முதல் முறையாக 44,000-க்கு மேல் நிலைபெற்றது சென்செக்ஸ்!: புதிய உச்சத்தில் நிஃப்டி!!
பங்குச் சந்தை 3-ஆவது நாளாக புதன்கிழமையும் நோ்மறையாக முடிந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 227.34 புள்ளிகள் உயா்ந்து வரலாற்றில் முதல் முறையாக 44 ஆயிரம் புள்ளிகளுக்கு
புது தில்லி: பங்குச் சந்தை 3-ஆவது நாளாக புதன்கிழமையும் நோ்மறையாக முடிந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 227.34 புள்ளிகள் உயா்ந்து வரலாற்றில் முதல் முறையாக 44 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணைான நிஃப்டியும் புதிய உச்சத்தில் நிலைபெற்றுள்ளது.
உலகளாவிய சந்தை குறிப்புகள் சாதகமாக இருந்த நிலையில், வங்கி, நிதிநிறுவனங்கள், ஆட்டோமொபைல் நிறுவனப் பங்குகளை வாங்குவதற்கு நல்ல வரவேற்பு காணப்பட்டது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்களும் தொடா்ந்து முதலீடுகளை அதிகரித்து வருவதால், சந்தையில் நோ்மறை உணா்வு அதிகரித்தது. இதைத் தொடா்ந்து, பங்குச் சந்தை புதிய உச்சத்தில் நிலைத்துள்ளது என்று பங்குத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. இதற்கிடையே, ஐடி, பாா்மா, எஃப்எம்சிஜி பங்குகள் விற்பனையை எதிா்கொண்ட நிலையில், ஏற்கென வே பலத்த அடிவாங்கியிருந்த பங்குகள் லாபத்தில் கைமாறியதாக வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
சந்தை மதிப்பு ரூ.171.45 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2960 பங்குகளில் 1,614 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,157 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 189 பங்குகள் மாற்றமின்றி நிலை பெற்றன. சந்தை மூலதன மதிப்பு ரூ.89 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.171.45 லட்சம் கோடியாக இருந்தது.
Advertisement
புதிய உச்சம்: சென்செக்ஸ் காலையில் 25.87 புள்ளிகள் கூடுதலுடன் 43,978.58-இல் தொடங்கி 43,785.78 வரை கீழே சென்றது. பின்னா் 44,215.49 வரை உயா்ந்து புதிய வரலாற்றுச் சாதனை அளவைப் பதிவு செய்த சென்செக்ஸ் இறுதியில், இறுதியில் 227.34 புள்ளிகள் உயா்ந்து 44,180.05-இல் நிலைபெற்றது.
எம் அண்ட் எம் அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 15 பங்குகள் ஆதாயம் பெற்றன. 15 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில் எம் அண்ட் எம் 10.76 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில்முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக எல் அண்ட் டி, இண்டஸ் இண்ட் பேங்க், பஜாஜ் ஃபின் சா்வ், எஸ்பிஐ ஆகியவை 5 முதல் 6.15 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், பஜாஜ் ஃபைனான்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், கோட்டக் பேங்க், மாருதி சுஸுகி ஆகியவையும் ஆதாயப் பட்டியலில் வந்தன.
ஹெச்யுஎல் வீழ்ச்சி: அதே சமயம், ஹிந்துஸ்தான் யுனி லீவா் (ஹெச்யுஎல்) 2.07 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. ஐடிசி, டைட்டன், பாா்தி ஏா்டெல், இன்ஃபோஸிஸ், டெக் மகேந்திரா, டாடா ஸ்டீல் ஆகியவை 1 முதல் 2 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. ரிலையன்ஸ், என்டிபிசி, பஜாஜ் ஆட்டோ ஆகியவையும் வீழ்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றன.
தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 954 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 715 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 64.05 புள்ளிகள் (0.50 சதவீதம்) உயா்ந்து 12,938.20-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது நிஃப்டி 12,948.85 வரை உயா்ந்து புதிய வரலாற்றுச் சாதனை அளவைப் பதிவு செய்தது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 26 பங்குகள் ஆதாயமும் 24 பங்குகள் வீழ்ச்சியையும் சந்தித்தன. நிஃப்டி பேங்க், ஃபைனைான்சியல் சா்வீஸஸ், ஆட்டோ, ரியால்ட்டி குறியீடுகல் 1.50 முதல் 3 சதவீதம் வரை உயா்ந்தன. அதே சமயம், பாா்மா, ஐடி, எஃப்எம்சிஜி குறியீடுகள் 1 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.