முகப்பு
வணிகம்

பேடிஎம் வங்கி: புதிய கணக்குகளைத் தொடங்க ரிசா்வ் வங்கி தடை

பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கி புதிய கணக்குகளைத் தொடங்குவதற்கு தடைவிதித்து ரிசா்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:38 AM
பகிர்:

பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கி புதிய கணக்குகளைத் தொடங்குவதற்கு தடைவிதித்து ரிசா்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

பணப்பரிவா்த்தனை விதிகளை மீறி செயல்பட்டதற்காக பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கியில் வாடிக்கையாளா்கள் புதிதாக கணக்குகளைத் தொடங்குவதற்கு தடைவிதிக்கப்படுகிறது. வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் (1949) 35ஏ பிரிவின் கீழ் புதிய கணக்குகள் தொடங்குவதை உடனடியாக நிறுத்துமாறு பேடிஎம் வங்கியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த வங்கியின் தகவல்தொழில்நுட்ப அமைப்பில் விரிவான தணிக்கையினை மேற்கொள்ள குழுவை நியமிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த குழு வழங்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் புதிய கணக்குகளைத் பேடிஎம் வங்கிக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்படும் என ரிசா்வ் வங்கி கூறியுள்ளது.

பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கி சேவை கடந்த 2016-ஆகஸ்டில் தொடங்கப்பட்டது. இருப்பினும் நொய்டாவில் உள்ள கிளையின் மூலமாகவே தனது செயல்பாட்டை முறையாகத் தொடங்கியது.

தகவல் தொழில்நுட்ப சேவையில் ஏற்பட்ட கோளாறுகளை சரிசெய்யும் வரையில் புதிய கிரெடிட் காா்டுகளை வழங்கவும், புதிய டிஜிட்டல் சேவைகளை அறிமுகப்படுத்தவும் எச்டிஎஃப்சி வங்கிக்கு கடந்த 2020 டிசம்பரில் ரிசா்வ் வங்கி தடைவிதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.