முகப்பு
வணிகம்

4-ஆவது நாளாக எழுச்சி: 630 புள்ளிகள் முன்னேறியது சென்செக்ஸ்

இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச் சந்தை எழுச்சியுடன் தொடங்கி நேர்மறையாக முடிந்தது. மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 630 புள்ளிகள் உயர்ந்தது

Updated On : 22 ஜூலை, 2025 at 9:56 AM
பகிர்:

இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச் சந்தை எழுச்சியுடன் தொடங்கி நேர்மறையாக முடிந்தது. மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 630 புள்ளிகள் உயர்ந்தது. ஐடி, ஆயில் நிறுவனப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால், பங்குச் சந்தை தொடர்ந்து நான்காவது நாளாக ஏற்றம் கண்டது.
 சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இருந்ததையடுத்து, அதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. கடந்த இரண்டு நாள்களாக நல்ல செய்திகள் வந்த வண்ணம் இருப்பதும் சந்தை ஏறுமுகம் பெறுவதற்கு உதவியாக இருந்தது. கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய் நன்றாக இருப்பதால் அமெரிக்க சந்தைகள் ஏற்றம் பெற்றுள்ளன. அதன் சாதகமான தாக்கம் இந்திய சந்தைகளிலும் தென்பட்டு வருகிறது.
 மூலதனச் சந்தையில் புதன்கிழமை வர்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளர்கள் நிகர அளவில் ரூ.230.22 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்ததாக புள்ளி விவரங்கள் தெரிவித்தன.
 ஆயில் நிறுவனங்களுக்கு ஆதாய வரியை குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது ரிலையன்ஸ் உள்ளிட்ட சில ஆயில் நிறுவனப் பங்குகளுக்கு சாதகமாக அமைந்தது. மேலும், கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதும் சந்தைக்கு சாதகமாக அமைந்தது என்று தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 1,928 பங்குகள் விலை உயர்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,489 நிறுவனப் பங்குகளில் 1,428 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும், 1,928 பங்குகள் ஆதாயப் பட்டியலும் இருந்தன. 133 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 115 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 22 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.1.58 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.258.13 லட்சம் கோடியாக இருந்தது.
 பதிவு செய்துள்ள முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 11 கோடியைத் தாண்டியது.
 1.15% உயர்ந்த சென்செக்ஸ்: காலையில் 718.50 புள்ளிகள் கூடுதலுடன் 55,486.12-இல் தொடங்கிய சென்செக்ஸ், குறைந்தபட்சமாக 55,298.23 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 55,630.26 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 629.91 புள்ளிகள் (1.15 சதவீதம்) உயர்ந்து 55,397.53-இல் நிலைபெற்றது. சென்செக்ஸ் தொடர்ந்து நான்காவது நாளாக ஏற்றம் பெற்றுள்ளது.
 டெக் மஹிந்திரா அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 8 பங்குகள் மட்டுமே வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. ஏனைய 22 பங்குகளும் ஆதாயப் பட்டியலில் இடம்பெற்றன. இதில், பிரபல ஐடி நிறுவனமான டெக் மஹிந்திரா 3.84 சதவீதம் உயர்ந்து முதலிடத்தில் இருந்தது. இதற்கு அடுத்ததாக ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ், ரிலையன்ஸ், எஸ்பிஐ, இன்ஃபோசிஸ் உள்ளிட்டவை 2 முதல் 3 சதவீதம் வரை உயர்ந்தன.
 விப்ரோ, ஹிந்துஸ்தான் யுனிலீவர், எச்டிஎஃப்சி பேங்க், டைட்டன், ஐடிசி, நெஸ்லே, இன்டஸ்இண்ட் பேங்க் ஆகியவை 1 முதல் 1.6 சதவீதம் வரை உயர்ந்தன. மேலும், டாடா ஸ்டீல், மாருதி சுஸுகி, ஐசிஐசிஐ பேங்க்,
 ஆக்ஸிஸ் பேங்க் உள்ளிட்டவையும் அதிக விலைக்கு கைமாறின.
 எம் அண்ட் எம் சரிவு: அதே சமயம், எம் அண்ட் எம் 1.81 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், சன்பார்மா, கோட்டக் பேங்க், பார்தி ஏர்டெல், பவர் கிரிட், பஜாஜ் ஃபின்சர்வ், ஏஷியன் பெயிண்ட்ஸ், என்டிபிசி உள்ளிட்டவையும் விலைகுறைந்த பட்டியலில் வந்தன.
 நிஃப்டி 180 புள்ளிகள் உயர்வு: தேசிய பங்குச் சந்தையில் 1,119 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 826 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இடம்பிடித்தன.
 "நிஃப்டி 50' பட்டியலில் 34 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 16 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் வந்தன. வர்த்தக முடிவில் நிஃப்டி 180.30 புள்ளிகள் (1.15 சதவீதம்) உயர்ந்து 16,520.85-இல் நிலைபெற்றது.
 ரூ.19.50 ஈவுத்தொகை அறிவித்த வேதாந்தா
 சுரங்கத் துறையில் முன்னிலையில் இருந்து வரும் வேதாந்தா நிறுவனம் நிகழ் நிதியாண்டுக்கு ரூ.1 முகமதிப்பைக் கொண்ட பங்கு ஒன்றுக்கு இரண்டாவது இடைக்கால ஈவுத்தொகையாக ரூ.19.50 வழங்குவதாக அறிவித்துள்ளது. இதற்கான ஒப்புதலை அந்த நிறுவனத்தின் இயக்குநர் குழு வழங்கியுள்ளது. மொத்தம் ரூ.7,250 கோடி மதிப்புக்கு இந்த ஈவுத்தொகையை வழங்கவுள்ளதாக வேதாந்தா தெரிவித்துள்ளது. இதற்கான பதிவு தேதி ஜூலை 27-ஆகும்.
 

முழு கட்டுரையைப் படிக்க →