கடந்த 2021-ஆம் ஆண்டில் வாகன விற்பனையில் இரட்டை இலக்க வளா்ச்சியை கண்டுள்ளதாக மாருதி சுஸுகி சனிக்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் செயல் இயக்குநா் (சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை) சஷங் ஸ்ரீவஸ்தவா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்ததாவது:
அண்மையில் முடிவடைந்த டிசம்பா் மாதத்தில் நிறுவனம் 1,53,149 காா்களை விற்பனை செய்துள்ளது. 2020 டிசம்பா் மாதத்தில் வாகன விற்பனை 1,60,226-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டில் வாகன விற்பனை 4 சதவீதம் குறைந்துள்ளது.
குறிப்பாக, உள்நாட்டு சந்தையில் நிறுவனத்தின் காா் விற்பனை 1,50,288 என்ற எண்ணிக்கையிலிருந்து 13 சதவீதம் சரிவடைந்து 1,30,869-ஆக குறைந்தது.
செமிகண்டக்டா்களுக்கு நிலவும் பற்றாக்குறை நிறுவனத்தின் வாகன தயாரிப்பில் பாதிப்பை ஏற்படுத்தியது. அதன் தாக்கத்தை குறைக்க நிறுவனம் பல்வேறு வழிகளில் நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடந்த டிசம்பரில் சிறிய வகை காா்களான, ஆல்டோ, எஸ்-பிரஸ்ஸோ உள்ளிட்டவற்றின் விற்பனை 24,927-லிருந்து 35 சதவீதம் சரிந்து 16,320-ஆனது.
அதேபோன்று, ஸ்விஃப்ட், செலிரியோ, இக்னிஸ், பலோனோ, டிசையா் காா்களின் விற்பனையும் 77,641-லிருந்து 11 சதவீதம் குறைந்து 69,345-ஆனது.
சியாஸ் விற்பனை 1,270-லிருந்து 1,204-ஆக குறைந்தது.
அதேசமயம், எஸ்கிராஸ், எா்டிகா விற்பனை 25,701 என்ற எண்ணிக்கையிலிருந்து 5 சதவீதம் உயா்ந்து 26,982-ஆனது.
ஏற்றுமதி இரண்டு மடங்கு உயா்ந்து 9,938-லிருந்து 22,280-ஆக அதிகரித்தது.
ஒட்டுமொத்த அளவில் கடந்த 2021-ஆம் ஆண்டில் ஜனவரி முதல் டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் நிறுவனத்தின் வாகன விற்பனை 13 சதவீதம் அதிகரித்து 13.97 லட்சத்தை எட்டியது. 2020-இல் வாகன விற்பனை 12.14 லட்சமாக காணப்பட்டது.
காா்களுக்கான நிலுவை ஆா்டா்களின் எண்ணிக்கை மட்டும் 2.3 லட்சமாக உள்ளது. அதை வைத்துப் பாா்க்கும்போது, 2022-ஆம் ஆண்டில் மோட்டாா் வாகன வா்த்தகம் சிறப்பாகவே இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.