முகப்பு
வணிகம்

ஆரம்ப ஆதாயத்தை இழந்தது சென்செக்ஸ், நிஃப்டி: இரண்டாவது நாளாக சரிவு

ரஷியா மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் மோதல்களுக்கு மத்தியில், கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால், பங்குச் சந்தை வியாழனன்று ஆரம்ப ஆதாயங்களை இழந்து இரண்டாவது 

Updated On : 22 ஜூலை, 2025 at 9:54 AM
பகிர்:

புது தில்லி: ரஷியா மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் மோதல்களுக்கு மத்தியில், கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால், பங்குச் சந்தை 
வியாழனன்று ஆரம்ப ஆதாயங்களை இழந்து இரண்டாவது நாளாக சரிவுடன் முடிந்தது. மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகியவை தலா 0.65 சதவீதம் வீழ்ச்சியடைந்தன.

உலக எண்ணெய் உற்பத்தியில் சுமார் 10 சதவீதத்தைக் கொண்டுள்ள ரஷியா மீதான பொருளாதாரத் தடைகளை மேற்கத்திய நாடுகள் கடுமையாக்கியதால்,  
விநியோக சங்கிலியில் இடையூறுகள் ஏற்படும் என்ற அச்சத்தால்,  கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 120 அமெரிக்க டாலரை நெருங்குகிறது. 

மேலும், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் அந்நிய நிறுவன முதலீடு தொடர்ந்து வெளியேற்றம் ஆகியவையும் முதலீட்டாளர்களின் நடவடிக்கையை பாதித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.  இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் புதன்கிழமை நிகர அடிப்படையில் ரூ.4,338.94 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளதாக சந்தை புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

1,347 நிறுவனப் பங்குகள் விலை வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,440 நிறுவனப்  பங்குகளில் 1,981  பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,347 நிறுவனப் பங்குகளின் விலை வீழ்ச்சியடைந்தன. 112  பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 85 பங்குகள் புதிய 52 வார  அதிகபட்ச விலையையும், 32  பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.47 ஆயிரம் கோடி குறைந்து  வர்த்தக முடிவில் ரூ.251.05 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு செய்துள்ள முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 9.88 கோடியாக உயர்ந்துள்ளது.

778 புள்ளிகள் சரிவு:  

சென்செக்ஸ் காலையில் 452.10 புள்ளிகள் கூடுதலுடன் 55,921.44-இல் தொடங்கி, அதிகபட்சமாக 55,996.62 வரை உயர்ந்தது. பின்னர், பங்குகள் விற்பனை அதிகரித்ததால், பிற்பகலில் 54,931.48 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 366.22 புள்ளிகள் (0.66 சதவீதம்) குறைந்து 55,102.68-இல் நிலைபெற்றது.  இதனால், சென்செக்ஸ் காலையில் பெற்ற ஆதாயம் முழுவதையும் பிற்பகலில் இழந்தது.

அல்ட்ரா டெக் சிமெண்ட் கடும் சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 11 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 19 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. இதில், பிரபல சிமெண்ட் உற்பத்தி நிறுவனமான அல்ட்ரா டெக் சிமெண்ட் 6.47 சதவீதம், ஏஷியன் பெயிண்ட் 5.20 சதவீதம், டாக்டர் ரெட்டீஸ் லேப் 3.49 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக, மாருதி சுஸூகி,  ஹெச்யுஎல், ஐசிஐசிஐ பேங்க், பஜாஜ் ஃபின் சர்வ், நெஸ்லே உள்ளிட்டவை 2 முதல் 2.80 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மேலும்,  எல் அண்ட் டி, எம் அண்ட் எம், ஆக்ஸிஸ் பேங்க், கோட்டக் பேங்க், ரிலையன்ஸ், எஸ்பிஐ, பஜாஜ் ஃபின்சர்வ், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள் ஆகியவையும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

பவர் கிரிட் முன்னேற்றம்:

அதே சமயம்,  மின் துறை நிறுவனமான பவர் கிரிட் 3.34 சதவீதம், விப்ரோ 2.58 சதவீதம், டெக் மஹிந்திரா 2.43 சதவீதம்  உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், ஹெச்சிஎல் டெக், ஐடிசி, டாடா ஸ்டீல், இன்ஃபோசிஸ் உள்ளிட்டவை 1 முதல் 2 சதவீதம் வரை உயர்ந்தன.

நிஃப்டி 108 புள்ளிகள் வீழ்ச்சி:

தேசிய பங்குச் சந்தையில் 1,059 நிறுவனங்களின் பங்குகள் ஆதாயம் பெற்றன. 830 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய  நிஃப்டி குறியீடு 107.90 புள்ளிகள் (0.65 சதவீதம்)  குறைந்து 16,498.05-இல் நிலைபெற்றது.  காலையில் சுமார் 113 புள்ளிகள் கூடுதலுடன் 16,723.20 -இல் தொடங்கிய  நிஃப்டி, அதிகபட்சமாக 16,768.95 வரை உயர்ந்தது.  பின்னர், 16,442.95 வரை கீழே சென்றது.  நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல்தரப் பங்குகளில் 18 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 32 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.

ஐடி, ஆயில் அண்ட் காஸ், மெட்டல் குறியீடு முன்னேற்றம்:

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஐடி, மெட்டல், ஆயில் அண்ட் காஸ் குறியீடுகள் 1 முதல் 1.50 சதவீதம் வரை உயர்ந்தன. மீடியா குறியீடு 0.39 சதவீதம் உயர்ந்தது.  மற்ற அனைத்து முக்கியக் குறியீடுகளும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன. இதில்,  நிஃப்டி ஆட்டோ குறியீடு 2.28 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. 

மேலும், நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சர்வீஸஸ், எஃப்எம்சிஜி, பிரைவேட் பேங்க், கன்ஸ்யூமர் டியூரபல்ஸ் குறியீடுகளும் 1 முதல் 1.30 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. 

கச்சா எண்ணெய் பீப்பாய் 115.85 டாலர்

சர்வதேச சந்தையில் முன்பேர வர்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை மேலும் உயர்ந்து பீப்பாய் 115.85 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 14 காசு சரிவு

கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதன் எதிரொலியாக அந்நியச் செலாவணி சந்தையில் வியாழக்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மேலும் 14 காசு குறைந்து 75.94-இல் நிலைத்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.