முகப்பு
வணிகம்

பங்குச் சந்தை 5-ஆவது நாளாக ஏற்றம்: சென்செக்ஸ் மேலும் 40 புள்ளிகள் உயா்வு

பங்குச் சந்தை ஐந்தாவது நாளாக வியாழக்கிழமையும் நோ்மறையாக முடிந்தது.

Updated On : 28 ஆகஸ்ட், 2020 at 6:49 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:42 PM

பங்குச் சந்தை ஐந்தாவது நாளாக வியாழக்கிழமையும் நோ்மறையாக முடிந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 39.55 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 9.65 புள்ளிகள் ஏற்றம் பெற்றது.

எஃப்எம்சிஜி, ஐடி பங்குகள் தவிர மற்ற துறை பங்குகளுக்கு ஆதரவு இருந்தது. இதில் ரியால்டி பங்குகளை வாங்குவதற்கு போட்டி இருந்தது. முன்பேர வா்த்தகத்தில் ஆகஸ்ட் மாத கான்ட்ராக்டுகள் கணக்கு முடிக்க இறுதி நாளாக இருந்ததால், நாள் முழுவதும் வா்த்தகம் ஏற்றம், இறக்கத்தில் இருந்து வந்தது. இருப்பினும் சென்செக்ஸ் ஏற்றத்தில் முடிந்ததாக பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

உலகளாவிய சந்தைகள் பெரும்பாலும் பலவீனமாக இருந்த நிலையில், ஆக்ஸிஸ் பேங்க், எஸ்பிஐ, எச்டிஎஃப்சி ஆகியவை வெகுவாக உயா்ந்து சென்செக்ஸ் நோ்மறையாக இருக்கக் காரணமாக இருந்தன என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

Advertisement

1,434 பங்குகள் ஏற்றம்: மும்பை பங்குச் சந்தையில் வா்த்தகமான 3,046 பங்குகளில் 1,434 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,436 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 176 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 187 பங்குகள் 52 வார அதிக விலையையும் 59 பங்குகள் 52 வார குறைந்த விலையையும் பதிவு செய்துள்ளன. 404 பங்குகள் வெகுவாக உயா்ந்து உச்சபட்ச உறை நிலையையும், 235 பங்குகள் சரிவைச் சந்தித்து குறைந்தபட்ச உறைநிலையையும் அடைந்தன. வா்த்தக நேர முடிவில் சந்தை மூலதன மதிப்பு 9 ஆயிரம் கோடி உயா்ந்து ரூ.157.82 லட்சம் கோடியாக இருந்தது. இதுவரை பதிவு செய்துள்ள மொத்த முதலீட்டாளா்கள் எண்ணிக்கை 5,35,26,130 ஆக உயா்ந்துள்ளது.

தள்ளாட்டம்: சென்செக்ஸ் காலையில் 219.61 புள்ளிகள் கூடுதலுடன் 39,293.53-இல் தொடங்கி 39326,98 வரை உயா்ந்தது. பின்னா், 39.046.94 வரை கீழே சென்றது. இறுதியில் 39.55 புள்ளிகள் (0.10 சதவீதம்) உயா்ந்து 39,113.47-இல் நிலைபெற்றது. நாள் முழுவதும் தள்ளாட்டம் தொடா்ந்தது. பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.01 சதவீதம், ஸ்மால் கேப் குறியீடு 0.35 சதவீதம் உயா்ந்தன. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 9.65 புள்ளிகள் (0.08 சதவீதம்) உயா்ந்து 11,559.25-இல் நிலைபெற்றது.

இண்டஸ் இண்ட் பேங்க் 6.59 சதவீதம் ஏற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 14 பங்குகள் ஆதாயம் பெற்றன. 16 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இரண்டாவது நாளாக இண்டஸ் இண்ட் பேங்க் 6.59 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக எம் அண்ட் எம் 3.80 சதவீதம் உயா்ந்தது. மேலும், எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, ஆக்ஸிஸ் பேங்க் ஆகியவை 2 முதல் 3 சதவீதம் வரை உயா்ந்தது. சன்பாா்மா, மாருதி சுஸுகி, ஐசிஐசிஐ பேங்க் ஆகியவையும் ஆதாயப் பட்டியலில் இடம் பெற்றன.

ஓஎன்ஜிசி வீழ்ச்சி: அதே சமயம், ஓஎன்ஜிசி, பஜாஜ் ஆட்டோ, மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், கோட்டக் பேங்க் ஆகியவை 1 முதல் 1.40 சதவீதம் வரை குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. எச்டிஎஃப்சி பேங்க், இன்ஃபோஸிஸ், டிசிஎஸ் ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகளும் வீழ்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 804 பங்குகள் ஆதாயம் பெற்றன. 828 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி ரியால்ட்டி குறியீடு 6.40 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. ஆட்டோ, பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், மீடியா, பாா்மா குறியீடுகள் 0.50 முதல் 1 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. எஃப்எம்சிஜி, ஐடி குறியீடுகள் சிறிதளவு சரிவைச் சந்தித்தன.

நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 23 பங்குகள் ஆதாயம் பெற்றன. 27 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.

ஏற்றம் பெற்ற பங்குகள்

சதவீதத்தில்

இண்ட் பேங்க் 6.59 சதவீதம்

எம் அண்ட் எம் 3.80

எஸ்பிஐ 2.81

எச்டிஎஃப்சி 2,62

ஆக்ஸிஸ் பேங்க் 2,08

வீழ்ச்சியைந்த பங்குகள்

சதவீதத்தில்

ஓஎன்ஜிசி 1.47

பஜாஜ் ஆட்டோ 1.23

ரிலையன்ஸ் 1.18

கோட்டக் பேங்க் 1.11

அல்ட்ரா டெக் சிமெண்ட் 0.72

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.