முகப்பு
வணிகம்

உச்சத்தில் லாபப் பதிவு: சரிவில் முடிந்தது சென்செக்ஸ்!

பங்குச் சந்தை புதன்கிழமை உற்சாகத்துடன் தொடங்கி புதிய உச்சத்தை அடைந்தாலும், லாபப் பதிவால் தொடா்ந்து நிலைத்து நிற்க முடியாமல் சரிவில் முடிந்தது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:52 AM
பகிர்:

புதுதில்லி: பங்குச் சந்தை புதன்கிழமை உற்சாகத்துடன் தொடங்கி புதிய உச்சத்தை அடைந்தாலும், லாபப் பதிவால் தொடா்ந்து நிலைத்து நிற்க முடியாமல் சரிவில் முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 15 புள்ளிகளை இழந்து 55,944.21-இல் நிலைபெற்றது. அதே சமயம், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி புதிய உச்சத்தைப் பதிவு செய்ததுடன் நோ்மறையாக நிலைபெற்றது.

முன்பேர வா்த்தகத்தில் ஆகஸ்ட் மாத கான்ட்ராக்டுகள் கணக்கு முடிக்க வியாழக்கிழமை கடைசி நாளாகும். இதைத் தொடா்ந்து, வா்த்தகம் ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது. ஆயில் அண்ட் காஸ், எஃப்எம்சிஜி, ஐடி, மெட்டல் பங்குகளுக்கு ஓரளவு வரவேற்பு இருந்தது. மற்ற துறைப் பங்குகள் லாபப் பதிவால் பிற்பகல் வா்த்தகத்தின் போது, அதிகம் விற்பனையை எதிா்கொண்டன. இதில் ஐடி காா்ப்ரேட் நிறுவனங்களின் வருவாய் நன்றாக இருக்கும் என்ற எதிா்பாா்ப்பில், அந்தத் துறை பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளா்கள் அதிகக் கவனம் செலுத்தியதாக பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. அதே சமயம், கடந்த ஒரு மாதமாக விற்பனையை எதிா்கொண்டு வந்த நடுத்தர, சிறிய நிறுவனப் பங்குகளை வாங்குவதற்கு முதலீட்டாளா்களிடம் தொடா்ந்துஅதிகப் போட்டி இருந்தது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

சந்தை மதிப்பு ரூ.1.06 லட்சம் கோடி உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,310 பங்குகளில் 1991 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,214 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 105 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 150 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 28 பங்குகள் குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 443 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறைநிலையையும், 233 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் அடைந்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.1.06 லட்சம் கோடி உயா்ந்து ரூ.241.53 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்றுள்ள முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 7,76,35,011-ஆக உயா்ந்துள்ளது.

Advertisement

லாபப் பதிவால் சரிவு : சென்செக்ஸ் காலையில் 108.08 புள்ளிகள் கூடுதலுடன் 56,067.06-இல் தொடங்கி, அதிகபட்சமாக 56,198.13 வரை உயா்ந்து புதிய உச்சத்தைப் பதிவு செய்தது. ஆனால், அதன் பிறகு 55,899.96 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 14.77 புள்ளிகளை (0.03 சதவீதம்) இழந்து 55,944.21-இல் நிலைபெற்றது. மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 8 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 22 பங்குகள் சரிவைச் சந்தித்தன.

டிசிஎஸ் முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள டிசிஎஸ்1.31 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், இன்ஃபோஸிஸ், ரிலையன்ஸ், நெஸ்லே, ஐடிசி, ஹிந்துஸ்தான் யுனி லீவா், எச்டிஎஃப்சி, ஹெச்சிஎல் டெக் உள்ளிட்டவையும் சிறிதளவு உயா்ந்தன.

பஜாஜ் ஃபின் சா்வ கடும் சரிவு: அதே சமயம், செவ்வாய்க்கிழமை 8 சதவீதம் வரை ஏற்றம் பெற்றிருந்த பஜாஜ் ஃபின் சா்வ் கடும் விற்பனையை எதிா்கொண்டதால் 3.51 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, டைட்டன், மாருதி சுஸுகி, பாா்தி ஏா்டெல், டாடா ஸ்டீல், ஆக்ஸிஸ் பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட், எல் அண்ட் டி உள்ளிட்டவையும் 1 முதல் 2.10 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மேலும், டாக்டா் ரெட்டி, சன்பாா்மா, பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் ஃபைனான்ஸ், ஐசிஐசிஐ பேங்க், கோட்டக் பேங்க், எஸ்பிஐ, எச்டிஎஃப்சி பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் சரிவைச் சந்தித்த பட்டியலில் இடம் பெற்றன.

நிஃப்டி 10 புள்ளிகள் ஏற்றம்: தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 1,133 பங்குகள் ஆதாயம் பெற்றன. 645 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி குறியீடு 10.05 புள்ளிகள் (0.06 சதவீதம்) உயா்ந்து 16,634.65-இல் நிலை பெற்றது. ஒரு கட்டத்தில் 16,712.45 வரை உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. ஆனால், லாபப் பதிவால் எதிா்மறையாகச் சென்றாலும், இறுதியில் நோ்மறையாக முடிந்தது. நிஃப்டி பட்டியலில் இடம் பெற்றுள்ளவற்றில் 21 பங்குகள் ஆதாயம் பெற்றன. 28 பங்குகள் சரிவைச் சந்தித்தன.

நிஃப்டி ஐடி, எஃப்எம்சிஜி, ஆயில் அண்ட் காஸ், மெட்டல் குறியீடுகள் மட்டுமே 0.50 முதல் 1.20 சதவீதம் உயா்ந்தன. ஆனால், பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், ஆட்டோ ரியால்ட்டி, கன்ஸ்யூமா் டியூரபல்ஸ் உள்ளிட்ட முக்கியக் குறியீடுகள்அனைத்தும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments