முகப்பு
வணிகம்

சிறப்பு பொருளாதார மண்டலங்கள்: 6 நிறுவனங்களுக்கு காலக்கெடு நீட்டிப்பு

சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்க, டிசிஎஸ், மஹிந்திரா வேர்ல்டு சிட்டி (ஜெய்ப்பூர்) உள்ளிட்ட ஆறு நிறுவனங்களுக்கு காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:34 AM
பகிர்:

சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்க, டிசிஎஸ், மஹிந்திரா வேர்ல்டு சிட்டி (ஜெய்ப்பூர்) உள்ளிட்ட ஆறு நிறுவனங்களுக்கு காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக செயலர் ரீட்டா தியோதியா தலைமையில் ஒப்புதல் வாரியம் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதில், சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்காத நிறுவனங்களுக்கு கூடுதல் காலக்கெடு வழங்குவதென முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, டிசிஎஸ் கேட்டுக் கொண்டதன் பேரில் அந்த நிறுவனம் மத்திய பிரதேசத்தில் அமைக்கவுள்ள சிறப்பு பொருளாதார மண்டல தொழில்நுட்ப பூங்காவுக்கான காலக்கெடு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, மஹிந்திரா வேர்ல்டு சிட்டி ஜெய்ப்பூரில் அமைக்கவுள்ள தகவல் தொழில்நுட்ப மற்றும் வன்பொருள் தாயாரிப்புக்கான சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்கான காலக்கெடு மூன்று மாதம் நீட்டிக்கப்பட்டு வரும் ஏப்ரல் 30 வரையில் வழங்கப்பட்டுள்ளது.
இவை தவிர, ஜிபி ரியலேட்டார்ஸ், எஸ்இஇசட் பயோடெக் சர்வீசஸ் மற்றும் ப்ரூக்பீல்ட்ஸ் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் பொருளாதார மண்டலம் அமைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 16 சதவீத பங்களிப்பை சிறப்பு பொருளாதார மண்டலங்கள் வழங்கி வருகின்றன. இந்த மண்டலங்களில் உள்ள ஏற்றுமதியாளர்களின் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய வர்த்தக அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் 
ஒரு பகுதியாக, இம்மண்டலங்களில் விதிக்கப்படும் குறைந்தபட்ச மாற்று வரியை நீக்க அல்லது குறைக்க நிதி அமைச்சகத்துக்கு, வர்த்தக அமைச்சகம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது.
2017-ஆம் ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி நிலவரப்படி மத்திய அரசு 423 சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், அதில் 222 மண்டலங்கள் மட்டுமே தற்போது செயல்பாட்டில் உள்ளன. 
2017-18 நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான கால அளவில் இம்மண்டலங்களின் ஏற்றுமதி 13 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.2.67 லட்சம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.