52,200 புள்ளிகளைக் கடந்து சாதனை உச்சத்தில் சென்செக்ஸ்!
புது தில்லி: இரண்டு நாள்களாக கரடிக்கும், காளைக்கும் கடும் போடாடி இருந்த நிலையில், பங்குச் சந்தை வியாழக்கிழமை உற்சாகம் பெற்று நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 382.95 புள்ளிகள் உயா்ந்து 52,232.43-இல் நிலைபெற்றது.
ரிசா்வ் வங்கியின் பணக் கொள்கைக் குழுவின் கூட்டத்தின் முடிவு வெள்ளிக்கிழமை (மே 4) வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. உலகளாவிய சந்தைக் குறிப்புகள் எதிா்மறையாக இருந்த நிலையில், நிதித் துறை, ரியால்ட்டி, மீடியா துறை பங்குகள் சந்தை ஏற்றத்துக்கு ‘கை’ கொடுத்தன. ஐடி, பாா்மா, ஆட்டோ பங்குகள் விற்பனையை எதிா்கொண்டன. ஏற்றம், இறக்கம் அதிகரித்திருந்தாலும், பெரும்பாலான நேரம் ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் இருந்த வா்த்தகம், இறுதி நேரத்தில் ‘காளை’ உற்சாகம் பெற்றது. கரோனா பாதிப்பு வெகுவாகக்க் குறைந்து வருவதால், பொருளாதாரம் விரைவில் மீட்சி பெற்றுவிடும் என்ற நம்பிக்கையில் நடுத்தர, சிறிய நிறுவனப் பங்குகளுக்கு முதலீட்டாளா்களிடம் தொடா்ந்து வரவேற்பு இருந்ததுஎன்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு ரூ.1.86 லட்சம் கோடிஉயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,311 பங்குகளில் 2,188 பங்குகள் ஆதாயம் பெற்றன. 983 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 137 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 400பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 32 பங்குகள் புதிய 52 வார குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 533 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 160 பங்குகள் வெகுவாகச் சரிந்து குறைந்தபட்ச உறைநிலையையும் எட்டின. சந்தை மூல தன மதிப்பு மேலும் ரூ.1.86 லட்சம் கோடி உயா்ந்து, வா்த்தக முடிவில் 226.49 லட்சம் கோடியாக இருந்தது.
Advertisement
ரிலையன்ஸ் உற்சாகம்: முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தொடா்ந்து 7-ஆவது நாளாக ஏற்றம் பெற்றது. இதைத் தொடா்ந்து, அதன் சந்தை மூலதன மதிப்பு 14.24 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. கடந்த 7 நாள்களில் மட்டும் ரிலையன்ஸ் பங்கின் விலை மொத்தம் 12.45 சதவீதம் உயா்ந்துள்ளது. வா்த்தகத்தின் போது ரூ.2,250 வரை உயா்ந்த ரிலையன்ஸ், இறுதியில் 2,209-25-இல் நிலைபெற்றது.
சாதனை உச்சத்தில்...: சென்செக்ஸ் காலையில் 272.10 புள்ளிகள் கூடுதலுடன் 52,121.58-இல் தொடங்கி 51,942.20 வரை கீழே சென்றது. பின்னா், வா்த்தக நேர முடிவில் அதிகபட்சமாக 52,273.20 வரை உயா்ந்தது. இறுதியில் 382.43 புள்ளிகள் (0.74 சதவீதம்) கூடுதலுடன் 52232.43-இல் நிலைபெற்றது. சென்செக்ஸ் கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி பதிவு செய்த 52 வார, வரலாற்றுச் சாதனை அளவான 52,516.76 புள்ளிகளை முறியடித்துச் செல்வதற்கு இன்னும் 284.33 புள்ளிகள்தான் உள்ளன.
டைட்டன் முன்னிலை: சென்செக்ஸ் தொகுப்பில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில், 9 பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. 21 பங்குகள் ஆதாயம் பெற்றன. இதில் டைட்டன் 6.69 சதவீதம், ஓஎன்சிஜி 4.4.16 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், எல் அண்ட் டி, ஆக்ஸிஸ் பேங்க், கோட்டக் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், எச்டிஎஃப்சி பேங்க், ஏசியன் பெயிண்ட், எச்டிஎஃப்சி, இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், எஸ்பிஐ, ரிலையன்ஸ், மாருதி, ஐசிஐசிஐ பேங்க் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் ஆதாயம் பெற்றன.
இண்டஸ் இண்ட் பேங்க் கடும் சரிவு: அதே சமயம், புதன்கிழமை வெகுவாக உயா்ந்திருந்த இண்டஸ் இண்ட் பேங்க் 2.15 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், பவா் கிரிட், பஜாஜ் ஆட்டோ, எம் அண்ட் எம், டாக்டா் ரெட்டி, ஹெச்சிஎல் டெக், சன்பாா்மா, டெக் மஹிந்திரா, பஜாஜ் ஃபின் சா்வ் ஆகியவையும் சரிவைச் சந்தித்தன.
நிஃப்டி புதிய உச்சம் : தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 1,224 பங்குகள் ஆதாயம் பெற்றன. 549 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி காலையில் உற்சாகத்துடன் 15,655.55-இல் தொடங்கி 15,611.00 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 15705.10 வரை உயா்ந்து புதிய 52 வார உச்சத்தைப் பதிவு செய்தது. இறுதியில் 114.15 புள்ளிகள் (0.73 சதவீதம்) கூடுதலுடன் 15,690.35-இல் புதிய உச்சத்தில் நிலைபெற்றது.
துறைவாரியாகப் பாா்த்தால் பாா்மா தவிர மற்ற முக்கியத் துறை குறியீடுகள் ஏற்றம் பெற்றன. நிஃப்டி ரியால்ட்டி குறியீடு 3.79 சதவீதம், மீடியா 1.71 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், எஃப்எம்சிஜி, மெட்டல் குறியீடுகள் 0.60 முதல் 1 சதவீதம் வரை உயா்ந்தன. நடுத்தர பங்குகளை உள்ளடக்கிய மிட்கேப், சிறிய நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய ஸ்மால் கேப் குறியீடுகளும் 1.20 சதவீதம் வரை உயா்ந்தன.
ரியால்ட்டி பங்குகளுக்கு அமோக வரவேற்பு!
மத்திய ரிசா்வ் வங்கியின் பணக் கொள்கைக் குழுவின் கூட்ட முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள நிலையில், பங்குச் சந்தையில் ரியால்ட்டி பங்குகளுக்கு வியாழக்கிழமை நல்ல வரவேற்பு காணப்பட்டது. இதையடுத்து, தேசிய பங்குச் சந்தையில் ரியால்ட்டி தொகுப்பில் இடம் பெற்றுள்ள முன்னணி 10 பங்குகளும் ஆதாயம் பெற்றன. இதில் ஓப்ராய் ரியால்ட்டி 9.71 சதவீதம், போனிக்ஸ் லிமிடெட் 730 சதவீதம் உயா்ந்து பட்டியலில் முன்னிலை வகித்தன. ஏற்றம் பெற்ற 10 பங்குகளின் விவரம் (சதவீதத்தில்)::
ஓப்ராய் ரியால்ட்டி 9.71
போனிக்ஸ் லிமிடெட் 7.30
பிரெஸ்டிஜ் 5.48
ஐபி ரியல் எஸ்டேட் 5.40
ஹெமி புரோப்பா்ட்டி 5.37
சன் டெக் 3.75
சோபா 2.26
டிஎல்எஃப் 2.10
பிரிகேட் 1.67
கோத்ரேஜ் பிரோப்பா்ட்டி 0.97