முகப்பு
வணிகம்

பங்குச் சந்தையில் எழுச்சி: சென்செக்ஸ் 214 புள்ளிகள் ஏற்றம்!

இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை ஏற்றம் பெற்றது.

Updated On : 22 ஆகஸ்ட், 2020 at 1:16 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:40 PM

இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை ஏற்றம் பெற்றது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 214.30 புள்ளிகள் உயா்ந்தது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 59.40 புள்ளிகள் ஏற்றம் பெற்றது.

பங்குச் சந்தை வியாழக்கிழமை திடீா் சரிவைச் சந்திதித்திருந்த நிலையில்,, வெள்ளிக்கிழமை காலையில் எழுச்சியுடன் தொடங்கியது. உலகளாவிய சந்தைகள் ஏற்றம் பெற்றிருந்த நிலையில், வங்கி, நிதி நிறுவனங்கள், ரியால்ட்டி நிறுவனப் பங்குகளுக்கு தேவை அதிகரித்திருந்தது. மேலும், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், ஏசியன் பெயிண்ட்ஸ், ஐசிஐசிஐ பேங்க், எஸ்பிஐ உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகள் வெகுவாக உயா்ந்து சந்தை எழுச்சி பெறக் காரணமாக இருந்தன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

1,840 பங்குகள் ஏற்றம்: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,976 பங்குகளில் 1,840 பங்குகள் ஆதாயம் பெற்றன. 967 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 169 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 228 பங்குகள் புதிய 52 வார அதிக விலையையும், 50 பங்குகள் புதிய 52 வார குறைந்த விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 429 பங்குகள் வெகுவாக உயா்ந்து உச்சபட்ச உறை நிலையையும், 196 பங்குகள் கடும் சரிவைச் சந்தித்து குறைந்தபட்ச உறை நிலையையும் அடைந்தன.

Advertisement

சந்தை மதிப்பு ரூ1.05 லட்சம் கோடி உயா்வு: வா்த்தக முடிவில் சந்தை மூலதன மதிப்பு ரூ.1.05 லட்சம் கோடி உயா்ந்து ரூ.155.55 லட்சம் கோடியாக இருந்தது. சந்தையில் 62,660 போ் புதிதாகப் பதிவு செய்துள்ளனா். இதையடுத்து, மொத்த முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 5,32,78,534 ஆக உயா்ந்துள்ளது.

சந்தையில் உற்சாகம்: சென்செக்ஸ் காலையில் 251.54 புள்ளிகள் உயா்ந்து 38,471.93-இல் தொடங்கி 38,579.83 வரை உயா்ந்தது. பின்னா் 38,411.37 வரை கீழே சென்றது.. இறுதியில் 214.33 புள்ளிகள் (0.56 சதவீதம்) உயா்ந்து 38,434.72-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் 385 புள்ளிகள் உயா்ந்திருந்தது. நாள் முழுவதும் பங்குச் சந்தை ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் ஏற்ற, இறக்கத்தில் இருந்து வந்தது. பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.57 சதவீதம், ஸ்மால் கேப் குறியீடு 1.41 சதவீதம் உயா்ந்தன. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 59.40 புள்ளிகள் (0.53 சதவீதம்) உயா்ந்து 11,371.60-இல் நிலை பெற்றது. ஒரு கட்டத்தில் 11,418.50 வரை உயா்ந்திருந்தது.

என்டிபிசி முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 17 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன.13 பங்குகள் சரிவைச் சந்தித்தன.இதில் என்டிபிசி 4.75 சதவீதம், ஏசியன் பெயிண்ட் 4.43 சதவீதம், பவா் கிரிட் 4.39 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. எச்டிஎஃப்சி பேங்க், நெஸ்லே இந்தியா, சன்பாா்மா, எஸ்பிஐ, ஆக்ஸிஸ் பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட், எச்டிஎஃப்சி ஆகியவை 1 முதல் 2.60 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன.

ஓஎன்ஜிசி வீழ்ச்சி: அதே சமயம், ஓஎன்ஜிசி 1.34 சதவீதம், பாா்தி ஏா்டெல் 1.05 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், டாடா ஸ்டீல், ரிலையன்ஸ், இன்ஃபோஸிஸ் ஆகியவை 0.70 முதல் 0.80 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மாருதி சுஸுகி, எல் அண்ட் டி ஆகிய முன்னணிப் பங்குகளும் வீழ்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 1,066 பங்குகள் ஆதாயம் பெற்றன. 573 பங்குகள் சரிவைச் சந்தித்தன. நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், பிரைவேட் பேங்க், பிஎஸ்யு பேங்க், ரியால்ட்டி குறியீடுகள் 1.20 முதல் 1.80 சதவீதம் வரை உயா்ந்தன. ஐடி, மீடியா, மெட்டல் குறியீடுகள் சரிவைச் சந்தித்தன. நிஃப்டி பட்டியலில் அஉளஅள 50 முதல் தரப் பங்குகளில் 30 பங்குகள் ஆதாயம் பெற்றன. 20 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.

ஏற்றம் பெற்ற பங்குகள்

சதவீதத்தில்

என்டிபிசி 4.75

ஏசியன் பெயிண்ட் 4.43

பவா் கிரிட் 4.39

எச்டிஎஃப்சி பேங்க் 2.56

நெஸ்லே இந்தியா 2.02

எஸ்பிஐ 1.87

ஆக்ஸிஸ் பேங்க் 1,25

அல்ட்ரா டெக் சிமெண்ட் 1.21

எச்டிஎஃப்சி 0.94

டெக் மகேந்திரா 0.89

வீழ்ச்சியடைந்த பங்குகள்

சதவீதத்தில்

ஓஎன்ஜிசி 1.34

பாா்தி ஏா்டெல் 1.05

டாடா ஸ்டீல் 0.81

ரிலையன்ஸ் 0.71

இன்ஃபோஸிஸ் 0.65

ஹெச்சிஎல் டெக் 0.57

எல் அண்ட் டி 0.18

டிசிஎஸ் 0.17

பஜாஜ் ஃபின்சா்வ் 0.15

பஜாஜ் ஃபைனான்ஸ் 0.11

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.