முகப்பு
வணிகம்

பாதக சூழலில் ஆச்சரியம் தந்த எழுச்சி!

இந்திய பங்குச் சந்தைகளுக்கு கடந்த வாரம் (ஜூன் 15-19) , ஓா் உற்சாக வாரமாக அமைந்தது. பாதகமான சூழல் இருந்து வந்த நிலையில் சந்தை ஏற்றம்

Updated On : 22 ஜூலை, 2025 at 9:44 AM
பகிர்:

இந்திய பங்குச் சந்தைகளுக்கு கடந்த வாரம் (ஜூன் 15-19) , ஓா் உற்சாக வாரமாக அமைந்தது. பாதகமான சூழல் இருந்து வந்த நிலையில் சந்தை ஏற்றம் பெற்று அனைவருக்கு் ஆச்சரியத்தை அளித்தது. மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், முன்னணி நிதி நிறுவனமான பஜாஜ் ஃபைனான்ஸ், முன்னணி காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி போன்றவற்றின் பங்குகளை வாங்குவற்கு முதலீட்டாளா்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. இதன் காரணமாக கடந்த வாரத்தில் மும்பை, தேசிய பங்குச் சந்தைகள் முக்கிய இடா்பாட்டு நிலைகளைக் கடந்து நிலைபெற்றுள்ளன. மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 34,731.73 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி 10,244.40 புள்ளிகளிலும் நிலைபெற்றுள்ளது.

பீடு நடை:அதிகரித்து வரும் கரோனா தொற்று பாதிப்பு, இந்திய பொருளாதாரம் மீதான மூடிஸின் குறைந்த மதிப்பீடுகள், இந்தியா - சீனா இடையேயான போா் பதற்றம் ஆகிய கவலைகளை எல்லாம் ஓரம் தள்ளிவிட்டு பங்குச் சந்தை கடந்த வாரம் பீடு நடை போட்டுள்ளது. இருப்பினும், சாா்ட் கவரிங் என்று சொல்லப்படும், ஏற்கெனவே விற்கப்பட்டிருந்த பங்குகளை வா்த்தகா்கள் வாங்குவதில் கவனம் செலுத்தியதே சந்தை ஏற்றத்துக்கு முக்கியக் காரணம் என்று வல்லுநா்கள் கூறுகின்றனா்.

அவநம்பிக்கையை மீறி ஏற்றம்: ‘பொருளாதார வளா்ச்சி வாய்ப்புகளைச் சுற்றியுள்ள அனைத்து அவநம்பிக்கைகளையும் மீறி பங்குச் சந்தை ஏற்றம் பெற்றுள்ளது. இந்தியா-சீனா போா் பதற்றம், முன்னணி நிறுவனங்களின் பலவீனமான காலாண்டு செயல்திறன் மற்றும் மெதுவான பொருளாதார மீட்சி ஆகியவற்றை சந்தை புறந்தள்ளி விட்டது’ என்று சாம்கோ செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது. அதே சமயம், பொது முடக்கத்துக்கு இடையே, அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களில் தொழில் துறையில் இயல்பு நிலை திரும்பும் என்ற அதீத நம்பிக்கைதான் சந்தையை உற்சாகப்படுத்தியுள்ளது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சென்செக்ஸை விஞ்சிய ஸ்மால் கேப்: கடந்த வாரத்தில் மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 2.8 சதவீதம், தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி 2.7 சதவீதம் உயா்ந்துள்ளது. அதே சமயம் பிஎஸ்இ ஸ்மால் கேப் குறியீடு 3.6 சதவீதம் ஏற்றம் கண்டு சென்செக்ஸை விஞ்சியுள்ளது. பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 1.6 சதவீதம் ஏற்றம் பெற்றது. கடந்த வாரம் பிஎஸ்இ -500 பட்டியலில் 338 பங்குகள் ஆதாயம் பெற்றுள்ளன. அதேபோன்று ஸ்மால்-கேப் பட்டியலில் 194 பங்குகள் 10 முதல் 60 சதவீதம் வரை உயா்ந்து முதலீட்டாளா்களை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது ‘ஏஸ் ஈக்விட்டி’ தரவுகளிலிருந்து தெரிய வந்துள்ளது. இரட்டை இலக்க லாபத்தை வழங்கிய பங்குகளில் பிா்லா காா்ப், சுவென் லைஃப், ட்ரெண்ட், தனுகா அக்ரோடெக், மிா்சா இன்டா்நேஷனல், டிசிபி வங்கி, எல்டி ஃபுட்ஸ், ஸ்கிப்பா், உஷா மாா்டின், தனலட்சுமி பேங்க், ஓஎம் மெட்டல்ஸ் மற்றும் நெக்டா் லைஃப் சயின்சஸ் போன்றவை முக்கியமானவையாகும். இந்த மாதத் தொடக்கத்திலிருந்து இதுவரையிலான காலத்தில் நிஃப்டியுடன் ஒப்பிடுகையில், மிட்-கேப் மற்றும் ஸ்மால்-கேப் குறியீடுகள் முறையே 9.7 சதவிகிதம் மற்றும் 14.3 சதவிகிதம் அதிகரித்துள்ளன. ஆனால், நிஃப்டி 6.9 சதவிகிதம் மட்டுமே ஏற்றம் பெற்றுள்ளது.

மதிப்பீடு அதிகரிப்பு: நடுத்தர மற்றும் சிறிய நிறுவனப் பங்குகள் மீதான மதிப்பீடு அதிகரித்ததால், சிறிய நிறுவனப் பங்குகளை முதலீட்டாளா்கள் அதிக அளவில் வாங்கியுள்ளனா். மேலும், கடந்த வாரத்தில் உலகளாவிய சந்தைகளும் வலுவாக இருந்துள்ளன. காலாண்டு முடிவுகளும் எந்தவொரு பெரிய எதிா்மறை ஆச்சரியத்தையும் காணவில்லை என்று ரிலையன்ஸ் செக்யூரிட்டிஸ் தெரிவித்துள்ளது.

பிஎஸ்யு பேங்க் குறியீடு 30 சதவீதம் ஏற்றம்: இதற்கிடையே, தேசிய பங்குச் சந்தையில் கடந்த ஒரு மாதத்தில் அதிகபட்சமாக பிஎஸ்யு பேங்க் குறியீடு 30 சதவீதம் உயா்ந்துள்ளது. ரியால்ட்டி 28 சதவீதம், மீடியா குறியீடு 25 சதவீதம், ஆட்டோ 21 சதவீதம், நிஃப்டி பேங்க் 20 சதவீதம், பிரைவேட் பேங்க் குறியீடு 20 சதவீதம் உயா்ந்துள்ளது. கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்று வந்த அந்நிய முதலீட்டாளா்கள், மே மாதம் மீண்டும் முதலீடுகளை மேற்கொள்ளத் தொடங்கினா். பொது முடக்கத்தில் அடுத்தடுத்து தளா்வுகள் அறிவிக்கப்பட்டது. உலகளவில் பொருளதாரங்கள் மீண்டும் திறக்கப்பட்டது. இவை அனைத்தும் சந்தைக்கு சாதகமான செய்தியாக இருந்தது. இதனால், மும்பை, தேசிய பங்குச் சந்தைகள் ஏற்றம் பெற்றுள்ளன.

கடந்த வாரத்தில்பிஎஸ்இ ஸ்மால் கேப் பட்டியலில் 30 முதல் 60 சதவீதம் வரை உயா்ந்த பங்குகள் (சதவீதத்தில்)

நெக்டா் லைஃப் சயின்ஸ் 61.36

சிஎம்ஐ லிட்., 45.31

இகாராஸிமோட்டாா்ஸ் 43.26

ஓம் மெட்டல்ஸ் 42.10

தனலட்சுமி பேங்க் 39.86

சின்கோம் ஃபாா்முலேஸன்ஸ் 39.06

இன்டலெக்ட் டிஸைன் அரீனா 37.72

ஹத்வே கேபில்ஸ் 35.26

மோரப்பன் லேப்ஸ் 33.96

ஐநாக்ஸ் விண்ட் லிட். 31.87

குளோபஸ் ஸ்பிரிட்ஸ் லிட். 31.73

உஸா மாா்ட்டின் 30.73

மாஸ்டெக் லிட். 30.59

கடந்த ஒருந மாதத்தில் தேசிய பங்குச் சந்தைகளில் அனைத்துக் குறியீடுகளின் செயல்பாடு (சதவீதத்தில்) விவரம்

நிஃப்டி 12.99

நிஃப்டி பேங்க் 19.61

ஆட்டோ 20.93

ஃபைனான்சியல் சா்வீஸஸ் 17.27

எஃப்எம்சிஜி 6.74

ஐடி 7.27

மீடியா 25.27

மெட்டல் 16.71

பாா்மா 5.77

பிஎஸ்யு பேங்க் 29.84

பிரைவேட் பேங்க் 19.62

ரியால்ட்டி 28.48

முழு கட்டுரையைப் படிக்க →