முகப்பு
வணிகம்

அதிக அளவு புழக்கத்துக்கு வராத ரூ. 200 நோட்டுகள்

புதிய ரூ.200 நோட்டு விநியோகிக்கப்பட்டு 40 நாள்களுக்கு மேலாகியும் அதிக அளவில் புழக்கத்துக்கு வராத நிலையே நீடிக்கிறது. ரூ. 500 மற்றும் ரூ. 1000 ஆகிய உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை செல்லாது என

Updated On : 22 ஜூலை, 2025 at 9:32 AM
பகிர்:

புதிய ரூ.200 நோட்டு விநியோகிக்கப்பட்டு 40 நாள்களுக்கு மேலாகியும் அதிக அளவில் புழக்கத்துக்கு வராத நிலையே நீடிக்கிறது. ரூ. 500 மற்றும் ரூ. 1000 ஆகிய உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்த மத்திய அரசு அதற்குப் பதிலாக புதிய ரூ. 500 மற்றும் ரூ. 2000 நோட்டுகளை வெளியிட்டது. 

மத்திய அரசின் கருப்பு பணத்துக்கு எதிரான இந்த நடவடிக்கை 6 மாத காலங்களுக்கும் மேலாக கடும் பணத்தட்டுப்பாட்டை ஏற்படுத்தியது. ரூ. 2 ஆயிரம் நோட்டுகள் சாமானியர்கள் மத்தியில் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இதனால் தொடர்ந்து சில்லறைத் தட்டுப்பாடு நிலவி வந்தது. வீட்டில் சேமித்து வைத்திருந்த ஏராளமான சில்லறை நாணயங்கள் வியாபாரத் தலங்களில் குவிந்து வருகிறது. ஒரு காலத்தில் 100 ரூபாய்க்கு 5 ரூபாய் கமிஷன் வைத்து சில்லறை வாங்கிய உணவகங்கள், வணிகத் தலங்களில் தற்போது நாணயங்கள் குவியல் குவியலாக வெளியேற்ற இயலாமல் 
தேங்கிக் கிடக்கின்றன.

இந்நிலையில் ரூ.2 ஆயிரம் நோட்டுகளுக்கு ஏற்பட்டுள்ள சில்லறைத் தட்டுப்பாட்டை போக்கும் வண்ணம் ரூ. 200 மற்றும் ரூ.50 புதிய ரூபாய் நோட்டுகளை, ரிசர்வ் வங்கி கடந்த ஆகஸ்ட் 25- ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. அறிமுகப்படுத்தி 40 தினங்களுக்கு மேலாகியும் இந்த நோட்டுகள் பொதுமக்கள் மத்தியில் புழக்கத்தில் இல்லாத நிலையே உள்ளது.

இது தொடர்பாக தொழிலதிபர் ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியது: வணிகர்கள், தொழிலகங்களைப் பொருத்த வரையில், தற்போது ஜிஎஸ்டி - டிஜிட்டல் முறை அறிமுகப் படுத்திய பின்னர் ரூபாய் நோட்டுகளின் தேவை பெருமளவில் குறைந்துள்ளது என்று கூறலாம். வாடிக்கையாளர்களும் பெருமளவில் டெபிட் கார்டுகளை பயன் படுத்தத் தொடங்கிவிட்டனர். 

வாடிக்கையாளர்களில் யாராவது ஒருவர் ரூ. 200 நோட்டைப் பார்க்கும் நோக்கில்தான் கேட்கிறார்களே ஒழிய அதனைப் பயன்படுத்த கேட்பதில்லை. இதனால் அதிக அளவில் பயன்பாட்டில் இல்லை. இருக்கும் சிறு தொகையும் வேகமாகக் கை மாறுகிறது; மிகச் சிறிய அளவில் ஆர்வத்தினால் சேகரிக்கப்பட்டு முடங்கியிருக்கலாம் என்றார். 

இதுகுறித்து வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ரூ. 2 ஆயிரம் கரன்சி நோட்டுகளுக்கான சில்லறைத் தட்டுப்பாட்டை நீக்குவதற்காக ரூ. 200 கரன்சி நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் புதிய வடிவிலான ரூ. 500 நோட்டுகளின் புழக்கம் தாராளமாகி விட்டதால் ரூ. 200 நோட்டுக்கான தேவை அதிக அளவில் ஏற்படவில்லை. ஊழியர்களுக்கு ஊதியத்தை ரொக்கமாக வழங்கிய பெரும்பாலான நிறுவனங்கள் தற்போது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தி வருகின்றன. இதனால் ரூபாய் நோட்டுகளின் தேவை ஏடிஎம்களில்தான் அதிகரித்துள்ளது. 

ஏ.டி.எம்.களில் தற்போது ரூ. 200 நோட்டுகளை வைப்பதற்கு போதிய வசதி இல்லை. மேலும் வங்கிகளுக்குத் தேவையான ரூ. 200 நோட்டுகளைப் பெற அந்தந்த வங்கிகளின் மண்டல அலுவலகங்ளுக்குத்தான் செல்ல வேண்டும். ஒரு முறை சென்று வந்தால் பிரத்தியேக கார், காவலாளி என ரூ.20 ஆயிரம் வரை செலவாகிறது. எனினும் ஒரு வங்கிக் கிளைக்கு ரூ. 2 லட்சம்தான் வழங்கப்படுகிறது. 

வாடிக்கையாளர்களும் போதிய ஆர்வம் காட்டாததாலும் அதிக செலவு என்பதாலும் வங்கி கிளை மேலாளர்கள் ரூ. 200 நோட்டுகளை எடுத்து வருவதில் ஆர்வம் காட்டுவதில்லை. மண்டல அலுவலகம் மூலம் கிளைகளுக்கு 200 ரூபாய் கரன்சியை நேரடி விநியோகம் செய்ய வேண்டும். மேலும், ஏடிஎம்கள் வழியே விநியோகிக்கப்படும்போதுதான் ரூ. 200 நோட்டுகள் அதிக அளவில் புழக்கத்தில் வரும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.