வணிகம்

பொலிவிழந்து வரும் கரூர் ஜவுளி ஏற்றுமதித் தொழில்

ஜவுளி உற்பத்திக்கான உலக வரைபடத்தில் கரூருக்கு என்றுமே தனி இடம் உண்டு. இங்கிருந்து அமெரிக்கா, தென் அமெரிக்க நாடுகள், ஜப்பான், ஆஸ்திரேலியா, நியுஸிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு வீட்டு உபயோக ஜவுளிப் பொருள்களான திரைச்சீலை, கால் மிதியடிகள், தரை விரிப்புகள், குஷன்கள், கைக்குட்டைகள் உள்ளிட்டவை ஏற்றுமதியாகின்றன.

ஏ. அருள்ராஜ்

ஜவுளி உற்பத்திக்கான உலக வரைபடத்தில் கரூருக்கு என்றுமே தனி இடம் உண்டு. இங்கிருந்து அமெரிக்கா, தென் அமெரிக்க நாடுகள், ஜப்பான், ஆஸ்திரேலியா, நியுஸிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு வீட்டு உபயோக ஜவுளிப் பொருள்களான திரைச்சீலை, கால் மிதியடிகள், தரை விரிப்புகள், குஷன்கள், கைக்குட்டைகள் உள்ளிட்டவை ஏற்றுமதியாகின்றன. இவற்றின் மூலம் ஆண்டுக்கு ரூ.3,000 கோடி அன்னியச் செலாவணி அரசுக்குக் கிடைத்து வந்தது. 2011-க்குப் பின்னர் இந்தத் தொழில் நலிவடையத் தொடங்கியது. காரணம், ஜவுளி உற்பத்திக்கு மூல நிறுவனங்களான சிறு சாய மற்றும் சலவை ஆலைகள் மூடப்பட்டன.

சிறு, குறு சாயப் பட்டறைகளில் இருந்து வெளியேறும் சாயக் கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் நேரிடையாக விவசாய நிலங்களிலும்,அமராவதி ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் கலக்க விட்டதன் விளைவாக விளைநிலங்கள் பாழ்பட்டன.

இதையடுத்து, விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு, இறுதியாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கில், சாயமேற்றும் ஆலைகள், சலவை ஆலைகளில் சுத்திகரிப்பு இயந்திரம் (ஆர்.ஓ பிளான்ட்) இருந்தால் மட்டுமே இயங்க அனுமதிக்க வேண்டும். அவ்வாறு ஆர்ஓ பிளான்ட் இல்லாத பட்டறைகளை மூட மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு நீதிமன்றம் கடந்த 2011-இல் உத்தரவிட்டது.

இதையடுத்து, மாவட்டத்தில் மொத்தம் 487 சாய, சலவைப் பட்டறைகள் இயங்கி வந்த நிலையில், தற்போது 18 சலவை ஆலைகளும், 45 சாயமேற்றும் ஆலைகளும் என மொத்தம் 63 ஆலைகள் மட்டுமே செயல்படுகின்றன.

இதனால், உள்ளூர் சாய, சலவைப் பட்டறைகளை நம்பியிருந்த ஜவுளி ஏற்றுமதியாளர்கள் தங்களது நூல்களுக்கு சாயமேற்ற கரூர் அருகே உள்ள மாவட்டங்களான நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை நோக்கிச் செல்ல வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகினர். உள்ளூரில் 5 கிலோ எடை கொண்ட நூல் கட்டுக்கு சாயமேற்ற ரூ. 200 செலவான நிலையில், தற்போது ரூ. 350-க்கு மேலும் செலவாகிறது. இதனால், குறித்த நேரத்தில் வெளிநாடுகளில் எடுத்த ஆர்டர்களுக்கு ஜவுளியை ஏற்றுமதி செய்ய முடியாமலும், சில நேரங்களில் வெளிநாடுகளில் இருந்து திருப்பி அனுப்பப்படும் ஜவுளிக்கு ஈடுகொடுக்க முடியாமலும் பெரும்பாலான ஜவுளி ஏற்றுமதியாளர்கள் மாற்றுத் தொழிலுக்கு சென்று விடுகிறார்கள்.

இதன் காரணமாக, ஆண்டுக்கு ரூ. 3,000 கோடி அன்னியச் செலாவணியை ஈட்டித் தந்த கரூர் நகரம், தற்போது ரூ. 1,200 கோடி வரை மட்டுமே பெறுவதாக ஏற்றுமதியாளர்கள் கூறுகிறார்கள்.

இதுதொடர்பாக கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் சங்க உறுப்பினர் ஆர். ஸ்டீபன்பாபு கூறியதாவது: வெளி மாவட்டங்களுக்குச் சென்று தற்போது சாயம், சலவை செய்ய வேண்டியுள்ளதால், உற்பத்திச் செலவு அதிகரித்துவிட்டது. போதிய லாபம் கிடைப்பதில்லை. கடந்த இரு மாதங்களுக்கு முன்பு 5 கிலோ எடை கொண்ட ஒரு கட்டு நூல் ரூ. 800 ஆக இருந்தது. இப்போது ரூ. 950 வரை உயர்ந்துவிட்டது. திடீர் நூல் விலை உயர்வு, போதிய சாயப் பட்டறைகள் இல்லாதது எங்களது தொழிலை வெகுவாகப் பாதித்துள்ளது. நான்கு மாதங்களுக்கு முன்பு எடுத்த ஆர்டருக்கு, திடீரென நூல் விலை உயரும் போது, வாடிக்கையாளருக்கு முன்னதாகப் பேசிய விலைக்கு மட்டுமே ஜவுளியைக் கொடுக்க முடியும். இதுபோன்ற பாதிப்புகள் தொடர்கின்றன.

ஏற்கெனவே கடந்த 2013-இல் தமிழக அரசு சார்பில் ரூ. 50 கோடியில் சாயப் பட்டறை பூங்காவை கரூர் புன்னம்சத்திரத்தில் அமைக்க முற்பட்ட போது, அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் கைவிடப்பட்டது.

இந்த நிலையில், 2014-இல் தமிழக முதல்வர் கரூர், ஈரோடு, குமாரபாளையம் உள்ளடக்கிய பகுதியில் ரூ. 700 கோடியில் ஒருங்கிணைந்த சாயப் பூங்கா அமைக்கப்படும் என்றார். ஆனால், அந்தத் திட்டமும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. கரூர் ஜவுளித் தொழிலைக் காப்பாற்ற முதல்வர் அறிவித்தவாறு உடனே சாயப் பூங்காவை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

இதுதொடர்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒரு ஆர்ஓ பிளான்ட் கழிவுநீர் சுத்திகரிக்கும் மையத்தை அமைக்கும் போது சாயக் கழிவுநீரானது 4 நிலைகளில் சுத்தப்படுத்தப்படுகிறது. முதல் நிலையில் கழிவுநீர் ஆர்ஓ பிளான்டுக்கு செல்லும். அங்கிருந்து கழிவுநீரானது சுமார் 15 அடி விட்டமுள்ள 3 பெரிய தொட்டிகளில், ஒவ்வொரு தொட்டிகளிலும் பில்டர் செய்யப்பட்டு அடுத்தடுத்த தொட்டிகளுக்கு விடப்படும்.

இறுதியில் கிடைக்கும் ஓரளவு நல்ல தண்ணீரை மீண்டும் சாயமேற்ற பயன்படுத்தலாம். இந்த ஆர்ஓ பிளான்ட் அமைக்க ரூ. 3 கோடி வரை செலவாகும்.

இதுகுறித்து ஏற்கெனவே மாவட்டத்தில் உள்ள சிறு, குறு சாய ஆலை நிர்வாகிகளை அழைத்து புதிதாக ஆர்ஓ பிளான்ட் அமைக்க மத்திய அரசு 50%,மாநில அரசு 25% மானியம் தருகிறது எனக் கூறியதற்கு தற்போது தங்களிடம் முதலீடு இல்லை என்கின்றனர். விரைவில் ஆர்ஓ பிளான்ட் அமைந்தால், கரூரில் ஜவுளி உற்பத்தி அதிகரிக்கும். அன்னியச் செலாவணியும் பல மடங்கு உயரும். பல

ஆயிரக்கணக்கான சாயம் மற்றும் சலவை ஆலைத் தொழிலாளர்களுக்கு வேலையும் திரும்பக் கிடைக்கும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பூரில் பயங்கரவாத சதித் திட்டம்! 8 பேரை கைது செய்தது தில்லி போலீஸ்!!

தொகுதிப் பங்கீடு : செய்தியாளர் சந்திப்பில் மயங்கி விழுந்த காதர் மொகிதீன்!

திமுகவிடம் 5 தொகுதிகள் கேட்டுள்ளோம் - காதர் மொகிதீன்

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

SCROLL FOR NEXT