உச்சத்தில் லாபப் பதிவு: பங்குச்சந்தையில் லேசான சரிவு
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது.
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்த சில நிமிடங்களிலேயே லாபப் பதிவு வந்ததால் இறுதியில் லேசான சரிவுடன் முடிவுற்றன.
பங்குச் சந்தையில் அனைவரும் வெகுவாக எதிர்பார்த்திருந்த பிரேக் அவுட் திங்கள்கிழமை நிகழ்ந்தது. இதைத் தொடர்ந்து அதற்கு அடுத்த நாளான செவ்வாய்க்கிழமை காலையில் வர்த்தகம் உச்சத்தில் தொடங்கியது. உலகளாவிய சந்தை குறிப்புகள் சாதகமில்லாத நிலையில், லாபப் பதிவால் காலையில் பெற்ற லாபம் அனைத்தையும் வர்த்தக முடிவில் இழக்க நேரிட்டது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
மேலும், குறிப்பிட்ட சில பொதுத் துறை வங்கிப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. தனியார்மயமாக்கப்படவுள்ளதாகக் கூறப்பட்டுள்ள ஐஓபி, பேங்க் ஆஃப் இந்தியா, சென்ட்ரல் பேங்க், மகாராஷ்டிரா பேங்க் ஆகியவை உச்சபட்ச உறை நிலையான 20 சதவீதம் வரை உயர்ந்தன என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
சந்தை மதிப்பு ரூ.205.80 லட்சம் கோடி:
மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகமான 3,144 பங்குகளில் 1,348 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,628 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 168 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. சந்தை மதிப்பு ரூ.64 ஆயிரம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.205.80 லட்சம் கோடியாக இருந்தது. 299 பங்குகள் புதிய 52 வார அதிபட்ச விலைலையப் பதிவு செய்துள்ளன. 311 பங்குகள் வெகுவாக உயர்ந்து உறை நிலையை
(அப்பர் சர்க்யூட்) அடைந்தன.
உச்சத்தில் லாபப் பதிவு: சென்செக்ஸ் காலையில் 245.90 புள்ளிகள் உயர்ந்து 52,400.03-இல் தொடங்கியது. அதிகபட்சமாக 52,516.76 வரை உயர்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. பின்னர், லாபப் பதிவால் 51,863.61 வரை கீழே சென்றது. இறுதியில் 49.96 புள்ளிகள் சரிவடைந்து 52,104.17 -இல் நிலைபெற்றது.
பவர் கிரிட் அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 14 பங்குகள் ஆதாயம் பெற்றன. 16 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. இதில் பவர் கிரிட் 6.24 சதவீதம், ஓஎன்ஜிசி 5.44 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக என்டிபிசி, கோட்டக் பேங்க், ரிலையன்ஸ், மாருதி, அல்ட்ரா டெக் சிமெண்ட் ஆகியவை 1 முதல் 3 சதவீதம் வரை உயர்ந்தன. எல்அண்ட் டி, எச்டிஎஃப்சி பேங்க் ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன.
ஆக்ஸிஸ் பேங்க் வீழ்ச்சி: அதேசமயம், ஆக்ஸிஸ் பேங்க் 2.42 சதவீதம் ஐசிஐசிஐ பேங்க் 2.30 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் இடம்பெற்றன. இதற்கு அடுத்ததாக, இன்ஃபோஸிஸ், நெஸ்லே இந்தியா, எஸ்பிஐ, டிசிஎஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், டைட்டன், பஜாஜ் ஃபின் சர்வ் ஆகியவை 0.50 முதல் 1.50 சதவீதம் வரை குறைந்தன.
தேசியப் பங்குச் சந்தையில்...: தேசியப் பங்குச் சந்தையில் 715 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,000 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. நிஃப்டி 1.25 புள்ளிகளை இழந்து 15,313.40-இல் நிலைபெற்றது.தொடக்கத்தில் 15,431.75 வரை உயர்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்த நிஃப்டி பின்னர் 15,242.20 வரை கீழே சென்றது.
மேலும், நிஃப்டி பேங்க் குறியீடு 3.32 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. நிஃப்டி மெட்டல் 2.89 சதவீதம், பிஎஸ்யு பேங்க் 1.65 சதவீதம் உயர்ந்தன. பார்மா, ரியால்ட்டி குறியீடுகள் சிறிதளவு உயர்ந்தன. மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.