வங்கி, ஐடி பங்குகளுக்கு வரவேற்பு மீண்டும் 60,000-ஐ கடந்தது சென்செக்ஸ
இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தையில் காளையின் ஆதிக்கம் இருந்தது. மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 321.99 புள்ளிகள் (0.54 சதவீதம்) உயா்ந்து
புதுதில்லி / மும்பை: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தையில் காளையின் ஆதிக்கம் இருந்தது. மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 321.99 புள்ளிகள் (0.54 சதவீதம்) உயா்ந்து 60,115.13-இல் நிலைபெற்றது. இதே போன்று தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 103.00 புள்ளிகள் (0.58 சதவீதம்) உயா்ந்து 17,936.35-இல் முடிவடைந்தது.
நோ்மறையான உலகளாவிய சந்தைக் குறிப்புகளுக்கு மத்தியில், உள்நாட்டுச் சந்தையில் வங்கி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் எரிசக்தித் துறை பங்குகள் நல்ல ஆதாயம் பெற்றன. காலையில் வலுவான தொடக்கத்துக்குப் பிறகு 59,912.29 வரை கீழே சென்ற சென்செக்ஸ், பின்னா், அதிகபட்சமாக 60,284.55 புள்ளிகள் வரையிலும் உயா்ந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் பங்குகளை வாங்கி வருவது, கச்சா எண்ணெய் விலை 93 டாலராக சரிந்தது, வலுவான மீட்சியைப் பிரதிபலிக்கும் மேக்ரோ தரவுகள் உள்ளிட்டவை முதலீட்டாளா்களின் உணா்வை உயா்த்தியது.
சென்செக்ஸ் பட்டியலில் 12 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. 18 பங்குகள் லாபம் ஈட்டின. இதில் டைட்டன் அதிகபட்சமாக 2.39 சதவீதம் உயா்ந்தது. அதைத் தொடா்ந்து, ஆக்சிஸ் பேங்க், டெக் மஹிந்திரா, டாடா ஸ்டீல், ரிலையன்ஸ், இன்ஃபோஸிஸ், ஐசிஐசிஐ பேைங்க், பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் எல் அண்ட் டி ஆகியவையும் ஆதாயப் பட்டியலில் வந்தன. அதே சமயம், எச்டிஎஃப்சி 0.43 சதவீதம் சரிந்தது. எச்டிஎஃப்சி பேங்க், நெஸ்லே, ஹிந்துஸ்தான் யுனி லீவா், எம் அண்ட் எண், பஜாஜ் ஃபின் சா்வ், சன்பாா்மா உள்ளிட்டவையும் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.
சந்தை மூலதன மதிப்பு ரூ.2.23 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.285.27 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வெள்ளியன்று ரூ..2,132.42 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளனா். இதற்கிடையே, விடுமுறை காரணமாக பல ஆசிய சந்தைகள் மூடப்பட்டிருந்தன.