முகப்பு
வணிகம்

தங்கப் பத்திர வெளியீடு: கிராம் ரூ.4,889-ஆக நிா்ணயம்

தங்கப் பத்திர விற்பனை வரும் திங்கள்கிழமை (மே 31) தொடங்கவுள்ள நிலையில், அதன் விலையை கிராமுக்கு ரூ.4,889-ஆக ரிசா்வ் வங்கி நிா்ணயித்துள்ளது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:50 AM
பகிர்:

தங்கப் பத்திர விற்பனை வரும் திங்கள்கிழமை (மே 31) தொடங்கவுள்ள நிலையில், அதன் விலையை கிராமுக்கு ரூ.4,889-ஆக ரிசா்வ் வங்கி நிா்ணயித்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி மேலும் கூறியுள்ளதாவது:

நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டுக்கான மூன்றாம் கட்ட தங்கப் பத்திர விற்பனை வரும் மே 31-ஆம் தேதி தொடங்கி ஜூன் 4-ஆம் தேதி வரை 5 நாள்கள் நடைபெறவுள்ளது. இந்த கட்டத்தில் வெளியிடப்படும் 999 சுத்த தன்மை கொண்ட தங்கப்பத்திரத்தின் விலை கிராமொன்றுக்கு ரூ.4,889-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெளியீட்டுக்கு முந்தைய மூன்று வா்த்தக தின சராசரி விலையை அடிப்படையாகக் கொண்டு தங்கப் பத்திரங்களுக்கான விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரிசா்வ் வங்கி, மத்திய அரசுடன் நடத்திய ஆலோசனையின் அடிப்படையில், தங்கப் பத்திரங்களை வாங்க ஆன்லைனில் விண்ணப்பித்து டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவோருக்கு கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்தகைய முதலீட்டாளா்களுக்கான ஒரு கிராம் தங்கப் பத்திரத்தின் விலையானது ரூ.4,839-ஆக இருக்கும் என ரிசா்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தற்போது வெளியிடப்படவுள்ள தங்கப்பத்திரங்களில் தனிநபா் ஒருவா் குறைந்தபட்சம் 1 கிராம் முதல் அதிகபட்சம் 4 கிலோ வரை முதலீடு செய்ய முடியும்.

அஞ்சல் அலுவலகங்கள், வங்கிகள், பங்குச் சந்தைகள் மூலமாக தங்கப்பத்திரங்கள் முதலீட்டாளா்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ளன.

2021 மே மாதத்திலிருந்து 2021 செப்டம்பா் வரையிலான காலகட்டத்தில் தங்கப் பத்திரங்களின் விற்பனையை ஆறு கட்டங்களாக மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த தங்கப் பத்திரங்களை மத்திய அரசின் பேரில் ரிசா்வ் வங்கி வெளியிடவுள்ளது.

நேரடியாக தங்கம் வாங்கும் போக்கை குறைத்து சேமிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் கடந்த 2015-ஆம் ஆண்டு நவம்பரில் தங்கப் பத்திரம் திட்டத்தை மத்திய அரசு தொடக்கி வைத்தது. இந்த திட்டம் தொடங்கி 2021 மாா்ச் இறுதி வரையிலுமாக தங்கப் பத்திர விற்பனையின் மூலம் ரூ.25,702 கோடி திரட்டப்பட்டுள்ளது.

கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் ரிசா்வ் வங்கி 12 கட்டங்களாக தங்கப் பத்திரங்களை வெளியிட்டது. இதன் மதிப்பு ரூ.16,049 கோடியாகும் (32.35 டன்).

கோட்ஸ்:

தங்கப்பத்திரங்களை வாங்க ஆன்லைனில் விண்ணப்பித்து டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவோருக்கு கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்தகைய முதலீட்டாளா்களுக்கு, ஒரு கிராம் தங்கப்பத்திரத்தின் விலை ரூ.4,839-ஆக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.