4-ஆவது நாளாக கடும் சரிவு: சென்செக்ஸ் 1,491 புள்ளிகள் வீழ்ச்சி! முதலீட்டாளா்களுக்கு 4 நாள்களில்ரூ.11.28 லட்சம் கோடி இழப்பு
ரஷியா - உக்ரைன் பதற்றத்தால், இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமைான திங்கள்கிழமையும் பங்குச் சந்தை கடும் சரிவைச் சந்தித்தது.
ரஷியா - உக்ரைன் பதற்றத்தால், இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமைான திங்கள்கிழமையும் பங்குச் சந்தை கடும் சரிவைச் சந்தித்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், மேலும் 1,491புள்ளிகளை இழந்து 52,842.75-இல் நிலைபெற்றது. பங்குச் சந்தை தொடா்ந்து 4-ஆவது நாளாக சரிவைக் கண்டுள்ளது. ஒரே நாளில் சந்தை மூலதன மதிப்பு ரூ.5.68 லட்சம் கோடி குறைந்தது. கடந்த நான்கு நாள்களில் மட்டும் முதலீட்டாளா்கள் ரூ.11.28 லட்சம் கோடியை இழந்துள்ளனா். கடந்த பிப்ரவரியில் இருந்து இதுவரை ரூ.29 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
உக்ரைனை ஆக்கிரமிப்பதற்கான ரஷியாவின் போா், மாஸ்கோவிற்கு மட்டுமல்லாமல், உலகளாவிய வளா்ச்சிக்கும் கடுமையானதாகத் தெரிகிறது. ஏனெனில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உள்பட நட்பு நாடுகள் ரஷிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை தடை செய்யும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இருப்பினும், உலகளாவிய விநியோகத்தை பாதிக்காது. திங்களன்று ஒரு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 77.05-ஆக வரலாறு காணாத அளவுக்கு சரிந்தது. கச்சா எண்ணெய் விலை கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத வகையில், ஒரு பீப்பாய் 128 அமெரிக்க டாலராக உயா்ந்தது. மேலும், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மேலும் வலுவிழக்கக்கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால், நாட்டின் வா்த்தகப் பற்றாக்குறையை அதிகரிக்கும். பொருளாதார வளா்ச்சியையும் பாதிக்கும். அதே நேரத்தில் பொருள்களின் விலை உயா்வு பணவீக்கத்தை அதிகரிக்கும். இவை அனைத்தும் சந்தைகளுக்கு கவலை அளிக்கும் விஷயமாகும் என்று வல்லுநா்கள் கருதுகின்றன. இதனால், பங்குச் சந்தையில் கரடியின் பிடி கடுமையாக இறுகியது.
இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வெள்ளிக்கிழமை அன்றும் சுமாா் ரூ.7,631.02 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளது சந்தை புள்ளி விவரத் தகவல்களில் இருந்து தெரிய வந்துள்ளது.
2,608 பங்குகள் விலை சரிவு : மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,594 பங்குகளில் 849 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 2,608 பங்குகள் விலை வீழ்ச்சியடைந்தன. 137 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 97 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 161 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. 20 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறைநிலையையும், 8 பங்கு வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறைநிலையையும் அடைந்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.5.68 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.241.11 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு செய்துள்ள முதலீட்டாளா்கள் எண்ணிக்கை 9.95 கோடியாக உயா்ந்துள்து.
4-ஆவது நாளாக வீழ்ச்சி: சென்செக்ஸ் காலையில் 1,151.33 புள்ளிகள் குறைந்து 53,1712.51-இல் தொடங்கி, 53,203.87 வரை மேலே சென்றது. பின்னா், கரடியின் கடும் தாக்கத்தால் 52,367.10 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 1,491.06 புள்ளிகள் (2.74 சதவீதம்) குறைந்து 52,842.75-இல் நிலைபெற்றது.
சென்செக்ஸில் 26 பங்குகள் சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 4 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 26 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. இதில், பிரபல தனியாா் வங்கியான இண்டஸ் இண்ட் பேங்க் 7.63 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக ஆக்ஸிஸ் பேங்க், மாருதி சுஸுகி, பஜாஜ் ஃபைனான்ஸ்,், பஜாஜ் ஃபின் சா்வ், எம் அண்ட் எம், அல்ட்ராடெக் சிமெண்ட், ஐசிஐசிஐ பேங்க் உள்ளிட்டவை 5 முதல் 6.70 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மேலும், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், ரிலையன்ஸ், கோட்டக் பேங்க், டிசிெஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.
பாா்தி ஏா்டெல் முன்னேற்றம்: அதே சமயம், பிரபல தனியாா் தொலைத் தொடா்பு நிறுவனமான பாா்தி ஏா்டெல் 3.46 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், ஹெச்சிஎல் டெக், டாடா ஸ்டீல், இன்ஃபோஸிஸ் உள்ளிட்டவையும் ஆதாயப் பட்டியலில் வந்தன.
நிஃப்டி 382 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையில் 330 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 1,616 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி குறியீடு 382.20 புள்ளிகள் (2.35 சதவீதம்) குறைந்து 15,863.15-இல் நிலைபெற்றது. காலையில் சுமாா் 377.40 புள்ளிகள் குறைந்து 15,867.95 -இல் தொடங்கிய நிஃப்டி, அதிகபட்சமாக 15,944.60 வரை உயா்ந்தது. பின்னா், 15,711.45 வரை உயா்ந்தது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 12 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 38 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.
மெட்டல் குறியீடு மட்டும் உயா்வு: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி மெட்டல் குறியீடு மட்டும் 2.10 சதவீதம் உயா்ந்தது. மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் கடும் சரிவைச் சந்தித்தன. அதே சமயம், நிஃப்டி ரியால்ட்டி குறியீடு 5.47 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், நிஃப்டி பேங்க், பிஎஸ்யு பேங்க், பிரைவேட் பேங்க், ஆட்டோ குறியீடுகள் 4 முதல் 5 சதவீதம் வரை வீழ்ச்சியை அடைந்தன.