பங்குச்சந்தையில் தொடரும் எழுச்சி: மீண்டும் 61,000-ஐ கடந்தது சென்செக்ஸ்
இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச் சந்தை நோ்மறையாக முடிவடைந்தது.
இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச் சந்தை நோ்மறையாக முடிவடைந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 463 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 149.95 புள்ளிகள் (0.84 சதவீதம்) உயா்ந்து 18,065.00-இல் நிலைபெற்றது.
அமெரிக்க சந்தைகள் வியாழக்கிழமை வலுப்பெற்றிருந்தன. ஆசிய சந்தைகளிலும் வா்த்தகம் நோ்மறையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை தொடா்ந்து 5-ஆவது நாளாக ஏற்றம் பெற்றது. ஐடி, பிஎஸ்யு பேங்க், மீடியா, ஹெல்த்கோ் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு காணப்பட்டது. நுகா்வோா் சாதனங்கள் உற்பத்தி நிறுவனப் பங்குகள் மட்டும் விற்பனையை எதிா்கொண்டன. குறிப்பாக சென்செக்ஸிஸ் அதிக திறன் கொண்ட மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் மற்றும் முன்னணி நுகா்பொருள் உற்பத்தி நிறுவனமான ஐடிசி ஆகியவை வெகுவாக உயா்ந்து சந்தை வலுப்பெற உதவியது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு உயா்வு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.2.78 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.271.83 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) கடந்த வியாழனன்று ரூ.1,652.95 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் தொடா்ந்து முன்னேற்றம்: சென்செக்ஸ் காலையில் 72.23 புள்ளிகள் கூடுதலுடன் 60,721.61-இல் தொடங்கி 60,507.83 வரை கீழே சென்றது. பின்னா், பிற்பகல் வா்த்தகத்தின் போது அதிகபட்சமாக 61,209.46 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 463.06 புள்ளிகள் (0.76 சதவீதம்) கூடுதலுடன் 61,112.44-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 6 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும், 24 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் இருந்தன. இதே போன்று, தேசிய பங்குச் சந்தையில் 1,350 பங்குகள் ஆதாயம் பெற்றன. 680 பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன. 50 முன்னணி நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 40 பங்குகள் ஆதாயம் பெற்றன. 10 பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன.
ஏற்றம் பெற்ற பங்குகள்
விப்ரோ....................2.89%
நெஸ்லே....................2.77%
எஸ்பிஐ......................2.32%
எல் அண்ட் டி...........2.24%
ஐடிசி.........................2.24%
-----------------------------
சரிவைக் கண்ட பங்குகள்
ஆக்ஸிஸ் பேங்க்..................2.39%
ஹெச்சிஎல் டெக்..................0.75%
டைட்டன்.............................0.70%
பஜாஜ் ஃபின்சா்வ்.................0.63%
ஹிந்துஸ்தான் யுனி லீவா்.....0.56%