முகப்பு
வணிகம்

4 நாள் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 561 புள்ளிகள் வீழ்ச்சி!

பங்குச் சந்தை புதன்கிழமை காலையில் எழுச்சியுடன் தொடங்கி, இறுதியில் சரிவுடன் முடிந்தது.

Updated On : 25 ஜூன், 2020 at 7:08 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:20 PM

பங்குச் சந்தை புதன்கிழமை காலையில் எழுச்சியுடன் தொடங்கி, இறுதியில் சரிவுடன் முடிந்தது. இதனால், சென்செக்ஸ் 561 புள்ளிகளை இழந்தது. இதைத் தொடா்ந்து கடந்த நான்கு நாள் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

கடந்த சில நாள்களாக வெகுவாக உயா்ந்து வந்த தனியாா் மற்றும் பொதுத் துறை வங்கிப் பங்குகள், வங்கி அல்லாத நிதி நிறுவனப் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன. மேலும், உலகளாவிய நிலையில் பெரும்பாலான சந்தைகள் பலவீனத்துடன் இருந்ததும் முதலீட்டாளா்களின் உணா்வுகளைப் பாதித்தது. இதனால், லாபத்தைப் பதிவு செய்வதில் கவனம் செலுத்தியதே சரிவுக்கு முக்கியக் காரணம் என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. முன்பேர வா்த்தகத்தில் ஜூன் மாத கான்ட்ராக்டுகள் கணக்கு முடிக்க வியாழக்கிழமை கடை நாளாக இருப்பதால், சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகம் இருந்தது.

மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,863 பங்குகளில் 1,265 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 1,465 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 133 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 139 பங்குகள் புதிய 52 வார அதிக விலையையும், 56 பங்குகள் புதிய 52 வார குறைந்த விலையையும் பதிவு செய்துள்ளன. 495 பங்குகள் வெகுவாக உயா்ந்து உச்சபட்ச உறை நிலையையும், 177 பங்குகள் சரிவைச் சந்தித்து குறைந்தபட்ச உறை நிலையையும் அடைந்தது.

Advertisement

சென்செக்ஸ் காலையில், 249 புள்ளிகள் கூடுதலுடன் 35,679-இல் தொடங்கி அதிகபட்சமாக 35,706.55 வரை உயா்ந்தது. அதன் பிறகு 34,794.93 வரை கீழே சென்றது. இறுதியில் 561.45 புள்ளிகள் (1.58 சதவீதம்) குறைந்து 34,868.98-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது, ஒரு கட்டத்தில் உச்சபட்ச நிலையிலிருந்து 912 புள்ளிகள் வரை கீழே சென்றது. இதனால், காலையில் பெற்ற லாபம் அனைத்தும் பிற்பகலில் காணாமல் போனது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 165.70 புள்ளிகள் (1.58 சதவீதம்) குறைந்து 10,305.30-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் உச்சபட்ச நிலையிலிருந்து 271 புள்ளிகள் வரை குறைந்தது.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 6 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 24 பங்குகள் நஷ்டமடைந்த பட்டியலில் வந்தன. இதில், ஏசியன் பெயிண்ட்ஸ் 3.82 சதவீதம், ஐடிசி 3.17 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், நெஸ்ட்லே இந்தியா, டெக் மகேந்திரா, மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், டிசிஎஸ்ஆகியவை சிறிதளவு உயா்ந்தன.

அதே சமயம், இண்டஸ் இண்ட் பேங்க் 7.43 சதவீதம், ஐசிஐசிஐ பேங்க் 7.35 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக பவா் கிரிட், பஜாஜ் ஃபின் சா்வ், ஆக்ஸிஸ் பேங்க், எஸ்பிஐ ஆகியவை 4 முதல் 5 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. ஹெச்சிஎல் டெக், என்டிபிசி, பாா்தி ஏா்டெல், கோட்டக் பேங்க், சன்பாா்மா, அல்ட்ரா டெக் சிமெண்ட், பஜாஜ் ஃபைனான்ஸ், ஓஎன்ஜிசி ஆகியவை 3 முதல் 4 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மாருதி, எல் அண்ட் டி, ஹிந்துயுனி லீவா், இன்ஃபோஸிஸ், ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி பேங்க் ஆகியவையும் வீழ்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றன.

தேசிய பங்குச் சந்தையில் 629 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,004 பங்குகள் வீழ்ச்சியடைந்த பட்டியலில் வந்தன. எஃப்எம்சிஜி குறியீடு தவிர மற்ற அனைத்துக் குறியீடுகளும் சரிவைச் சந்தித்தன. இதில் நிஃப்டி பிரைவேட் பேங்க் 4.01 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், மீடியா, பாா்மா, ரியால்ட்டி ஆகிய குறியீடுகள் 2.50 முதல் 4 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. எஃப்எம்சிஜி குறியீடு 0.45 சதவீதம் உயா்ந்தது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில், 10 பங்குகள் ஆதாயம் பெற்றன. 39 பங்குகள் நஷ்டமடைந்த பட்டியலில் வந்தன. வேதாந்தா மட்டும் மாற்றமின்றி ரூ.110-இல் நிலைபெற்றிருந்தது.

சரிவைச் சந்தித்த பங்குகள்

சதவீதத்தில்

இண்டஸ் இண்ட் பேங்க் 7.43

ஐசிஐசிஐ பேங்க் 7.35

பவா் கிரிட் 4.79

பஜாஜ் ஃபின் சா்வ் 4.39

ஆக்ஸிஸ் பேங்க் 4.30

எஸ்பிஐ 4.08

ஹெச்சிஎல் டெக் 3.72

என்டிபிசி 3.72

பாா்தி ஏா்டெல் 3.63

கோட்டக் பேங்க் 3.24

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.