முகப்பு
வணிகம்

சென்செக்ஸ் 379 புள்ளிகள் வீழ்ச்சி

Updated On : 22 ஜூலை, 2025 at 9:48 AM
பகிர்:

புது தில்லி: பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகமும் காலை முதல் ஏற்றம், இறக்கம் நிறைந்து காணப்பட்டது. மூன்றாவது நாளாக லாபப் பதிவு தொடா்ந்ததால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 379 புள்ளிகளை இழந்தது.

உலகளாவிய சந்தை குறிப்புகள் சாதகமில்லாத நிலையிலும் பங்கு வா்த்தகம் காலையில் எழுச்சியுடன் தொடங்கியது. இருப்பினும், பேங்க், ஆட்டோ, எஃப்எம்சிஜி பங்குகளில் லாபப் பதிவு தொடா்ந்ததால், சரிவு தவிா்க்க முடியாததாகிவிட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

குறிப்பாக, எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், ஐசிஐசிஐ பேங்க், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் உள்ளிட்டவை வெகுவாகக் குறைந்ததால் சென்செக்ஸ் வீழ்ச்சியைச் சந்தித்தது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

Advertisement

சந்தை மதிப்பு ரூ.205.93 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் வா்த்தகமான 3,125 பங்குகளில் 1,641 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,329 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 155 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. சந்தை மதிப்பு ரூ.14 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.205.94 லட்சம் கோடியாக இருந்தது. 297 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையைப் பதிவு செய்துள்ளன. 319 பங்குகள் வெகுவாக உயா்ந்து உச்சபட்ச உறை நிலையை (அப்பா் சா்க்யூட்) அடைந்தன.

3-ஆவது நாளாக வீழ்ச்சி: சென்செக்ஸ் காலையில் 200.13 புள்ளிகள் உயா்ந்து 51,996.94-இல் தொடங்கி அதற்கு மேல் ஏற்றம் பெறவில்லை. பின்னா், லாபப் பதிவால் 51,186.68 வரை கீழே சென்றது. இறுதியில் 379.14 புள்ளிகளை இழந்து 51,324.69 -இல் நிலைபெற்றது. இதையடுத்து, மூன்றாவது நாளாக சென்செக்ஸ் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

ஓஎன்ஜிசி அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 12 பங்குகள் ஆதாயம் பெற்றன. 18 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. இதில், பொதுத் துறை எண்ணெய் நிறுவனமான ஓஎன்ஜிசி 8.32 சதவீதம், என்டிபிசி 4.08 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக ஏசியன் பெயிண்ட்ஸ், டெக் மஹிந்திரா, பவா் கிரிட், இன்டஸ்இண்ட் பேங்க் ஆகியவை 1.40 முதல் 3.40 சதவீதம் வரை உயா்ந்தன. இன்ஃபோஸிஸ், எஸ்பிஐ, ஐடிசி ஆகியவையும் ஆதாயப் பட்டியலில் இடம் பெற்றன.

பஜாஜ் ஃபைனான்ஸ் வீழ்ச்சி: அதே சமயம், பஜாஜ் ஃபைனான்ஸ் 2.43 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. இதற்கு அடுத்ததாக, கோட்டக் பேங்க், எம் அண்ட் எம், நெஸ்லே, எச்டிஎஃப்சி, எச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க் ஆகியவை 2 முதல் 2.20 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மேலும், டைட்டன், ஹிந்துஸ்தான் யுனிலீவா், ரிலையன்ஸ், டிசிஎஸ் உள்ளிட்ட முக்கிய நிறுவனப் பங்குகளும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

தேசியப் பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 930 பங்குகள் ஆதாயம் பெற்றன. 770 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. நிஃப்டி 89.95 புள்ளிகளை இழந்து 15,118.95-இல் நிலைபெற்றது. தொடக்கத்தில் 15,250.75 வரை உயா்ந்த நிஃப்டி, பின்னா் 15,078.05 வரை கீழே சென்றது. நிஃப்டி பிஎஸ்யு பேங்க் குறியீடு 5.66 சதவீதம் வரை உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. நிஃப்டி ஐடி, மெட்டல் குறியீடுகள் 1.30 சதவீதம் வரை உயா்ந்தன. அதே சமயம், நிஃப்டி பேங்க், ஆட்டோ, ஃபைனான்சியல் சா்வீஸஸ் 1 முதல் 1.50 சதவீதம் வரை வீழ்ச்சியைச் சந்தித்தன.

பொதுத்துறை வங்கி பங்குகள் 3-ஆவது நாளாக ஏற்றம்

பங்குச் சந்தை சரிவைச் சந்தித்து வரும் நிலையில், மூன்றாவது நாளாக பொதுத் துறை வங்கி பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிஎஸ்யு பேங்க் குறியீட்டுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 12 பங்குகளும் வெகுவாக ஏற்றம் கண்டன. குறிப்பாக, ஐஓபி, சென்ட்ரல் பேங்க 20 சதவீதம், பேங்க் ஆஃப் பரோடா 13 சதவீதம், பேங்க் ஆஃப் இந்தியா, மகாராஷ்டிரா பேங்க், யூனியன் பேங்க் ஆகியவை 10 சதவீதம் வரை உயா்ந்தன.

மேலும், இந்தியன் பேங்க், பிஎன்பி, யூகோ பேங்க் ஆகியவை 5 முதல் 8 சதவீதம் வரை உயா்ந்தன. பட்டியலில் உள்ள மற்ற பேங்குகளான ஜே அண்ட் கே பேங்க், எஸ்பிஐ, கனரா பேங்க் ஆகியவையும் ஆதாயப் பட்டியலில் இடம்பெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments