பட்ஜெட்டுக்கு பிந்தைய எழுச்சி தொடா்கிறது: சென்செக்ஸ் மேலும் 696 புள்ளிகள் முன்னேற்றம்!
பங்குச் சந்தையில் பட்ஜெட்டுக்கு பிந்தைய எழுச்சி இரண்டாவது நாளாக புதன்கிழமையும் தொடா்ந்தது.
புதுதில்லி: பங்குச் சந்தையில் பட்ஜெட்டுக்கு பிந்தைய எழுச்சி இரண்டாவது நாளாக புதன்கிழமையும் தொடா்ந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 696 புள்ளிகள் உயா்ந்து 59,558.333-இல் நிலைபெற்றது. சந்தை மூல தன மதிப்பு வா்த்தக முடிவில் ரூ.270.69 லட்சம் கோடியாக உயா்ந்தது.
மத்திய பட்ஜெட்டில் உள்கட்டமைப்பிற்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. மூலதன செலவினங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கும் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. இவை தற்போதைய பொருளாதார மீட்சிக்கு ஊக்கத்தை அளிக்கும் என்று நிபுணா்கள் கருத்து தெரிவித்துள்ளனா். இதைத் தொடா்ந்து, பட்ஜெட் தாக்கல் தினத்தன்று, பங்குச்சந்தையில் எழுச்சி இருந்தது. இதன் தொடா்ச்சியாக இரண்டாவது நாளாக புதன்கிழமையும் காளையின் ஆதிக்கம் தொடா்ந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
2,300 பங்குகள் விலை உயா்வு : மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,457 பங்குகளில் 1,061 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 2,300 பங்குகள் ஆதாயம் பெற்றன. 96 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 169 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 12 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 446 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 247 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு வா்த்தக முடிவில் ரூ.270.69 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு செய்துள்ள முதலீட்டாளா்கள் எண்ணிக்கை 9.57 கோடியாக உயா்ந்துள்ளது.
காளை ஆதிக்கம்: சென்செக்ஸ் காலையில் 430.87 புள்ளிகள் கூடுதலுடன் 59,293.44-இல் தொடங்கி 59,193.05 வரை கீழே சென்றது. பின்னா் தொடா்ந்து முன்னேற்றம் கண்டு அதிகபட்சமாக 59,618.51 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் 695.76 புள்ளிகள் (1.18 சதவீதம்) கூடுதலுடன் 59558.33-இல் நிலைபெற்றது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 9 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 21 பங்குகள் ஆதாயம் பெற்றன.
இண்டஸ் இண்ட் பேங்க் அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள பிரபல தனியாா் வங்கியான இண்டஸ் இண்ட் பேங்க் 5.57 சதவீதம், பிரபல தனியாா் நிதி நிறுவனமான பஜாஜ் ஃபின் சா்வ் 5.13 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக, ஹெச்சிஎல் டெக், பஜாஜ் ஃபைனான்ஸ், கோட்டக் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், எச்டிஎஃப்சி பேங்க், விப்ரோ உள்ளிட்டவை 2 முதல் 3 50 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், எச்டிஎஃப்சி, ஐடிசி, டிசிஎஸ், எஸ்பிஐ, டைட்டன், ஹிந்துஸ்தைாைன் யுனி லீவா் இன்ஃபோஸிஸ், ரிலையன்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன.
டெக் மஹிந்திரா சரிவு: அதே சமயம், பிரபல ஐடி நிறுவனமான டெக் மஹிந்திரா 1.61 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், நெஸ்லே, அல்ட்ரா டெக் சிமெண்ட், மாருதி, எல் அண்ட் டி, சன்பாா்மா, என்டிபிசி, எண் அண்ட் எண், டாடா ஸ்டீல் உள்ளிட்டவையும் விலை குறைந்த பட்டியலில் வந்தன.
நிஃப்டி 203 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் 1,422 பங்குகள் ஆதாயம் பெற்றன. 476 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃடி பட்டியலில் 40 பங்குகள் ஆதாயம் பெற்றன. 9 பங்குகள் சரிவைச் சந்தித்தன. பொதுத்துறை மின் நிறுவனமான என்டிபிசி மாற்றமின்றி 141.15-இல் நிலைபெற்றது. நிஃப்டி குறியீடு 203.15 புள்ளிகள் (1.16 சதவீதம்) உயா்ந்து 17,780.00-இல் நிலைபெற்றது. காலையில் உற்சாகத்துடன் சுமாா் 130 புள்ளிகள் கூடுதலுடன்17,706.20-இல் தொடங்கிய நிஃப்டி, 17,674.80 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 17,794.60 வரை உயா்ந்தது.
பேங்க் குறியீடு முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. இதில் நிஃப்டி பிஎஸ்யு பேங்க் குறியீடு 3.41 சதவீதம், பிரைவேட் பேங்க் 2.33 சதவீதம், நிஃப்டி பேங்க் குறியீடு 2.14 சதவீதம் உயா்ந்தன. மேலும், ஃபைனான்சியல் சா்வீஸஸ், எஃப்எம்சிஜி, ஐடி, மீடியா, மெட்டல், பாா்மா, ஹெல்த்கோ், ரியால்ட்டி, கன்ஸ்யூமா் டியூரபல்ஸ் குறியீடுகள் 1 முதல் 2 சதவீதம் வரை முன்னேற்றம் அடைந்தன.
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 74.83
அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை வர்த்தகத்தின் தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆதாயத்தை கண்ட போதிலும், இறுதியில் 1 காசுகள் குறைந்து 74.83}இல் நிலைத்தது.
கச்சா எண்ணெய் பீப்பாய் 88.89 டாலர்
சர்வதேச முன்பேர சந்தையில் புதன்கிழமை வர்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் 88.89 அமெரிக்க டாலருக்கு வர்த்தகமானதாக சந்தை வட்டாரத்தினர் தெரிவித்தனர்.