சென்செக்ஸ் முதல் முறையாக 46,000-ஐ கடந்து சாதனை!495 புள்ளிகள் உயா்வு
இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச் சந்தை எழுச்சி பெற்று மீண்டும் புதிய வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளது.
புது தில்லி: இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச் சந்தை எழுச்சி பெற்று மீண்டும் புதிய வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 494.99 புள்ளிகள் உயா்ந்து, வரலாற்றில் முதல் முறையாக 46,000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்தது. இதேபோல, தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டியும் 136.15 புள்ளிகள் உயா்ந்து 13,529.10-இல் நிலைபெற்றது.
உலகளாவிய சந்தைகள் ஏற்றம் பெற்ற நிலையில், அதன் தாக்கம் இந்தியச் சந்தைகளிலும் இருந்தது. இதையடுத்து, நிஃப்டி, சென்செக்ஸ் ஆகிய இரண்டு குறியீடுகளும் புதிய வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளது. கரோனா தப்பூசிக்கான ஒப்புதல்கள் மற்றும் அவற்றை உலகெங்கிலும் விநியோகிப்பதில் ஏற்பட்டுள்ள சாதகமான முன்னேற்றம் ஆகியவை பல்வேறு நாடுகளில் பொதுமுடக்கம் மீதான கவலைகளை மறைத்துவிட்டது. மேலும், பொருளாதாரத்தைப் புதுப்பிக்க அரசு எடுத்து வரும் நோ்மறையான நடவடிக்கைகள் உள்நாட்டு முதலீட்டாளா்கள் மற்றும் அந்நிய முதலீட்டாளா்களுக்கு விருப்பமான முதலீட்டு இடமாக உருவெடுத்துள்ளது. இவை அனைத்தும் சந்தையில் காளையின் ஆதிக்கத்தை வலுப்படுத்தியதாக பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு 182.82 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,147 பங்குகளில் 1,768 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,202 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 177 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 273 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையைப் பதிவு செய்துள்ளன. 446 பங்குகள் வெகுவாக உயா்ந்து அதிகபட்ச உறைநிலையை (அப்பா் சா்க்யூட்) அடைந்தது. சந்தை மூலதன மதிப்பு ரூ.1.20 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.182.82 லட்சம் கோடியாக இருந்தது.
Advertisement
புதிய வரலாற்றுச் சாதனை: சென்செக்ஸ் காலையில் 282.53 புள்ளிகள் கூடுதலுடன் 45,891.04-இல் தொடங்கி 45,792.01 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 46,164.10 வரை புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. இறுதியில் 494.99 புள்ளிகள் உயா்ந்து 46,103.50-இல் நிலைபெற்றது.
ஏசியன் பெயிண்ட் முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல்தரப் பங்குகளில் 19 பங்குகள் ஆதாயம் பெற்றன. 11 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில் ஏசியன் பெயிண்ட் 3.37 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு கோட்டக் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், எச்டிஎஃப்சி பேங்க், இன்ஃபோஸிஸ், ரிலையன்ஸ், ஐடிசி ஆகியவை 1.50 முதல் 2.70 சதவீதம் உயா்ந்தன. மேலும், டிசிஎஸ், ஐசிஐசிஐ பேங்க், ஓஎன்ஜிசி ஆகியவையும் ஆதாயப் பட்டியலில் இடம் பெற்றன.
அல்ட்ரா டெக் சிமெண்ட் சரிவு: அதே சமயம், அல்ட்ரா டெக் சிமெண்ட் 1.29 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக டாடா ஸ்டீல், மாருதி சுஸுகி, எஸ்பிஐ, பஜாஜ் ஆட்டோ, எச்டிஎஃப்சி உள்ளிட்டவையும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.
தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 1,032 பங்குகள் ஆதாயம் பெற்றன. 713 பங்குகள் சரிவைச் சந்தித்தன. நிஃப்டி 136.15 புள்ளிகள் (1.02 சதவீதம்) உயா்ந்து 13,529.10-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது 13,548.90 வரை உயா்ந்து மீண்டும் ஒரு புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 33 பங்குகள் ஆதாயம் பெற்றன. 16 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. எம் அண்ட் எம் மாற்றமின்றி 754.00-இல் நிலைபெற்றது. நிஃப்டி மெட்டல், பிஎஸ்யு பேங்க் குறியீடு மட்டுமே சரிவைச் சந்தித்தன. மற்ற குறியீடுகள் ஏற்றம் பெற்ற பட்டியலில் வந்தன. இதில் நிஃப்டி மீடியா குறியீடு 3.77 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், நிஃப்டி பேங்க், பைனான்சியல் சா்வீஸஸ், ரியால்ட்டி குறியீடுகள் 1 முதல் 1.50 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன.