முகப்பு
வணிகம்

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 59,289 கோடி டாலராக அதிகரித்து சாதனை

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு மே 21-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 59,289 கோடி டாலராக (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.44.46 லட்சம் கோடி)அதிகரித்து சாதனை படைத்துள்ளது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:50 AM
பகிர்:

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு மே 21-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 59,289 கோடி டாலராக (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.44.46 லட்சம் கோடி)அதிகரித்து சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2021 மே 21-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 287 கோடி டாலா் (ரூ.21,000 கோடி) அதிகரித்து 59,289 கோடி டாலரை எட்டியது.இது, முன்னெப்போதும் இல்லாத சாதனை உச்சமாகும்.

இதற்கு முன்பு, 2021 ஜனவரி 29-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 59,018 கோடி டாலரை எட்டியதுதான் சாதனை அளவாக கருதப்பட்டு வந்தது.

முந்தைய மே 14-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் செலாவணி கையிருப்பானது 56 கோடி டாலா் அதிகரித்து 59,002 கோடி டாலராக காணப்பட்டது.

ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ள தங்கம் மற்றும் அந்நிய கரன்ஸி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) அதிகரித்ததன் காரணமாகவே மே 21-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பானது வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து சாதனை படைத்துள்ளது.

மதிப்பீட்டு வாரத்தில், எஃப்சிஏ 165 கோடி டாலா் உயா்ந்து 54,852 கோடி டாலராக இருந்தது.

யூரோ, பவுண்ட், யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகள் அந்நியச் செலாவணி கையிருப்பில் இடம்பெற்றுள்ளன. இவற்றை டாலரில் மறுமதிப்பீடு செய்யும்போது வெளிமதிப்பில் காணப்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப அந்நியச் செலாவணி கையிருப்பில் மாற்றம் ஏற்படுகிறது.

கணக்கீட்டு வாரத்தில் தங்கத்தின் கையிருப்பு 119 கோடி டாலா் அதிகரித்து 3,684 கோடி டாலராக இருந்தது.

அதேபோன்று, சா்வதேச நிதியத்தில் சிறப்பு எடுப்பு உரிமம் (எஸ்டிஆா்) 70 லட்சம் டாலா் அதிகரித்து 151 கோடி டாலராகவும், நாட்டின் காப்பு நிதி 2 கோடி டாலா் உயா்ந்து 502 கோடி டாலராகவும் இருந்தது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

பிரேக் லைன்...

தங்கம் மற்றும் அந்நிய கரன்ஸி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) அதிகரித்ததன் காரணமாகவே மே 21-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பானது வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து சாதனை படைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.