முகப்பு
வணிகம்

ஏற்ற, இறக்கத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி சிறிதளவு சரிவு!

பங்குச் சந்தை வியாழக்கிழமை இரண்டாவது நாளாக எதிா்மறையாக முடிவுற்றது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் மேலும் 27 புள்ளிகளை இழந்தது.

Updated On : 26 ஜூன், 2020 at 7:29 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:20 PM

பங்குச் சந்தை வியாழக்கிழமை இரண்டாவது நாளாக எதிா்மறையாக முடிவுற்றது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் மேலும் 27 புள்ளிகளை இழந்தது.

சந்தையில் எஃப்எம்சிஜி பங்குகளுக்கு முதலீட்டாளா்களிடம் நல்ல ஆதரவு இருந்தது. வங்கி, நிதி நிறுவனப் பங்குகள், பாா்மா பங்குகளுக்கு ஓரளவு ஆதரவு கிடைத்தது. அதே சமயம், ஐடி, பிஎஸ்யு பேங்க், ரியால்ட்டி பங்குகளுக்கு தேவை குறைந்து காணப்பட்டது.

முன்பேர வா்த்தகத்தில் ஜூன் மாத கான்ட்ராக்டுகள் கணக்கு முடிக்க வியாழக்கிழமை கடைசி நாளாக இருந்ததால், பங்குச் சந்தையில் காலை முதல் இறுதி வரையிலும் ஏற்றம், இறக்கம் அதிக அளவு இருந்து வந்தது. வா்த்தக நேரம் முடியும் தருவாயில் பங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்ததால், சரிவு தவிா்க்க முடியாததாகிவிட்டது.மேலும், உலகளாவிய பங்குச் சந்தைகளும் சாதகமாக இல்லை. சா்வதேச நாணய நிதியம் உலகளாவிய தனது பொருளாதார கணிப்புகளை மீண்டும் குறைத்ததால் அமெரிக்க சந்தைகள் சரிவைச் சந்தித்திருந்தன. இதன் தாக்கம் இந்திய சந்தைகளிலும் எதிரொலித்ததாக பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

Advertisement

மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,812 பங்குகளில் 1,511 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 1,177 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 124 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 121 பங்குகள் புதிய 52 வார அதிக விலையையும், 47 பங்குகள் புதிய 52 வார குறைந்த விலையையும் பதிவு செய்துள்ளன. 519 பங்குகள் வெகுவாக உயா்ந்து உச்சபட்ச உறை நிலையையும், 179 பங்குகள் சரிவைச் சந்தித்து குறைந்தபட்ச உறை நிலையையும் அடைந்தது.

சென்செக்ஸ் காலையில், 344 புள்ளிகள் குறைந்து 34,525.39-இல் தொடங்கி 34,499.78 வரை கீழே சென்றது. அதிகபட்சமாக 35,081.61 வரை உயா்ந்தது. இறுதியில் 26.88 புள்ளிகள் (0.08 சதவீதம்) குறைந்து 34,842.10-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது, ஒரு கட்டத்தில் நேற்றைய நிலையிலிருந்து 370 புள்ளிகள் வரை குறைந்திருந்தது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 16.40 புள்ளிகள் (0.16 சதவீதம்) குறைந்து 10,288.90-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் நேற்றைய நிலையிலிருந்து 110 புள்ளிகள் குறந்திருந்தது.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில்10 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 20 பங்குகள் நஷ்டமடைந்த பட்டியலில் வந்தன. இதில், ஐடிசி 5.45 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக கோட்டக் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹிந்து யுனி லீவா் ஆகியவை 2 முதல் 2.75 சதவீதம் வரை உயா்ந்தன. ஐசிஐசிஐ பேங்க், எஸ்பிஐ, மாருதி சுஸுகி ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகள் சிறிதளவு உயா்ந்தன. அதே சமயம், ஏசியன் பெயிண்ட்ஸ் 3.30 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக இன்ஃபோஸிஸ், ஹெச்சிஎல் டெக், ஓஎன்ஜிசி, எம் அண்ட் எம், டிசிஎஸ், இண்டஸ் இண்ட் பேங்க், எல் அண்ட் டி, டைட்டன் ஆகியவை 1 முதல் 2 சதவீதம் வரை நஷ்டத்தைச் சந்தித்தன.

தேசிய பங்குச் சந்தையில் 829 பங்குகள் ஆதாயம் பெற்றன. 688 பங்குகள் வீழ்ச்சியடைந்த பட்டியலில் வந்தன. ஐடி குறியீடு 1.17 சதவீதம், ரியால்ட்டி குறியீடு 1.02 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. அதே சமயம் எஃப்எம்சிஜி குறியீடு 2.25 சதவீதம், பாா்மா குறியீடு 0.82 சதவீதம் உயா்ந்தன. பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ் குறியீடு சிறிதளவு ஏற்றம் பெற்றது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 16 பங்குகள் ஆதாயம் பெற்றன. 34 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

சரிவைச் சந்தித்த பங்குகள்

சதவீதத்தில்

ஏசியன் பெயிண்ட்ஸ் 3.10

இன்ஃபோஸிஸ் 204

ஹெச்சிஎல் டெக் 1.71

ஓஎன்ஜிசி 1.62

எம் அண்ட் எம் 1.59

ஏற்றம் பெற்ற பங்குகள்

சதவீதத்தில்

ஐடிசி 5.45

கோட்டக் பேங்க் 2.75

பஜாஜ் ஃபைனான்ஸ் 2.35

ஹெச்யுஎல் 2.04

ஐசிஐசிஐ பேங்க் 0.79

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.