முகப்பு
வணிகம்

3-ஆவது நாளாக காளை ஆதிக்கம்: சென்செக்ஸ் 221 புள்ளிகள் உயர்வு

பங்குச் சந்தையில் மூன்றாவது நாளாக காளையின் ஆதிக்கம் தொடர்ந்தது. ஏற்றம், இறக்கம் அதிகரித்திருந்த நிலையில், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ்

Updated On : 22 ஜூலை, 2025 at 9:54 AM
பகிர்:

பங்குச் சந்தையில் மூன்றாவது நாளாக காளையின் ஆதிக்கம் தொடர்ந்தது. ஏற்றம், இறக்கம் அதிகரித்திருந்த நிலையில், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 221 புள்ளிகள் உயர்ந்து 60,616-இல் நிலைபெற்றது.
 முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களின் 3-ஆவது காலாண்டு முடிவுகள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. வங்கிகள், உலோகம், தொலைத்தொடர்பு துறை நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளையொட்டி தற்போது சந்தை ஏற்றம் பெற்றுள்ளது.
 இருப்பினும், சீனாவில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதைக் கண்டு முதலீட்டாளர்கள் எச்சரிக்கை உணர்வுடன் இருந்ததால், பங்குச் சந்தையில் பங்குகள் விற்பனை அதிகரித்தன. அதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையில் தொடக்கத்தில் உணரப்பட்டாலும், அதன் பிறகு காளையின் ஆதிக்கம் வலுப்பெற்றது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 குறிப்பாக ஐடி, நிதித் துறை பங்குகளுக்கு கிடைத்த வரவேற்பால் சந்தை ஏற்றம் பெற்றது என வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
 சந்தை மதிப்பு ரூ.52 ஆயிரம் கோடி உயர்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,513 நிறுவனப் பங்குகளில் 1,513 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 1,933 பங்குகள் ஆதாயம் பெற்றன. 67 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 615 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 7 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 773 நிறுவனப் பங்குகள் வெகுவாக உயர்ந்து உயர்ந்தபட்ச உறை நிலையையும், 187 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன.
 சந்தை மூலதன மதிப்பு மேலும் ரூ.52 ஆயிரம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.275.21 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்ற முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 9.31 கோடியாக உயர்ந்துள்ளது.
 3-ஆவது நாளாக உற்சாகம்: காலையில் சென்செக்ஸ் 52.93 புள்ளிகள் குறைந்து 60,342.70-இல் தொடங்கி, 60,281.52 வரை கீழே சென்றது.
 பின்னர், அதிகபட்சமாக 60,689.25 வரை உயர்ந்த சென்செக்ஸ், இறுதியில் 221.26புள்ளிகள் (0.37 சதவீதம்) உயர்ந்து 60,616.89-இல் நிலைபெற்றது. 30 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் 14 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 16 பங்குகள்ஆதாயம் பெற்றன. சென்செக்ஸ் தொடர்ந்து 3-ஆவது வர்த்தக நாளாக முன்னேற்றம் கண்டது.
 ஹெச்சிஎல் டெக் அபாரம்:
 முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் டெக் 4.30 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, எச்டிஎஃப்சி, டெக் மஹிந்திரா, டிசிஎஸ், ரிலையன்ஸ், சன்பார்மா, எஸ்பிஐ, எச்டிஎஃப்சி பேங்க் உள்ளிட்டவை 0.50 முதல் 2 சதவீதம் வரை உயர்ந்தன. இன்ஃபோசிஸ், மாருதி சுஸýகி, ஆக்ஸிஸ் பேங்க் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன.
 டாடா ஸ்டீல் சரிவு: அதே சமயம், பிரபல உருக்கு உற்பத்தி நிறுவனமான டாடா ஸ்டீல் 3.32 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், பஜாஜ் ஃபைனான்ஸ், ஐடிசி, ஏஷியன் பெயிண்ட், கோட்டக் பேங்க், டாக்டர் ரெட்டீஸ் லேப், இன்டஸ்இண்ட் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ் உள்ளிட்டவையும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.
 நிஃப்டி 52 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் 904 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,000 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 25 பங்குகள் ஆதாயம் பெற்றன. 24 பங்குகள் சரிவைச் சந்தித்தன. நிஃப்டி குறியீடு 52.45 புள்ளிகள் (0.29 சதவீதம்) உயர்ந்து 18,055.75- இல் நிலைபெற்றது. காலையில் பலவீனத்துடன் 17,999.75-இல் தொடங்கி 17,964.40 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 18,081.25 வரை உயர்ந்தது.

மெட்டல் குறியீடு சரிவு: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி மெட்டல் குறியீடு 1.90 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், ஆட்டோ, மீடியா, எஃப்எம்சிஜி, பார்மா, கன்ஸ்யூமர் டியூரபல்ஸ், பிஎஸ்யு பேங்க் ஆகியவையும் சிறிதளவு குறைந்தன. அதேசமயம், ஐடி குறியீடு 1.03 சதவீதம் உயர்ந்தது. நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சர்வீஸஸ், ரியால்ட்டி, ஆயில் அண்ட் காஸ் குறியீடுகளும் சிறிதளவு உயர்ந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.