வணிகம்

வங்கிப் பங்குகள் அதிகம் விற்பனை: சென்செக்ஸ் 632 புள்ளிகள் வீழ்ச்சி

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தை எதிர்மறையாக முடிந்தது.

தினமணி

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 632 புள்ளிகள் குறைந்தது. தேசிய பங்கு சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 187.05 புள்ளிகளை (1.03 சதவீதம்) இழந்து 17,914.15-இல் நிலைபெற்றது.
 உள்நாட்டுச் சந்தை எழுச்சியுடன் தொடங்கினாலும், பின்னர் "கரடி'யின் பிடியில் சிக்கியது. ஐரோப்பிய சந்தைகள் பலவீனமாக இருந்ததைத் தொடர்ந்து, அதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையில் எதிரொலித்தது. குறிப்பாக, தனியார், பொதுத்துறை வங்கிகள், நிதி நிறுவனப் பங்குகள் அதிக அளவில் விற்பனையை எதிர்கொண்டன.
 மேலும், சென்செக்ஸில் அதிகத் திறன் கொண்ட மார்க்கெட் லீடர் ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ், டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி இரட்டை நிறுவனப் பங்குகள் விலை வெகுவாகக் குறைந்ததும் சந்தை சரிவுக்கு முக்கியக் காரணம் என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 சென்செக்ஸ் சரிவு: சென்செக்ஸ் காலையில் 57.83 புள்ளிகள் கூடுதலுடன் 60,805.14-இல் தொடங்கி, 60,809.65 வரை மட்டுமே உயர்ந்தது. பின்னர், 59,938.38 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 631.83 புள்ளிகள் (1.04 சதவீதம்) குறைந்து 60,115.48-இல் முடிவடைந்தது. ஒரு கட்டத்தில் 871.27 புள்ளிகளை இழந்திருந்த சென்செக்ஸ், வர்த்தக முடிவில் சிறிது மீட்சி பெற்றது. சென்செக்ஸ் பட்டியலில் 8 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 22 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் வந்தன.
 பார்தி ஏர்டெல் கடும் சரிவு:
 பிரபல தனியார் தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் 3.23 சதவீதம், எஸ்பிஐ 2.09 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக ஹெச்டிஎஃப்சி வங்கி, அல்ட்ரா டெக் சிமென்ட், ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், ரிலையன்ஸ், என்டிபிசி, ஐடிசி, டெக் மஹிந்திரா, மாருதி, டிசிஎஸ், இன்ஃபோஸிஸ் உள்ளிட்டவை 1 முதல் 1.70 சதவீதம் வீழ்ச்சி அடைந்தன. மேலும், கோட்டக் வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகியவையும் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.
 டாடா மோட்டார்ஸ் எழுச்சி:
 அதே சமயம், பிரபல வர்த்தக வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் 6.07 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், பவர் கிரிட், டாடா ஸ்டீல், ஹிந்துஸ்தான் யுனி லீவர், இண்டஸ்இண்ட் வங்கி, விப்ரோ, எம் அண்ட் எம், பஜாஜ் ஃபின்சர்வ் உள்ளிட்டவை சிறிதளவு உயர்ந்து ஆதாயப் பட்டியலில் வந்தன.
 சந்தை மதிப்பு வீழ்ச்சி: இதற்கிடையே, சந்தை மூல தன மதிப்பு ரூ.2.18 லட்சம் கோடி குறைந்து வர்த்தக முடிவில் ரூ.280.82 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) திங்கள்கிழமை ரூ.203.13 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை திரும்பப் பெற்றுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உள்ளாட்சி அதிகாரப் பகிர்வில் திமுகவுக்கு பிரச்னை இல்லை! காங்கிரஸ் நிர்வாகி

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: மார்ச் 2-க்குள் தீர்வு என தெற்கு ரயில்வே தகவல்!

ஓடிடியில் வித் லவ் எப்போது?

தயாரிப்பாளராகும் பிரதீப் ரங்கநாதன்?

திமுக ஓர் அரசியல் இயந்திரம்; அதிமுக, தவெகவை புறக்கணிக்க முடியாது: காங்கிரஸ் எம்.பி.

SCROLL FOR NEXT