்சம் டன்னாக உயரும். மகாராஷ்டிரத்தில் அரவை நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் குல்பர்காவில் சுண்ணாம்புக் கற்கள் அதிகம் இருப்பதால் அடுத்த 25 ஆண்டுகளுக்கு போதுமானதாக இருக்கும். இங்கு 3 தொழிற்சாலை பிரிவுகள் உருவாக்கப்படும். இதற்குத் தேவையான 150 மெகாவாட் மின் உற்பத்தியையும் தயாரிக்க உள்ளோம். இங்கு ஒரு கோடி டன் சிமென்ட் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது 3 தொழிற்சாலைகளிலும் சேர்த்து 82 லட்சம் டன் சிமென்ட் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் விரிவுபடுத்தப்பட்டு அடுத்த சில ஆண்டுகளுக்குள் ஒரு கோடி டன்னாக உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2020-ல் 3 வட மாநிலங்களில் உற்பத்தி வசதிகளை ஏற்படுத்தி 2.5 கோடி டன் முதல் 30 கோடி டன் சிமென்ட் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இந்நிலையை எட்டும் நேரத்தில் இந்தியாவில் உள்ள 5 பெரிய  நிறுவனங்களுள் ஒன்றாக செட்டிநாடு சிமென்ட் நிறுவனமும் விளங்கும்.

தமிழ்நாட்டில் தற்போதுள்ள 3 தொழிற்சாலைகளிலும் சேர்த்து 75 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதை அடுத்த ஆண்டுக்குள் 105 மெகாவாட்டாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது,

செட்டிநாடு சிமென்ட் நிறுவனம் நேரடியாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கும் மறைமுகமாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கும் வேலை கொடுத்து வருகிறது. கரிகாலியில் மேலும் ரூ. 600 கோடி முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ராஜஸ்தான், இமாசலப் பிரதேசம், சத்தீஸ்கர் போன்ற இடங்களில் தொழிற்சாலை தொடங்க தேவையான 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ஏக்கர் வரை நிலம் தேவை. இதைக் கண்டறிய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதற்காக ரூ. 3,100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சிமென்ட் உற்பத்தியில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் சீனா உள்ளது. நவீன இயந்திரங்களைக் கையாள்வதற்காக ஊழியர்கள்  வெளிநாட்டுக்கு பயிற்சிக்கு அனுப்பப்படுகின்றனர்.

இந்தியாவில் சிமென்ட் உற்பத்தியில் தமிழ்நாடு 3-வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் ஆந்திரமும், 2-வது இடத்தில் மத்தியப் பிரதேசமும் உள்ளன. தயாரிக்கப்படும் சிமென்டில் 70 சதவீதம் அரசு திட்ட பயன்பாட்டுக்காகவும் மீதி உள்ளவை வீடு கட்டவும் பயன்படுத்தப்படுகிறது.

சென்னை சேப்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் புதிய தலைமைச் செயலகத்துக்கு செட்டிநாடு சிமென்டும் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் 160 பெரிய தொழிற்சாலைகளும், 70 சிறிய தொழிற்சாலைகளும் உள்ளன என்றனர் சி.சுதாகர் மற்றும் எம்.சி. கினி.

செட்டிநாடு சிமென்ட் நிறுவனத்தின் துணைத் தலைவர் (என்ஜினீயரிங்) என்.முத்துசாமி, வர்த்தகப் பிரிவு பொது மேலாளர் கே. ரவி நாராயணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →