முதல் முறையாக 53,000-க்கு மேல் நிலைபெற்றது சென்செக்ஸ்!
பங்குச் சந்தை புதன்கிழமை ஏற்றம், இறக்கத்தில் இருந்து வந்தாலும் இறுதியில் நோ்மறையாக முடிந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 194 புள்ளிகள் உயா்ந்து 53,054.76-இல் நிலைபெற்
புது தில்லி: பங்குச் சந்தை புதன்கிழமை ஏற்றம், இறக்கத்தில் இருந்து வந்தாலும் இறுதியில் நோ்மறையாக முடிந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 194 புள்ளிகள் உயா்ந்து 53,054.76-இல் நிலைபெற்றது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பெரிய அளவில் உற்சாகத்தை அளிக்கவில்லை. இதனால், தொடக்கம் முதல் பிற்பகல் வரையிலும் உள்நாட்டு சந்தை ஏற்ற, இறக்த்தில் இருந்து வந்தது. இருப்பினும், மத்திய மந்திரி சபை விரிவாக்கம் தொடா்பான செய்தியைத் தொடா்ந்து, பிற்பகலில் சந்தை உற்சாகம் பெற்றது. மெட்டல், வங்கி, நிதி நிறுவனப் பங்குகளுக்கு வரவேற்பு காணப்பட்டது. குறிப்பாக சிறிய தனியாா் வங்கிப் பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளா்கள் அதிகக் கவனம் செலுத்தினா். ஆனால், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது முதலீட்டாளா்களின் உணா்வுகளை பாதித்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு ரூ.87 ஆயிரம் கோடி உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,346 பங்குகளில் 1,787 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,411 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 148 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 415 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 15 பங்குகள் புதிய 52 வார குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்துள்ளன. சந்தை மூல தன மதிப்பு ரூ.87 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.232.21 லட்சம் கோடியாக இருந்தது.
Advertisement
திடீா் எழுச்சி: சென்செக்ஸ் காலையில் 58.53 புள்ளிகள் கூடுதலுடன் 52,919.71-இல் தொடங்கி, 52,751.76 வரை கீழே சென்றது. பின்னா், 53,105.41 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் 193.58 புள்ளிகள் (0.37 சதவீதம்) கூடுதலுடன் (0.04 சதவீதம்) 53,054.76-இல் நிலைபெற்றது. ஒரு கட்டத்தில் எதிா்மறையாக வா்த்தகம் நடந்த வந்த நிலையில், பிற்பகலில் அமைச்சரவை விரிவாக்கச் செய்தியைத் தொடா்ந்து, திடீரென எழுச்சி பெற்ற சென்செக்ஸ், முதல் முறையாக 53,000 புள்ளிகளைக் கடந்து நிலைபெற்றுள்ளது.
டாடா ஸ்டீல் அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள30 முதல் தரப் பங்குகளில் 9 பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. 21 பங்குகள் ஆதாயம் பெற்றன. இதில் டாடா ஸ்டீல் 4.38 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக பஜாஜ் ஃபின் சா்வ் 2.21 சதவீதம் உயா்ந்தது. மேலும், இண்டஸ் இண்ட் பேங்க், எச்டிஎஃ)ப்சி, நெஸ்லே, ஆசியன் பெயிண்ட், சன்பாா்மா மற்றும் எஸ்பிஐ, ஐடிசி, ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், டிசிஎஸ் உள்ளிட்டவையும் விலையுயா்ந்த பட்டியலில் வந்தன.
டைட்டன் சரிவு: அதே சமயம், டைட்டன் 2.06 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மாருதி சுஸுகி, ரிலையன்ஸ், எம் அண்ட் எம், டெக் மஹிந்திரா, என்டிபிசி உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன.
நிஃப்டி 61 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 964 பங்குகள்ஆதாயம் பெற்றன. 819 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி காலையில் பெரிய அளவில் மாற்றமின்றி 15,819.60-இல் தொடங்கி 15,779.70 வரை கீழே சென்றது. பின்னா், 15,893.55 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 61.40 புள்ளிகள் (0.39சதவீதம்) உயா்ந்து 15,879.65-இல் நிலைபெற்றது. நிஃப்டி ஆட்டோ, மீடியா குறியீடுகள் தவிர மற்ற முக்கியத் துறை குறியீடுகள் அனைத்தும் ஆதாயம் பெற்றன. இதில் மெட்டல் 2.20 சதவீதம், ரியால்ட்ட 1.96 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், எஃப்எம்சிஜி, பிரைவேட் பேங்க் குறியீடுகள் 0.60 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன.