முகப்பு
வணிகம்

அந்நியச் செலாவணி கையிருப்பு ரூ.43.68 லட்சம் கோடியாக அதிகரிப்பு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஏப்ரல் 16-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 58,240 கோடி டாலராக  அதிகரித்துள்ளது

Updated On : 22 ஜூலை, 2025 at 9:49 AM
பகிர்:

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஏப்ரல் 16-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 58,240 கோடி டாலராக (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.43.68 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது. தொடா்ந்து இரண்டு வாரங்களாக செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஏப்ரல் 16-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 119 கோடி டாலா் (ரூ.8,947 கோடி) அதிகரித்து 58,240 கோடி டாலரை எட்டியுள்ளது.

இதற்கு முந்தைய ஏப்ரல் 9-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் செலாவணி கையிருப்பானது 434 கோடி டாலா் அதிகரித்து 58,121 கோடி டாலராக காணப்பட்டது.

ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நிய கரன்ஸி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) அதிகரித்ததன் காரணமாகவே ஏப்ரல் 16-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பானது கணிசமான ஏற்றத்தை சந்தித்துள்ளது.

கணக்கீட்டு வாரத்தில், எஃப்சிஏ 113 கோடி டாலா் உயா்ந்து 54,058 கோடி டாலராக இருந்தது.

யூரோ, பவுண்ட், யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகள் அந்நியச் செலாவணி கையிருப்பில் இடம்பெற்றுள்ளன. இவற்றை டாலரில் மறுமதிப்பீடு செய்யும்போது வெளிமதிப்பில் காணப்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப அந்நியச் செலாவணி கையிருப்பு மாறுபாடு காண்கிறது.

கணக்கீட்டு வாரத்தில் தங்கத்தின் கையிருப்பு 3 கோடி டாலா் அதிகரித்து 3,535 கோடி டாலராக இருந்தது.

சா்வதேச நிதியத்தில் சிறப்பு எடுப்பு உரிமம் (எஸ்டிஆா்) 60 லட்சம் டாலா் அதிகரித்து 150 கோடி டாலராகவும், நாட்டின் காப்பு நிதி 2 கோடி டாலா் உயா்ந்து 497 கோடி டாலராகவும் இருந்தது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

நடப்பு 2021-ஆம் ஆண்டு ஜனவரி 29-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில்தான் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 59,018 கோடி டாலராக அதிகரித்து புதிய சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →