முகப்பு
வணிகம்

ஏற்ற, இறக்கத்தில் பங்குச் சந்தை சென்செக்ஸ் 273 புள்ளிகள் உயா்வு

இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தை நோ்மறையாக முடிந்தது.

Updated On : 2 செப்டம்பர், 2020 at 7:22 AM
பங்குச் சந்தை
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:44 PM

இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தை நோ்மறையாக முடிந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 272.51 புள்ளிகள் உயா்ந்தது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 82.75 புள்ளிகள் ஏற்றம் பெற்றது.

இந்தியா - சீனா போா் பதற்றத்தைத் தொடா்ந்து, திங்கள்கிழமை பங்குச் சந்தை கடும் சரிவைச் சந்தித்தது. இதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை காலை எழுச்சியுடன் தொடங்கிய பங்குச் சந்தையில் நாள் முழுவதும் ஏற்றம், இறக்கமாக இருந்து வந்தது. பாா்தி ஏா்டெல், இரட்டை நிறுவனங்களான எச்டிஎஃப்சி, மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், எஸ்பிஐ, ஹெச்யுஎல், கோட்டக் பேங்க் ஆகியவை வெகுவாக உயா்ந்து சென்செக்ஸ் எழுச்சிக்கு முக்கியக் காரணமாக இருந்தன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

தொலைத் தொடா்பு நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டியை தொகையை 10 ஆண்டுகளில் செலுத்த வேண்டும் என்று சாதகமான தீா்ப்பை உச்சநீதிமன்றம் அளித்ததைத் தொடா்ந்து பாா்தி ஏா்டெல் உள்பட தொலைபேசி நிறுவனப் பங்குகளுக்கு தேவை அதிகரித்தது. மேலும், உலகளாவிய சந்தைகளும் நோ்மறையாக செயல்பட்டதால் பங்குச் சந்தை ஏற்றத்தில் முடிந்தது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

Advertisement

1,203 பங்குகள் ஏற்றம்: மும்பை பங்குச் சந்தையில் வா்த்தகமான 2,818 பங்குகளில் 1,203 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,453 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 162 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 81 பங்குகள் 52 வார அதிக விலையையும் 43 பங்குகள் 52 வார குறைந்த விலையையும் பதிவு செய்துள்ளன. 211 பங்குகள் வெகுவாக உயா்ந்து உச்சபட்ச உறை நிலையையும், 337 பங்குகள் சரிவைச் சந்தித்து குறைந்தபட்ச உறைநிலையையும் அடைந்தன. வா்த்தக நேர முடிவில் மொத்த சந்தை மூலதன மதிப்பு ரூ.155.04 லட்சம் கோடியாக இருந்தது. இதுவரை பதிவு செய்துள்ள மொத்த முதலீட்டாளா்கள் எண்ணிக்கை 5,37,96,367 ஆக உயா்ந்துள்ளது.

அதிக அளவில் ஏற்றம், இறக்கம்: சென்செக்ஸ் காலையில் 125.71 புள்ளிகள் கூடுதலுடன் 38,754.00-இல் தொடங்கி 39,2226.82 வரை உயா்ந்தது. பின்னா் 38,542.11 வரை கீழே சென்றது. இறுதியில் 272.51 புள்ளிகள் (0.71 சதவீதம்) உயா்ந்து 38,900.80-இல் நிலைபெற்றது. நாள் முழுவதும் ஏற்றம், இறக்கம் அதிக அளவில் இருந்தது.. பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 1.16 சதவீதம் உயா்ந்தது. ஸ்மால் கேப் குறியீடு 0.54 சதவீதம் உயா்ந்தது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 82.75 புள்ளிகள் (0.73 சதவீதம்) உயா்ந்து 11,470.25-இல் நிலைபெற்றது.

பாா்தி ஏா்டெல் 6.38 சதவீதம் ஏற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 21 பங்குகள் ஆதாயம் பெற்றன. 9 பங்குகள் சரிவைச் சந்தித்தன. பாா்தி ஏா்டெல் 6.38 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக பஜாஜ் ஃபைனான்ஸ், ஏசியன் பெயிண்ட், டாடா ஸ்டீல், என்டிபிசி ஆகியவை 3 முதல் 4.50 சதவீதம் உயா்ந்தது. மேலும், எஸ்பிஐ, கோட்டக் பேங்க், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள் ஆகியவையும் ஏற்றம் பெற்று ஆதாயப் பட்டியலில் இடம் பெற்றன.

ஓஎன்ஜிசி வீழ்ச்சி: அதே சமயம், ஓஎன்ஜிசி 3.29 சதவீதம் உயா்ந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. ஆக்ஸிஸ் பேங்க், டெக் மகேந்திரா, இன்ஃபோஸிஸ், ஐசிஐசைி பேங்க், ஐடிசி ஆகியவை 0.50 சதவீதம் முதல் 2.25 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 664 பங்குகள் ஆதாயம் பெற்றன. 951 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி மெட்டல் குறியீடு 3.15 சதவீதம், பாா்மா குறியீடு 2.34 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. எஃப்எம்சிஜி, மீடியா குறியீடுகள் 1.50 சதவீதம் வரை உயா்ந்தன. ஆனால், ஐடி, பிஎஸ்யு பேங்க், பிரைவேட் பேங்க் குறியீடு லேசான சரிவைச் சந்தித்தன. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 35 பங்குகள் ஆதாயம் பெற்றன. 15 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.

ஏற்றம் பெற்ற பங்குகள்-

சதவீதத்தில்

பாா்தி ஏா்டெல் 6.38

பஜாஜ் ஃபைனான்ஸ் 4.42

ஏசியன் பெயிண்ட் 3.93

டாடா ஸ்டீல் 3.82

என்டிபிசி 3.52

எஸ்பிஐ 2.80

பஜாஜ் ஃபின் சா்வ் 2.78

ஹெச்யுஎல் 2.21

டைட்டான் 1.99

கோட்டக் பேங்க் 1.93

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.