பங்குச் சந்தையில் திடீர் உற்சாகம்: சென்செக்ஸ் 1,345 புள்ளிகள் முன்னேற்றம்
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தையில் "காளை' திடீரென ஆதிக்கம் கொண்டது.
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தையில் "காளை' திடீரென ஆதிக்கம் கொண்டது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 1,345 புள்ளிகள் உயர்ந்தது. இது கடந்த 3 மாதங்களில் இல்லாத உயர்வாகும். இதனால், சந்தை மூலதன மதிப்பு ஒரே நாளில் ரூ.12.05 லட்சம் கோடி உயர்ந்து ரூ.255.55 லட்சம் கோடியாக இருந்தது.
கடந்த சில நாள்களாக தொடர்ந்து "கரடி'யின் பிடியில் இருந்து வந்த பங்குச் சந்தையில், செவ்வாய்க்கிழமை திடீரென "காளை' ஆதிக்கம் கொண்டது சந்தை பங்கேற்பாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
உலகளாவிய சந்தை குறிப்புகள் சாதகமாக இருந்த நிலையில், மார்க்கெட் லீடர் ரிலையன்ஸ் உள்பட முன்னணி நிறுவனப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் சந்தை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்தது. ஏப்ரல் மாதத்திற்கான மொத்த விலை பணவீக்கம் 15 சதவீதத்தைத் தாண்டியுள்ள நிலையில், சந்தை திடீரென ஏற்றம் பெற்றது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
வங்கி, மெட்டல், மின்துறை பங்குகளுக்கு நல்ல வரவேற்பு காணப்பட்டது. குறிப்பாக, டாடா ஸ்டீல், ரிலையன்ஸ், ஐடிசி, ஐசிஐசிஐ பேங்க், விப்ரோ, மாருதி சுஸுகி உள்ளிட்டவை வெகுவாக உயர்ந்ததே சந்தை ஏற்றத்துக்கு முக்கியக் காரணம் என வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த திங்கள்கிழமை ரூ.1,788.93 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளதாக சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2,607 நிறுவனப் பங்குகள் விலை உயர்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,462 நிறுவனப் பங்குகளில் 2,607 பங்குகள்ஆதாயம் பெற்ற பட்டியலில் இருந்தன. 737 பங்குகள் மட்டுமே வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 118 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 49 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 52 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.12.05 லட்சம் கோடி உயர்ந்து, வர்த்தக முடிவில் ரூ.255.55 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு செய்துள்ள முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 10.59 கோடியை கடந்தது.
திடீர் உற்சாகம்: காலையில் 311.35 புள்ளிகள் கூடுதலுடன் 53,285.19-இல் தொடங்கிய சென்செக்ஸ், 53,176.02 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 54,399.42 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 1,344.63 புள்ளிகள் (2.54 சதவீதம்) உயர்ந்து 54,318.47-இல் நிலைபெற்றது. இது கடந்த 3 மாதங்களில் இல்லாத உயர்வாகும்.
என்டிபிசி முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 பங்குகளும் ஆதாயம் பெற்றன. இதில் பிரபல தனியார் உருக்கு நிறுவனமான டாடா ஸ்டீல் 7.62 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, ரிலையன்ஸ், ஐடிசி, விப்ரோ,
ஐசிஐசிஐ பேங்க், மாருதி சுஸுகி, எல் அண்ட் டி, பஜாஜ் ஃபைனான்ஸ், டைட்டன் உள்ளிட்டவை 3 முதல் 4.25 சதவீதம் வரை உயர்ந்தன.
மேலும், எஸ்பிஐ, பஜாஜ் ஃபின்சர்வ், இன்ஃபோசிஸ், ஆக்ஸிஸ் பேங்க், டிசிஎஸ், பார்தி ஏர்டெல் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் ஆதாயப் பட்டியலில் இருந்தன.
நிஃப்டி 417 புள்ளிகள் உயர்வு: தேசிய பங்குச் சந்தையில் 1,690 பங்குகள் ஆதாயம் பெற்றன. 257 பங்குகள் மட்டும் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளும் ஆதாயம் பெற்றன. காலையில் 70.30 புள்ளிகள் கூடுதலுடன் 16,912.60-இல் தொடங்கிய நிஃப்டி குறியீடு, 15,900.80 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 16,284.25 வரை உயர்ந்த நிஃப்டி, இறுதியில் 417 புள்ளிகள் (2.63 சதவீதம்) கூடுதலுடன் 16,259.30-இல் நிலைபெற்றது.
அனைத்துத் துறை குறியீடுகளும் முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி மெட்டல், பேங்க், மின்துறை உள்பட அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன. இதில், மெட்டல் குறியீடு 6.86 சதவீதம், ஆயில் அண்ட் காஸ் குறியீடு 3.68 சதவீதம் உயர்ந்து பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், நிஃப்டி பேங்க், ஆட்டோ, ஃபைனான்சியல் சர்வீஸஸ், எஃப்எம்சிஜி, ஐடி, பிஎஸ்யு பேங்க், பிரைவேட் பேங்க், ரியால்ட்டி மற்றும் கன்ஸ்யூமர் டியூரபல்ஸ் குறியீடுகள் 2 முதல் 3 சதவீதம் வரை உயர்ந்தன.