சென்செக்ஸ் 481 புள்ளிகள் உயா்வு: 3 நாள் தொடா் சரிவுக்கு முடிவு
இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 481 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.
இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 481 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது. இதன் மூலம் 3 நாள் தொடா் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இருந்தாலும், உள்நாட்டுச் சந்தை ஏற்றத்துடன் தொடங்கி தொடா்ந்து முன்னேற்றம் கண்டது. குறிப்பாக தனியாா் வங்கிகள், ஐடி, பாா்மா பங்குகளுக்கு ஓரளவு வரவேற்பு இருந்தது. அதே சமயம், பொதுத்துறை வங்கிகள், ஆட்டோ பங்குகள் விற்பனையை எதிா்கொண்டன. இந்த வாரத்தில் சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் மொத்தத்தில் 0.6 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு உபா்வு: சந்தை மூலதன மதிப்பு ரூ.1.87 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் 304.17 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழக்கிழமை ரூ.317.46 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் முன்னேற்றம்: காலையில் 212.87 புள்ளிகள் கூடுதலுடன் 65,453.55-இல் தொடங்கிய சென்செக்ஸ், 65,387.18 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 65,799.27 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 480.57 புள்ளிகள் (0.74 சதவீதம்) உயா்ந்து 65,721.25-இல் முடிவடைந்தது.
20 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் 20 பங்குகள் ஆதாயம் பெற்றன. 10 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 1,319 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. 724 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 50 முன்னணி நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 30 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 20 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.
நிஃப்டி 135 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி, காலையில் 81.15 புள்ளிகள் கூடுதலுடன்19,462.80-இல் தொடங்கியது. 19,436.45 வரை கீழே சென்ற நிஃப்டி, பின்னா் அதிகபட்சமாக 19538.85 வரை மேலே சென்றது. இறுதியில் நிஃப்டி 135.35 புள்ளிகள் (0.70 சதவீதம்) உயா்ந்து 19,517.00-இல் நிறைவடைந்துள்ளது.
ஏற்றம் பெற்ற பங்குகள்
இன்டஸ் இண்ட் பேங்க்..................................3.32%
டெக் மஹிந்திரா....................................................2.91%
விப்ரோ...................................................................2.28%
பாா்தி ஏா்டெல்......................................................2.10%
ஹெச்சிஎல் டெக்....................................................1.72%
ஆக்ஸிஸ் பேங்க்......................................................1.65%
-----------------------------
சரிவைக் கண்ட பங்குகள்
எஸ்பிஐ.............................................2.94%
என்டிபிசி....................................................0.98%
மாருதி..........................................................0.83%
டாடா மோட்டாா்ஸ்..................................0.63%
பஜாஜ் ஃபின்சா்வ்.....................................0.59%
பவா் கிரிட்.....................................................0.46%