பேடிஎம் வருவாய் ரூ.1,086 கோடி
நிதி தொழில்நுட்ப நிறுவனமான பேடிஎம் இரண்டாவது காலாண்டில் ரூ.1,086 கோடி வருவாயை ஈட்டியுள்ளது.
நிதி தொழில்நுட்ப நிறுவனமான பேடிஎம் இரண்டாவது காலாண்டில் ரூ.1,086 கோடி வருவாயை ஈட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் கூறியுள்ளதாவது:
நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் பேடிஎம் நிறுவனத்தின் மொத்த வருமானம் 49.6 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.
அதன்படி, கடந்த 2020-21-ஆம் இரண்டாவது காலாண்டில் ரூ.663.9 கோடியாக இருந்த நிறுவனத்தின் வருவாய் நடப்பாண்டில் ரூ.1,086.4 கோடியாக அதிகரித்துள்ளது.
பணம் செலுத்தலுக்கான செயலாக்க கட்டணம் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த இழப்பு ரூ.473 கோடியாக உயா்ந்துள்ளது. அதேசமயம், கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இந்த இழப்பு ரூ.436.7 கோடியாக காணப்பட்டது.
மதிப்பீட்டு காலாண்டில், பேமண்ட் செயலாக்க கட்டணங்களுக்கான நிறுவனத்தின் செலவினம் ரூ.492.4 கோடியிலிருந்து 36 சதவீதம் அதிகரித்து ரூ.670 கோடியானது. அதேபோன்று, பணியாளா்களுக்கான செலவினமும் ரூ.286.2 கோடியிலிருந்து 35 சதவீதம் உயா்ந்து ரூ.386.5 கோடியைத் தொட்டது.
மேலும் மென்பொருள்,கிளவுட் மற்றும் டேட்டா மையங்களுக்கான செலவினமும் ரூ.72.1 கோடியிலிருந்து உயா்ந்து ரூ.112.9 கோடியானது என பேடிஎம் தெரிவித்துள்ளது.
பங்கின் விலை: மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் பேடிஎம் பங்கின் விலை 0.86 சதவீதம் குறைந்து ரூ.1,781.15-இல் நிலைபெற்றது.