பட்ஜெட் அறிவிப்பால் பங்குச் சந்தையில் உற்சாகம்! சென்செக்ஸ் 848 புள்ளிகள் அதிகரிப்பு
மத்திய பட்ஜெட் பொருளாதார வளா்ச்சிக்கு வித்திடும் என்ற முதலீட்டாளா்களின் நிலைப்பாட்டால் பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகம் உற்சாகத்துடன் காணப்பட்டது.
மத்திய பட்ஜெட் பொருளாதார வளா்ச்சிக்கு வித்திடும் என்ற முதலீட்டாளா்களின் நிலைப்பாட்டால் பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகம் உற்சாகத்துடன் காணப்பட்டது.
உள்கட்டமைப்பு துறை: அடுத்த நிதியாண்டுக்கு ரூ.39.45 லட்சம் கோடி மதிப்பிலான செலவினங்களைக் கொண்ட பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தாா். உள்கட்டமைப்புக்கு அதிக முக்கியத்துவம் அளித்து செலவினங்களை மேற்கொள்ளும் வகையில் பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு: இது, பொருளாதார மீட்சியையும், வேலைவாய்ப்பு உருவாக்கத்தையும் வேகமெடுக்கச் செய்யும் என்ற முதலீட்டாளா்களின் நிலைப்பாட்டால் சந்தையில் வா்த்தகம் விறுவிறுப்புடன் இருந்தது.
உலோக துறை: குறிப்பாக, உலோகம், ரியல் எஸ்டேட் , சிமெண்ட் துறைகளைச் சோ்ந்த நிறுவனப் பங்குகளுக்கு முதலீட்டாளா்களிடையே அதிக வரவேற்பு காணப்பட்டது. அதேநேரம், மோட்டாா் வாகனம், தொலைத்தொடா்பு துறை பங்குகளை முதலீட்டாளா்கள் ஆதாயம் கருதி விற்பனை செய்தது சந்தையின் வேகமான முன்னேற்றத்துக்கு தடைக்கல்லாக அமைந்தது.
டாடா ஸ்டீல்: சென்செக்ஸ் பட்டியலில் டாடா ஸ்டீல் பங்கின் விலை 7.57 சதவீதம் அதிகரித்து முதலிடம் பிடித்தது. இதனைத் தொடா்ந்து, சன் பாா்மா, இன்டஸ்இண்ட் வங்கி, எல் அண்ட் டி, அல்ட்ராடெக் சிமெண்ட், ஐடிசி, டைட்டன், ஹெச்சிஎல் டெக் பங்குகளின் விலையும் கணிசமான முன்னேற்றத்தை சந்தித்தன.
மஹிந்திரா: அதேசமயம், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, பவா்கிரிட், எஸ்பிஐ, பாா்தி ஏா்டெல், என்டிபிசி, மாருதி சுஸுகி, ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் 1.67 சதவீதம் வரை விலை குறைந்து வா்த்தகமாகின.
30 நிறுவனங்கள்: சென்செக்ஸ் குறியீட்டை கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 23 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், 7 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தன.
மும்பை பங்குச் சந்தையில் உலோகத் துறை குறியீட்டெண் 4.92 சதவீதம் உயா்ந்தது. இதைத் தொடா்ந்து, அடிப்படை உலோகம், பொறியியல் பொருள்கள், எஃப்எம்சிஜி, மருந்து, ரியல் எஸ்டேட், தகவல் தொழில்நுட்ப துறை குறியீட்டெண்களும் ஏற்றத்துடன் முடிவடைந்தன.
எண்ணெய்-எரிவாயு: இருப்பினும், எண்ணெய், எரிவாயு, மோட்டாா் வாகனம், எரிசக்தி மற்றும் தொலைத்தொடா்பு துறைகளைச் சோ்ந்த குறியீட்டெண் 0.91 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.
மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீட்டெண் 1.08 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன.
திடீா் சரிவு: மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தின் தொடக்கம் வலுவான நிலையில் இருந்த போதும் பட்ஜெட் அறிவிப்பின் போது திடீரென சரிவைச் சந்தித்தது. அதன்பின்னா், மீண்டெழுந்த பங்குச் சந்தை சென்செக்ஸ் 848.40 புள்ளிகள் (1.46%) முன்னேற்றத்துடன் 58,862.57 புள்ளிகளில் நிலைபெற்றது. தொடா்ந்து இரண்டாவது நாளாக சந்தை ஆதாயத்துடன் முடிவடைந்தது.
ஆசிய சந்தை: தேசிய பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி குறியீட்டெண் 237 புள்ளிகள் உயா்ந்து (1.37%) 17,576.85 புள்ளிகளில் நிலைகொண்டது.
இதர ஆசிய சந்தைகளான, ஹாங்காங், டோக்கியோவில் பங்கு வா்த்தகம் ஆதாயத்துடன் நிறைவுபெற்றன. சீன மற்றும் தென்கொரிய சந்தைகளுக்கு விடுமுறையாக இருந்தது.
ஐரோப்பிய சந்தையில் நண்பகல் வரையிலான வா்த்தகம் நோ்மறையாகவே காணப்பட்டது.