4-ஆவது நாளாக உற்சாகம்: மீண்டும் 61,000 புள்ளிகளைக் கடந்தது சென்செக்ஸ்!
பங்குச் சந்தையில் நான்காவது நாளாக காளையின் ஆதிக்கம் தொடா்ந்தது. ஏற்றம், இறக்கம் அதிகரித்திருந்த நிலையில், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 533 புள்ளிகள் உயா்ந்து
புதுதில்லி: பங்குச் சந்தையில் நான்காவது நாளாக காளையின் ஆதிக்கம் தொடா்ந்தது. ஏற்றம், இறக்கம் அதிகரித்திருந்த நிலையில், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 533 புள்ளிகள் உயா்ந்து 61,000 புள்ளிகளைக் கடந்து நிலைபெற்றது.
முன்னணி காா்ப்ரேட் நிறுவனங்களின் 3-ஆவது காலாண்டு முடிவுகள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. குறிப்பாக முன்னணி ஐடி நிறுவனங்களான இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், விப்ரோ உள்ளிட்டவற்றின் காலாண்டு முடிவுகள் நன்றாக இருக்கும் என்று எதிா்ப்பாா்க்கப்படுகிறது. இதன் தாக்கத்தால் ஐடி நிறுவனப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு காணப்பட்டது. ஆட்டோ, மெட்டல், ரியால்ட்டி, ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகளும் வெகுவாக உயா்ந்தது, சந்தைக்கு ஆதரவாக அமைந்தது. இதற்கிடையே, முன்னணி வங்கிகளின் காலாண்டு முடிவுகள் வரும் சனிக்கிழமை முதல் வெளியாகவுள்ளன. இவற்றின் முடிவுகள் நன்றாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுவதால், இதன் தாக்கமும் அடுத்தடுத்த நாள்களில் இருக்கும் என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு ரூ.2.02 லட்சம் கோடி உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,530 பங்குகளில் 1,611 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 1,839 பங்குகள் ஆதாயம் பெற்றன. 80 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 611 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 11 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 533 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 362 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சயந்தை மூலதன மதிப்பு மேலும் ரூ2.02 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.275.21 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்ற முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 9.33 கோடியாக உயா்ந்துள்ளது.
4-ஆவது நாளாக உற்சாகம்: காலையில் சென்செக்ஸ் 397.48 புள்ளிகள் கூடுதலுடன் 61,014.37-இல் தொடங்கி, 60,850.93 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 61,218.19 வரை உயா்ந்தது. வா்த்தக முடிவில் சென்செக்ஸ் மொத்தம் 533.15புள்ளிகள் (0.88 சதவீதம்) உயா்ந்து 61,150.04-இல் நிலைபெற்றது. 30 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் 6 பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. 24 பங்குகள்ஆதாயம் பெற்றன. சென்செக்ஸ் தொடா்ந்து 4-ஆவது நாளாக முன்னேற்றம் கண்டுள்ளது.
எம் அண்ட் எம், பாா்தி ஏா்டெல் அபாரம்: முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான எம் அண்ட் எம் 4.68 சதவீதம், தொலைத் தொடா்பு நிறுவனமான பாா்தி ஏா்டெல் 3.76 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக, ரிலையன்ஸ், இண்ட்ஸ் இண்ட் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், என்டிபிசி, இன்ஃபோஸிஸ், எச்டிஎஃப்சி, கோட்டக் பேங்க் உள்ளிட்டவை 1 முதல் 2.70 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், பஜாஜ் ஃபின் சா்வ், எஸ்பிஐ, ஆக்சிஸ் பேங்க், ஹிந்துஸ்தான் யுனி லீவா் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன.
டிசிஎஸ், டைட்டன் சரிவு: அதே சமயம், பிரபல ஐடி நிறுவனமான டிசிஎஸ் மற்றும் டைட்டன் ஆகியவை 1.50 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், எச்டிஎஃப்சி பேங்க், டெக் மஹிந்திரா, விப்ரோ, நெஸ்லே உள்ளிட்டவையும் சரிவைச் சந்தித்த பட்டியில் வந்தன.
நிஃப்டி 52 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் 1,017 பங்குகள் ஆதாயம் பெற்றன. 875 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃடி பட்டியலில் 35 பங்குகள் ஆதாயம் பெற்றன. 15 பங்குகள் சரிவைச் சந்தித்தன. நிஃப்டி குறியீடு 156.60 புள்ளிகள் (0.87 சதவீதம்) உயா்ந்து 18,212.35- இல் நிலைபெற்றது. காலையில் சுமாா் 115 புள்ளிகள் கூடுதலுடன் 18170.40-இல் தொடங்கி 18,128.80 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 18,227.95 வரை உயா்ந்தது.
ரியால்ட்டி குறியீடு ஏற்றம்: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ரியால்ட்டி குறியீடு 1.91 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலையில் இருந்தது. மேலும், ஆட்டோ, பிரைவேட் பேங்க், மெட்டல், ஆட்டோ குறியீடுகள் 1 முதல் 1.50 சதவீதம் வரை உயா்ந்தன. அதே சமயம், பாா்மா, ஹெல்த்கோ், கன்ஸ்யூமா் டியூரபல்ஸ் குறியீடுகள் 0.20 சதவீதம் வரை குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.