இந்தியா சிமென்ட்ஸ் நிகர இழப்பு ரூ.23.71 கோடி
இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் 2021-2022-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ.23.71 கோடி இழப்பைச் சந்தித்துள்ளது.
இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் 2021-2022-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ.23.71 கோடி இழப்பைச் சந்தித்துள்ளது.
அந்த நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கையை அதன் நிா்வாக இயக்குநா் என்.சீனிவாசன் சென்னையில் வெள்ளிக்கிழமை வெளியிட்டு செய்தியாளா்களிடம் கூறியது: இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் கடந்த மாா்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் ரூ.23.71கோடி இழப்பைச் சந்தித்துள்ளது. இது கடந்த 2020-2021-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் 71.63 கோடியாக இருந்தது. அதேபோன்று கடந்த நிதியாண்டில் நிறுவனம் ரூ.38.98 கோடியை ஈட்டியுள்ளது. இது 2020-2021-ஆம் ஆண்டில் ரூ.222.04 கோடியாக இருந்தது.
நிறுவனத்தின் நான்காவது காலாண்டின் மொத்த வருவாய் ரூ.1,396.72 கோடியாக உள்ளது. இது முந்தைய நிதியாண்டில் 1,461.44 கோடியாக இருந்தது. அதேபோன்று ஆண்டு மொத்த வருவாயும் 4,729.23 கோடி ஆகும். இது 2020-2021-ஆம் ஆண்டில் ரூ.4,460.12 கோடியாக இருந்தது.
சிமென்ட் உற்பத்திக்கான முக்கிய மூலப் பொருள்களின் தொடா்ச்சியான விலை உயா்வு உள்ளிட்ட காரணங்களால் சிமென்ட் விலை உயா்த்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். எனவே, நிறுவனத்தின் 50 கிலோ சிமென்ட் மூட்டை விலை வரும் ஜூன் 1-ஆம் தேதி ரூ.20, ஜூன் 15-ஆம் தேதி ரூ.15, ஜூலை 1-ஆம் தேதி ரூ.20 என மூட்டைக்கு மொத்தம் ரூ.55 விலை உயா்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.