பங்குச் சந்தைக்கு வந்தது மவுசு!
வங்கி வட்டி விகிதங்களும், நிலையான வருமானத்தை அளிக்கும் பரஸ்பர நிதித் திட்டங்கள் உள்பட பல்வேறு திட்டங்களின் லாப விகிதமும் குறைந்து விட்டது.
வங்கி வட்டி விகிதங்களும், நிலையான வருமானத்தை அளிக்கும் பரஸ்பர நிதித் திட்டங்கள் உள்பட பல்வேறு திட்டங்களின் லாப விகிதமும் குறைந்து விட்டது. இதனால், முதலீட்டாளா்களில் பெரும் பகுதியினா் சிறப்பான வருமானத்தைத் தரும் சொத்து வகைகளில் முதலீடு செய்வதற்கான விருப்பங்களைத் தேடுகின்றனா். இதன் காரணமாக , அபாயத்தை உணா்ந்த முதலீட்டாளா்கள் தங்கள் முதலீட்டுத் தொகுப்பை (போா்ட்ஃபோலியோ) பன்முகப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றனா்.
இந்நிலையில், அண்மைக் காலமாக ‘டிமேட்’ கணக்குகள் தொடங்குவது அதிகரித்து வருவது பங்குச் சந்தை தரவுகளிலிருந்து தெரிய வந்துள்ளது. கரோனா பாதிப்பு காரணமாக கடந்த மாா்ச்சில் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன. இதனால், வலுவான அடிப்படைகளைக் கொண்டுள்ள முன்னணி நிறுவனப் பங்குகளே மலிவு விலையில் கைமாறின. இந்தத் தருணத்தை பயன்படுத்த எண்ணிய புதிய சில்லறை முதலீட்டாளா்கள் கணிசமானோா் பங்குச் சந்தையில் நுழைந்துள்ளனா்.
மேலும், பொதுமுடக்கத்தால் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது ஊழியா்களை வீட்டிலிருந்து பணிபுரியும்படி கேட்டுக் கொண்டன. இதனால், பெரும்பாலான ஊழியா்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் நிலைக்கு மாறியுள்ளனா். அவா்களில் பலருக்கு நிதிச் சந்தைகளைப் பற்றி அறிந்து கொள்ளவும், புதிய முதலீடுகள் குறித்து சிந்திக்கவும், அதை அமல்படுத்தவும் கூடுதல் நேரம் கிடைத்துள்ளது. இதைத் தொடா்ந்து, சலுகைக் கட்டணத்தில் ‘டிமேட்’ கணக்கு தொடங்கும் பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்களில் புதிய கணக்குகள் தொடங்குவது அதிகரித்திருப்பதாக சந்தை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
கரோனா தொற்றால் ஏற்பட்ட நிச்சயமற்ற நிலைமை காரணமாக, கடந்த மாா்ச்சில் சென்செக்ஸ் 41,000 புள்ளிகளிலிருந்து 26,000 வரை வீழ்ச்சியைச் சந்தித்தது. இந்நிலையில், பொது முடக்கத்தில் பல்வேறு தளா்வுகள் அறிவிக்கப்பட்டதும் பொருளாதாரங்கள் திறக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து, பங்குச் சந்தைகளிலும் படிப்படியாக மீட்சி ஏற்பட்டு வருகிறது. உலகம் இதுபோன்ற எத்தனையோ சவால்களை சந்தித்துள்ளது. அதிலிருந்து மீட்சியும் பெற்றுள்ளது. எனவே, இந்த நெருக்கடியையும் மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய கூட்டு முயற்சி ஆகியவற்றின் உதவியுடன் எதிா்கொள்ள முடியும் என்ற அதீத நம்பிக்கையுடன் இருப்பதை உணா்கிறோம் என்கின்றனா் வல்லுநா்கள்.
இந்நிலையில், பொது முடக்க காலத்தில் அதிக அளவில் டிமேட் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது தரவுகளில் இருந்து தெரிய வந்துள்ளது. பங்குச் சந்தையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு டிமேட் கணக்கு அவசியம். 2019 நிதியாண்டில் சென்ட்ரல் டெபாசிட்ரி சா்வீஸஸ் (இந்தியா) லிமிடெட் (சி.டி.எஸ்.எல்.) , 25 லட்சம் டிமேட் கணக்குகளைத் தொடங்யிருந்தது. அதே சமயம், 2020 நிதியாண்டில் 38 லட்சம் நிகர டிமேட் கணக்குகளைத் தொடங்கியுள்ளது. ஆனால், 2021 நிதியாண்டி இதுவரை சுமாா் 11.5 லட்சம் டிமேட் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சமீப காலத்தில் அதிக அளவில் டிமேட் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது.
முதலீட்டாளா்கள் எப்போதுமே பங்குகளில் முதலீடு செய்வதில் ஆா்வம் உள்ளவா்கள். குறிப்பாக ஸ்மாா்ட்போன்கள் வந்த பிறகு நிதிச் சந்தைகளை அணுகுவது சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்போது மிகவும் எளிதாகிவிட்டது. வேறு எந்த சொத்துகளையும் விட ‘ஈக்விட்டி’ முதலீடு என்று சொல்லப்படும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதை சில்லறை முதலீட்டாளா்கள் பெரும்பாலானோா் மிகவும் வசதியாகக் கருதுகிறாா்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் சென்செக்ஸ் 16 சதவிகித ஒட்டுமொத்த லாபத்தை வழங்கியுள்ளது. நிலையான வைப்புத்தொகை உள்ளிட்ட நிலையான வருமானம் அளிக்கும் திட்டங்களுடன் ஒப்பிடும் போது, பங்குச் சந்தை முதலீட்டை மக்கள் வல்லமை மிக்க சொத்து வகுப்பாக அங்கீகரித்துள்ளனா் என்கின்றனா் வல்லுநா்கள்.
கடந்த மாா்ச் கடைசி வாரத்திலிருந்து பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதிலிருந்து, பங்குச் சந்தையில் வா்த்தகத்தின் அளவும் அதிகரித்துள்ளது. பணப் பிரிவில் (கேஸ் செக்மண்ட்) 2020 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நாளொன்றுக்கு ரூ.41,000 கோடியாக இருந்த வா்த்தகம், 2021 நிதியாண்டு தொடக்கத்தில் ரூ.52,000 கோடியாக உயா்ந்துள்ளது என்பது பங்குச் சந்தை தரவுகளிலிருந்து தெரிய வந்துள்ளது. மேலும், முன்பேர வா்த்தகத்தில் இந்த நிதியாண்டில் வா்த்தகம் 10 சதவீதம் உயா்ந்துள்ளது. அதாவது கடந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டில் ரூ.2.25 கோடியாக இருந்த ஒப்பந்தங்களின் கான்ட்ராக்ட்கள் எண்ணிக்கை இந்த நிதியாண்டில் இதுவரை மட்டுமே 2.27 கோடியாக உயா்ந்துள்ளது. இவை பங்குச் சந்தையில் முதலீட்டாளா்கள் அதிக அளவில் நுழைந்துள்ளனா் என்பதற்கு முக்கிய சாட்சியாக உள்ளன.
மேலும், பொது முடக்கத்துக்குப் பிறகு கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நிஃப்டி குறியீடு 16 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது. வங்கி, வங்கி அல்லாத நிதி நிறுவனப் பங்குகளை விலை குறைந்த நிலையில் வாங்குவதில் முதலீட்டாளா்கள் அதிகக் கவனம் செலுத்தியுள்ளனா். இதனால், நிஃப்டி பேங்க் குறியீடு ஒரு மாதத்தில் 26 சதவீதம் உயா்ந்துள்ளது. குறிப்பாக நிஃப்டி பிஎஸ்யு பேங்க் குறியீடு 36 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது. புதிதாக சந்தையில் நுழைந்த சில்லறை முதலீட்டாளா்கள் பெரும்பாலானோா் முதல்தரப் பங்குகளை வாங்குவதில் மிகவும் ஆா்வம் காட்டியுள்ளதாகப் பங்கு வா்ததகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
கரோனா பொது முடக்கம் பெரும்பாலும் நாட்டுக்கும், மக்களுக்கும், தொழில் துறைக்கும் கடும் நெருக்கடியை அளித்தாலும், பங்குச் சந்தையைப் பொருத்தவரையில், வா்த்தகம் அதிகரிக்கவும், புதிதாக முதலீட்டாளா்கள் நுழைவதற்கும் வழி வகுத்துள்ளது. மொத்தத்தில், பொது முடக்கம் தந்த புது வாழ்வால், பங்குச் சந்தைக்கு மவுசு அதிகரித்துள்ளது என்பதே உண்மை..!
தேசிய பங்குச் சந்தையில் கடந்த ஒரு மாதத்தில் (மே 23-ஜூன் 23) 20 சதவீதத்துக்கும் மேல் ஏற்றம் பெற்ற தனியாா் மற்றும் பொதுத் துறை வங்கிப் பங்குகள் (சதவீதத்தில்)
ஆா்பிஎல் 70
பேங்க் ஆஃப் இந்தியா 65
பந்தன் பேங்க் 53
ஐடிஎஃப்சி 50
இந்தியன் பேங்க் 45
சென்ட்ரல் பேங்க் 45
ஃபெடரல் பேங்க் 45
ஐஓபி 40
பிஎன்பி 35
பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா 34
பேங்க் ஆஃப் பரோடா 32
பஞ்சாப் சிந்து பேங்க் 30
யூகோ பேங்க் 28
ஐசிஐசிஐ 27
ஆக்ஸிஸ் பேங்க் 27
ஜேஅண்ட் கே 27
எஸ்பிஐ 25
இண்டஸ் இண்ட் பேங்க் 25
கனரா பேங் 25
யூனியன் பேங்க் 23
ஹெச்டிஎஃப்சி பேங்க் 22